நாளை அமலாகிறது ஜி.எஸ்.டி: சினிமா டிக்கெட்டுகள் விலை எவ்வளவு உயருகிறது?

’நாடு முழுவதும் ஒரே வரி’ என்ற முழக்கத்துடன் மத்திய பா.ஜ.க. அரசு வகுத்த ஜி.எஸ்.டி. வரி வரும் இன்று நள்ளிரவு (சனிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. சினிமா டிக்கெட்டுகள் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரியால் அதன் விலையும் கணிசமான அளவில் உயர்கிறது.

சினிமா டிக்கெட்டுகள் மீது இரு பிரிவுகளில் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு விதித்தது. அதன்படி, ரூ.100 மற்றும் அதற்கு குறைவான விலையுடைய டிக்கெட்டுகளுக்கு 18% வரியும், ரூ.100-க்கும் அதிகமான விலையுடைய டிக்கெட்டுகளுக்கு 28% வரியும் விதிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு திரைப்பட தயாரிப்பளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜி.எஸ்.டி.வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது.

வரும் சனிக்கிழமை முதல் ஜி.எஸ்.டி வரி நாடு முழுவதும் நடைமுறைக்கு வர உள்ள நிலையில், திரையரங்கு உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது. அதில், ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் தாக்கத்தால் சினிமா டிக்கெட்டுகளின் விலை நாளை முதலே உயர்த்தப்படுவதாக திரையரங்க உரிமையாளகள் அறிவித்தனர்.

அதன்படி, 100 ரூபாய் டிக்கெட்டுகளின் விலை 120 ரூபாயாகவும், 120 ரூபாய் டிக்கெட்டுகள் விலை 153 ரூபாயாகவும் உயருகிறது.

ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் நகராட்சி வரியை ரத்து செய்துவிட்டு, ஜி.எஸ்.டி வரியை மட்டும் வசூலிப்பதாக அறிவித்ததுபோல் தமிழகத்திலும் அறிவிக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

×Close
×Close