கமலுக்கு அரசியல் தெரியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரஜினி....இன்று கமல்.... அவ்வளவு தான் வித்தியாசம்!.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்றோடு முடிவடைந்துள்ளது. அடுத்த கூட்டத்தொடர் குறித்த தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அதன்பின் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, “நடிகர் கமல்ஹாசன் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அரசியல் தெரியாது. கமல் அரசியலுக்கு வந்த பின் கருத்து தெரிவித்தால் பதில் அளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் இன்று கூட எனது படம் வந்துள்ளதாக கூறியுள்ளனர். அனைவரும் பாராட்டும் வகையில் ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் கட்டப்படும். மக்களுக்கு தேவையான திட்டங்களை சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளோம்” என்றார்.

முன்னதாக கமல்ஹாசன் விவகாரம் குறித்து இன்று பேட்டியளித்த டிடிவி தினகரன், “ஆதாரம் இல்லாமல், பொதுவாக தமிழக அரசினை கமல் குறை கூறியிருப்பது தவறு. அவரது பேச்சுக்களை பார்க்கும் போது, அவர் ஏதோ தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியில் பேசுவது போன்று உள்ளது. இருப்பினும், அமைச்சர்களும் கமல்ஹாசனை ஒருமையில் பேசுவது தவறான முறையாகும். ஒழுங்கான முறையில் தான் அமைச்சர்கள் இந்த விவகாரத்தை அணுகியிருக்க வேண்டும்” என்றார்.

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி “கமலுக்கு அரசியல் தெரியாது” என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரஜினி….இன்று கமல்…. அவ்வளவு தான் வித்தியாசம்!.

×Close
×Close