கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி ஜெயலலிதா இறந்த பிறகு, ஒ.பன்னீர்செல்வம் இரவோடு இரவாக மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆக்கப்பட்டார். இதன்பின், மோடியிடம் ஒ.பி.எஸ். நெருக்கம் காட்ட, இனியும் இவரை நம்பி பிரயோஜனம் இல்லை என்று நினைத்த சசிகலா குடும்பம், அவரை பதவியில் இருந்து விலக வற்புறுத்தியது.
அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலா, தனது அடுத்த அடியை முதலமைச்சர் பதவியை நோக்கி எடுத்து வைத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஒ.பி.எஸ்., மறைமுகமாகவும், நேராகவும் பதவி விலக முடியாது என மறுக்க, அவரை வெவ்வேறு வழிகளில் சீண்டத் தொடங்கியது மன்னார்குடி அணி.
கட்சித் தலைமை அலுவலகத்தில் நடக்கும் கூட்டங்களில் உரிய மரியாதை தராமை, அமைச்சர்களின் தன்னிச்சையான முடிவு என எந்தளவுக்கு பன்னீரை வெறுப்பேற்ற முடியுமோ, அந்தளவிற்கு வைத்து செய்தனர்.
ஒருபக்கம் பாஜகவிடம் சரண்டர், இன்னொரு பக்கம் முதல்வராக இருந்தும் கையாலாகாத நிலைமை, என்ற மோசமான நிலையில் சிக்கிய ஓ.பி.எஸ்., தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மக்களுக்கு தன் மீதிருந்த இமேஜை நம்பி, ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்ய அமர்ந்துவிட்டார். அதன்பின், ஒட்டுமொத்த சசிகலா அணியையும் போட்டுக் கொடுக்க, தமிழகமே அதிர்ந்தது. மக்களின் பேராதரவு ஓ.பி.எஸ். பக்கம் இருந்தது. சோஷியல் மீடியாக்களில் சசிகலா குடும்பத்தை விமர்சித்தும், ஒ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாகவும் மீம்ஸ்களும், கருத்துகளும் குவிந்தன.
இதைத் தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ.க்களை கூவத்தூர் ரிசார்ட்டுக்கு கொண்டுச் சென்று, தமிழக சட்டபேரவையில் வாக்கெடுப்பு நடத்தி எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது சசிகலா டீம்.
‘என்னது எடப்பாடி பழனிசாமியா….?’ இதுதான் எடப்பாடி முதல்வரான பின் மக்களின் கேள்வியாக இருந்தது. எடப்பாடி பழனிசாமி என்றால் யாரென்றே பொதுஜனம் பல அறியாமல் இருந்த நிலையில், அவர் மீது நம்பிக்கை வைத்து வேறு வழியில்லாமல் முதல்வராக்கினார் சசிகலா. இதற்கிடையில் சசிகலா சிறைக்குச் செல்ல, தினகரன் தலைத்தூக்க, ஒ.பி.எஸ் ஓரங்கட்டப்பட்டார்.
ஆனால், இங்கு மீண்டும் சசிகலா & கோ-விற்கு ஒரு ட்விஸ்ட் வைத்தார் ஓ.பி.எஸ். ‘என்னையாடா கழட்டி விட்டீங்க?’ என்ற மோடில், இ.பி.எஸ்ஸுடன் கைக்கோர்த்த ஒ.பி.எஸ், பொதுக்குழுவை கூட்டி, அதன் மூலம் சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து முற்றிலுமாக விலக்கி வைத்தார்.
இதனால், ஒ.பி.எஸ்-சை விட, இ.பி.எஸ். மீது தான் சசிகலா அதிகமாக கோபப்பட்டார். மீண்டும் நாம் துரோகத்திற்கு ஆளாகிவிட்டோம் என சசிகலா தன் குடும்பத்தினாரிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார்.
ஆனால், ஒ.பி.எஸ்ஸுடன் இணைந்து சசிகலா குடும்பத்தை எதிர்த்தாலும், நேற்று மதுரையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னையும் அறியாமல் சின்னம்மா என கூறியிருப்பது அரசியல் நோக்கர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
ஜெயலலிதா இறந்த பிறகு வார்த்தைக்கு வார்த்தை ‘சின்னமா…சின்னம்மா’ என்று அலறிய ரத்தத்தின் ரத்தங்கள், சசிகலா குடும்பத்தை ஒதுக்கிய பின் மறந்தும் கூட, சின்னம்மா என்று கூறுவதில்லை. அவ்வப்போது காமெடி பண்ணும் அமைச்சர்களும் வார்த்தை தவறி கூட சின்னம்மா என்று கூறுவதில்லை.
ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘சின்னம்மா’ என்று சசிகலாவை அழைத்திருப்பது அவரது சகாக்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. குறிப்பாக ஒ.பி.எஸ்ஸுக்கு. ஏற்கனவே கூட்டணிக்குள் ‘அமைதியாக வாய்க்கா தகராறு’ நடந்து வந்த நிலையில், தற்போது முதல்வரின் சின்னம்மா ஸ்டாண்ட், ஒ.பி.எஸ்.க்கு ஒரு எச்சரிக்கை மணி தான்.
ஜெயலலிதா காலத்தில் அமைச்சரவையில் ஒ.பி.எஸ்ஸுக்கு கீழ் நிலையில் இருந்த எடப்பாடியை முதல்வராக்கியது சசிகலா தான். என்னதான் ஒ.பி.எஸ்.ஸுடன் இணைந்து இப்போது சசிகலாவை எதிர்த்தாலும், இன்னும் அவர் மீதுள்ள அந்த நன்றியும், பாசமும் முதல்வர் மனதில் இருந்து மறையவில்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
ஒ.பி.எஸ்ஸுடன் இணைந்து இ.பி.எஸ்ஸும் சசிகலாவுக்கு ஆப்பு வைத்தாலும், அவரது இந்த ‘சின்னம்மா ஸ்டண்ட்’ எதை நோக்கி பயணிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அப்போ, ஒ.பி.எஸ்ஸின் அடுத்த ட்விஸ்ட் இ.பி.எஸ்ஸுக்கு தானோ!.