சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். மீஞ்சூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் சென்று ஆய்வுப் பணிகளை செய்தார்.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசுத் தரப்பில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.
மழை நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னையில் மண்டல வாரியாக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து பணிகளை முடுக்கி விட நடவடிக்கை மேற்கொண்டார். ஒவ்வொரு அமைச்சர்களும் அந்தந்த பகுதிக்கு நேரடியாக சென்று மழை நீர் வடிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இன்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்குவது குறித்தும், மழை நீரை வடிய வைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மழை பாதிப்புகளை பார்வையிடச் சென்றார். வட சென்னை தங்கசாலையில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர், அங்கிருந்து பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் ஆர்.கே.நகர் பகுதிகளிலும் ஆய்வு செய்தார்.
ஆர்.கே.நகர் சென்னியம்மன் கோவில் தெருவில் உள்ள மருத்துவ முகாமை முதல்வர் பார்வையிட்டார். முகாமில் உள்ளவர்களுக்கு ரொட்டி மற்றும் உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.
தொடர்ந்து வெள்ளத்தால் அதிகம் பாதிப்புக்கு உள்ளான மீஞ்சூர் பகுதிக்கும் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். இங்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் சென்று ஆய்வுப் பணிகளை செய்தார். முதல்வருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், வேலுமணி ஆகியோரும் சென்றனர். தொடர்ந்து வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறார் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.