/tamil-ie/media/media_files/uploads/2017/10/edapadi4-1.jpg)
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தியில், ‘இருள் அகன்று, மகிழ்ச்சி ஒளிச்சுடர் பரவட்டும்’ என கூறியிருக்கிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தி வருமாறு:
தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படும் இந்த இனிய வேளையில், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தனது கொடுஞ்செயல்களால் மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய கொடிய அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
மறம் வீழ்ந்து, அறம் வென்ற நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகிடும் நன்னாளாகவும் தீபாவளி திருநாள் விளங்குகிறது. தீபத் திருநாளன்று, மக்கள் அதிகாலை கங்கை நதியில் குளிப்பதற்கு ஒப்பாக கருதப்படும் தீபாவளி எண்ணெய்க் குளியல் முடித்து, புத்தம் புதிய ஆடைகளை அணிந்து, தீபாவளி என்ற சொல்லின் பொருளுக்கேற்ப இல்லங்களில் வரிசையாக தீப விளக்கேற்றி, தங்கள் வாழ்வு சிறக்க கடவுளை வணங்கி, பல வகையான இனிப்புகளையும் பலகாரங்களையும் நண்பர்களோடும் உறவினர்களோடும் பகிர்ந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை மக்கள் தங்கள் உற்றார் உறவினர்களுடன் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
இந்த தித்திக்கும் தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும் வளமும் பெருகட்டும், இருள் அகன்று மகிழ்ச்சி ஒளிச்சுடர் பரவட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.