முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபகாலமாக தனது ‘இமேஜ் பில்டப்’பில் அதிக கவனம் செலுத்துவது ஓ.பி.எஸ். அணிக்கு உறுத்தலை ஏற்படுத்துகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கட்டுப்பாட்டில் அதிமுக இருந்தவரை, கட்சியில் எப்போது யாருக்கு ஏற்றம் வரும் என்பதை கூற முடியாது. அதேபோல, யார் பதவி எப்போது பறிக்கப்படும் என்பதையும் சொல்ல முடியாது. எனவே அப்போது யாருக்கும் கட்சியில் அடுத்தகட்ட தலைவராக தங்களை காட்டிக்கொள்ளும் துணிச்சல் வந்ததில்லை.
ஆனால் ஜெயலலிதா முதல்வர் பொறுப்பில் அமர முடியாத சூழல்கள் வந்த 3 முறையும் ஓ.பன்னீர்செல்வத்தை மட்டுமே முதல்வர் பதவியில் உட்கார வைத்தார். இதனால் இயல்பாகவே அதிமுக.வில் ஜெயலலிதாவுக்கு அடுத்த தலைவராக ஓ.பன்னீர்செல்வத்திற்கு ‘இமேஜ்’ உருவானது. அவரும் புன்சிரிப்பு கலந்த பணிவு தோற்றத்தால் தொண்டர்களை ஈர்க்கவே செய்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஓ.பி.எஸ்.ஸின் தர்மயுத்தத்திற்கு கட்சித் தொண்டர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்த பின்னணியும் இதுதான்.
ஆனால் தொண்டர்களை ஈர்த்த ஓ.பி.எஸ்.ஸால் மத்திய அரசின் ஆதரவு இருந்தபோதும் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முடியவில்லை. ஆனால் சசிகலா அமைத்துக் கொடுத்த ஆட்சியையும், எம்.எல்.ஏ.க்களையும் தக்க வைக்கும் தந்திரமும் எடப்பாடி பழனிசாமிக்கு கைவந்த கலையாக இருக்கிறது. டிடிவி.தினகரன் போர்க்கொடி தூக்கியிருக்கும் இந்தச் சூழல் வரை ஆட்சிக் கப்பலை தடுமாறாமல் இ.பி.எஸ். இயக்கி வருவதே அதற்கு சாட்சி!
வாராது வந்த மாமணியாய் இப்படி ஆட்சிக்கும் கட்சிக்கும் தலைமை தாங்கும் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி சுலபத்தில் விட்டுவிடத் தயாரில்லை. எடப்பாடி பழனிசாமியை சார்ந்த கொங்கு லாபியும் இதில் உறுதியாக இருக்கிறது. இப்படி அதிகாரத்தை தக்கவைத்த எடப்பாடி, மக்கள் மத்தியில் இமேஜை அதிகப்படுத்தும் முயற்சியில் சமீப நாட்களாக மும்முரமாக இருக்கிறார்.
இதற்காகவே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களுக்காக சுற்றுப்பயணம் செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு போகிற வழியெங்கும் வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. கட்சிக்காரர்களின் குழந்தைகளை அழைத்து வந்து அவர்களை எடப்பாடி கொஞ்சுவதாக நிகழ்ச்சிகளை அமைக்கிறார்கள். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களிலும் மேடையை விட்டு இறங்கி பெண்களிடம் கை கொடுத்து பேசுவதை எடப்பாடி பழனிசாமி வழக்கமாக்கி வைத்திருக்கிறார்.
ஆகஸ்ட் 19-ம் தேதி (இன்று) திருவாரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையத்தில் இன்று காலையில் வந்து இறங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அங்கு அவரை வரவேற்க பெரும் கூட்டத்தை எடப்பாடி அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர். அவர்கள் நின்ற பகுதிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தபோது, காரை விட்டு இறங்கி வந்து அவர்களுடன் அளவளாவினார், குழந்தைகளுடன் கைகுலுக்கி மகிழ்ந்தார்.
இரு அணிகளும் இணைந்தாலும், ஓ.பி.எஸ்.ஸுக்கே பிரதான இடம் இருக்க வேண்டும் என்பது அந்த அணியினரின் எதிர்பார்ப்பு! ஆனால் எடப்பாடி பழனிசாமி தன்னையும் முழுமையான தலைவராக உருவாக்க எடுத்து வரும் முயற்சிகள் ஓ.பி.எஸ். தரப்புக்கு பீதியை உருவாக்குவதாக தெரிகிறது. ‘ஒரே உறைக்குள் எப்படி இரு கத்திகள் இருக்க முடியும்?’ என்கிற கேள்வி அவர்கள் மத்தியில் ஒலிக்கிறது.
‘ஆட்சிக்கு எடப்பாடி; கட்சிக்கு ஓ.பி.எஸ்.’ என்கிற உடன்பாட்டை சிலர் முன்வைத்தாலும், இரு தரப்பும் ஒருவரையொருவர் முழுமையாக நம்புவார்களா? இணைப்புக்கு பிறகு ஈகோ உரசல் உருவாகாமல் இருக்குமா? என்கிற கேள்விகள் கட்சியினர் மத்தியில் எதிரொலிக்கவே செய்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.