ஆட்சியை தக்க வைக்க பித்தம் பிடித்து அலைகிறார்கள் என எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ். தரப்பு மீது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடும் தாக்குதல் நடத்தினார்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் கடந்த ஜூலை 19-ம் தேதி குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளுடன் சட்டமன்றத்திற்கு வந்தனர். தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி சென்னையில் விற்கப்படுவதை சுட்டிக்காட்ட இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதனால் சபையின் புகழுக்கு களங்கம் விளைவித்ததாக இவர்கள் மீது புகார் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் இந்தப் புகாரை சட்டமன்ற உரிமைக் குழுவின் விசாரணைக்கு சபாநாயகர் தனபால் அனுப்பினார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமைக்குழு இது குறித்து ஆகஸ்ட் 28-ம் தேதி விசாரித்து நடவடிக்கை எடுக்க உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், 20 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மு.க.ஸ்டாலினிடம் இன்று (ஆகஸ்ட் 25-ம் தேதி) நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது ஸ்டாலின், ‘இந்த ஆட்சியை தக்கவைக்க பித்தம் பிடித்து அலைகிறார்கள். எதைத் தின்றால் இந்த ஆட்சியை தக்க வைக்க முடியும் என பார்க்கிறார்கள்.’ என்றார்.
சூலூர் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ் இந்த ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என கோரியிருப்பது பற்றி கேட்டபோது, ‘அவர் ஆட்சியை கலைக்கச் சொல்கிறார். இன்னும் 19 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்கிறார்கள். இந்த குதிரை பேர அரசு எதைப் பற்றியும் கவலைப்பட வில்லை’ என்றார் ஸ்டாலின்.