டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி ‘இசட்’ ப்ளஸ் பாதுகாப்பு கேட்டிருக்கலாம்: மு.க ஸ்டாலின்

டெங்கு காய்ச்சல் பயத்தால் எடப்பாடி பழனிசாமி ‘இசட்’ ப்ளஸ் பாதுகாப்பு கேட்டிருக்கலாம் என மு.க ஸ்டாலின் பேச்சு

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இசட் ப்ளஸ் பாதுகாப்பு கேட்ருக்கலாம் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் செவ்வாய்கிழமை சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடன் கேள்விகளுக்கு பதிலளித்த மு.க ஸ்டாலின் கூறும்போது: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு உள்ளிட்ட பலவித காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய தாய்மார்கள், குழந்தை களை எல்லாம் நேரில் சந்தித்து, மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை கள் குறித்து ஆய்வு மேற்கொண்டேன்.

எழும்பூர் மருத்துவமனையில் மட்டும் 56 குழந்தைகள் பலவித காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவர் களில் 26 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றனர். அதேபோல, இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள 39 கர்ப்பிணித் தாய்மார்களில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

எனவே, தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இன்றைக்கு இது ஒரு டெங்கு மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் முன்கூட்டியே டெங்கு பாதிப்பு களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால், இந்தளவுக்கு மோசமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இந்த நிலையில், டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசினால் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த ஆய்வறிக்கையை வெளியிடுகின்றபோது, “டெங்கு காய்ச்சல் என்பது ஒரு சாதாரண விஷயம். இதனால் ஏற்படும் பாதிப்பு களுக்கு மாநில அரசோ, மத்திய அரசோ பொறுப்பேற்க முடியாது”, என்று அலட்சியமாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

அதைவிட கொடுமை என்னவென்றால், டெங்கு காய்ச்சலால் இதுவரை வெறும் 40 பேர் தான் இறந்துள்ளனர் என்ற ஒரு தவறான தகவலை வெளியிட்டுள்ளனர். டெங்குவால் நூற்றுக் கணக்கானோர் இறந்துள்ள நிலையில், அவர்களை எல்லாம் கொச்சைப்படுத் தும் வகையில் ஒரு அறிக்கையை தந்திருப்பது உண்மையில் வேதனைக்குரியது. அதுமட்டுமல்ல, டெங்குவால் பாதிக்கப்பட்ட பலபேர் தனியார் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு, அங்கும் இறந்து போயுள்ளனர்.

ஆனால், அப்படி இறந்தவர்கள் டெங்குவால் இறந்தார்கள் என்று சான்று கொடுக்கக் கூடாது என்று அந்த மருத்துவமனைகள் கட்டாயப்படுத்தப் படுகின்றன. அரசின் சார்பில் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்மொழி உத்திரவு என்னவென்றால், “டெங்கு காய்ச்சலால் யாராவது இறந்ததாக செய்தியை வெளியிட்டால், உங்களுடைய மருத்துவமனையின் அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்யப்படும்”, என்று அச்சுறுத்தி, மிரட்டிக் கொண்டிருக்கி றார்கள்.

இப்படி டெங்கு காய்ச்சலினால் நூற்றுக்கணக்கானோர் ஒருபக்கம் இறந்து கொண்டிருக்கும் போது, இதுபற்றியெல்லாம் ஆளும்கட்சி கவலைப்படாமல், ஆடம்பரமான கட்-அவுட்டுகள் வைத்து விழாக்கள் கொண்டாடும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவர் கூட டெங்கு காய்ச்சலால் இறக்கவில்லை என்று மூத்த அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் அறிக்கை வெளியிட்டு, பேட்டியும் தந்திருக்கிறார்.

ஆனால், திண்டுக்கல் பழனி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் சில குழந்தைகள் இறந்திருப்பதாக சான்றுகள் அளிக்கப்பட்டு, அதற்கான ஆதாரங் கள் என்னுடைய கையில் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, அதே மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 15-ம் தேதி அனுமதிக்கப்பட்ட, அம்பத்தூர் பகுதியை சேர்ந்த யமுனா என்ற 7 வயது குழந்தை 16 ஆம் தேதியன்று இறந்து போனது. அதற்கான சான்று கையில் உள்ளது. ஆனால், டெங்கு காய்ச்சலால் யாரும் இறக்கவில்லை என்ற தவறான ஒரு தகவலை, திட்டமிட்டு இந்த அரசு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

எனவே, மீண்டும் மீண்டும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, டெங்கு காய்ச்சலை முன்கூட்டியே தடுக்கின்ற முயற்சியை தவறவிட்டுள்ள இந்த அரசு, இப்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படிருக்கின்ற அவர்களை தயவுகூர்ந்து காப்பாற்றுகின்ற பணியில், முறையாக ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

செய்தியாளர்: மத்திய குழு வந்து மேற்கொண்ட ஆய்வினால் எந்தப் பயனும் இல்லையே?

மு.க ஸ்டாலின்: அவர்களால் எந்தப் பயனும் இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. காரணம் என்னவென்றால் குழுவில் வந்தவர்கள் முறையான ஆய்வு எதையும் செய்யவில்லை. குறிப்பாக, டெங்கு பாதிப்பு எங்கு இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆய்வு மேற்கொள்ளவில்லை. பொத்தாம் பொதுவாக, தவறான தகவலை வெளியிடும் அளவிற்குதான் வந்து சென்றார்களே, தவிர முறையான ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை.

செய்தியாளர்: டெங்குவால் 40 பேர்தான் இறந்திருப்பதாக சொன்ன அரசு டெங்கு நிதியுதவியாக 280 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்களே?

மு.க ஸ்டாலின்: அதில் ஏதாவது கமிஷன் வாங்க முடியுமா, கொள்ளையடிக்கலாமா என்று நிதியுதவி கேட்டு இருப்பார்களே தவிர, டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை எல்லாம் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கேட்டிருக்க மாட்டார்கள்.

செய்தியாளர்: நிலவேம்புவை அதிகமாக பயன்படுத்தினால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்று சொல்லப்படும் நிலையில், அதுகுறித்து அரசு எதுவும் சொல்லாமல் அமைதி காக்கிறதே?

மு.க ஸ்டாலின்: நான் கூட இன்று காலையில் ஒரு பத்திரிகையில் அப்படி ஒரு செய்தியைப் படித்தேன். டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் முதல்பக்க செய்தியாக வந்துள்ளது. எனவே, அரசு இதற்குரிய பதிலை சொல்ல வேண்டும். இதுபற்றி, அந்தத் துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆய்வு செய்து, உரிய பதில் சொல்ல வேண்டும்.

செய்தியாளர்: உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் முதலமைச்சர் இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டிருக்கிறாரே?

மு.க ஸ்டாவின்: அவசியம் அவருக்குக் கொடுக்க வேண்டும். ஏனென்றால், டெங்கு காய்ச்சல் அவரை ஒருவேளை தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் அவர் பாதுகாப்பு கேட்டிருக்கலாம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close