தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் சந்தித்துப் பேசினர். தமிழகத்திற்கு புதிய முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். பன்காரிலால் புரோகித் வரும் 6-ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவை சந்தித்துப் பேசினர்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு வருகிற 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் அந்த விவகரத்தில் மௌனம் காத்து வந்தார். எனவே, மத்திய பாஜக-வின் உத்தரவின்படியே ஆளுநர் செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர்.
முன்னதாக, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்திருந்தனர். ஒருவேளை அந்த சமயத்தில் ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டிருந்தால், தற்போது இந்த ஆட்சி கவிழ்ந்திருக்கலாம். இதனை கருத்தில் கொண்டே டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். எனினும், எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ-க்களில், தங்கள் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் ஸ்லீப்பர் செல்லாக இருக்கத்தான் செய்கின்றனர் என டிடிவி தினகரன் கூறிவருவது கவனிக்கத்தது.
இந்த நிலையில், பொறுப்பு ஆளுநர் பதவியில் இருந்து விடைபெறவுள்ள வித்யாசாகர் ராவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் சந்தித்துப் பேசினர்.