மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மஹா புஷ்கரத் திருவிழாவில் கலந்துகொண்டு காவிரியில் புனிதநீராடினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை துலாகட்டத்தில் காவிரி மகாபுஷ்கர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்று நேற்று வரை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். 144 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொண்டு, காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்றும் மூன்றரை கோடி தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்றும் ஐதீகம்.
இவ்விழாவில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து கார் வழியாக வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நாகை மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் காலை 9 மணிக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், மயிலாடுதுறை காவிரியின் வடக்குக் கரைக்கு 9.45 மணிக்கு வந்த முதல்வரை, சிவபுரம் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் பூர்ண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். சங்கல்பம், வழிபாடு சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு காவிரியில் முதல்வர் புனித நீராடினார்.
அவருடன் அமச்சர் ஓ.எஸ் மணியன், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோரும் நீராடினர். திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜூலு, தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் ஆகியோர் தலைமையில் 1250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நீராடியபின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வடக்குக்கரையில் தங்கியிருக்கும் காஞ்சி சங்காராச்சாரியார்கள் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரரிடம் ஆசி பெற்றார். இந்த சந்திப்பிற்காக கடந்த ஒருமாதமாகவே அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அடிக்கடி சங்கராச்சாரியார்களைச் சந்தித்து ஏற்பாடுகளைச் செய்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் நாகையில் உள்ள பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்குச் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஓய்வு எடுத்து வருகின்றனர்.
அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், கருப்பணன் உள்ளிட்டோரும் காவிரி புஷ்கர விழாவில் கலந்து கொண்டு புனித நீராடினர்.
நாகையில் இன்று மாலை நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பங்கேற்கிறார்.