முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசமிருந்த மாவட்டச் செயலாளர் பதவியை பறித்து, டிடிவி.தினகரன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல அடுத்தடுத்து அமைச்சர்களின் கட்சி பதவிகளை காலி செய்ய திட்டமிட்டிருக்கிறார் அவர்.
அதிமுக.வில் அணிகள் இணைப்புக்கு பிறகு, குழப்பம் உச்சகட்டத்தை எட்டுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க காய் நகர்த்தி வருகிறார்கள். இதற்காக பொதுக்குழுவை கூட்டுவது குறித்து, ஆகஸ்ட் 28-ம் தேதி (நாளை) சென்னையில் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அவர்கள் முடிவெடுக்கிறார்கள்.
இதற்கிடையே துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் டிடிவி.தினகரனும் பொதுக்குழுவை கூட்ட ஆயத்தமாகிறார். இதற்காக மாநிலம் முழுவதும், பொதுக்குழு உறுப்பினர்களை அணி திரட்டுகிறார் அவர். பல மாவட்டங்களில் முக்கிய நிர்வாகிகள் பலரும் ஆட்சியில் இருக்கும் இபிஎஸ், ஓ.பி.எஸ். பக்கமே ஒதுங்குகிறார்கள். அதனால் அவர்களை கட்சிப் பொறுப்புகளில் இருந்து மாற்றிவிட்டு, தனக்கு தோதான ஆட்களை பொறுப்புகளில் அமர்த்தி வருகிறார் டிடிவி.தினகரன். இந்த புதிய நிர்வாகிகள் மூலமாக பொதுக்குழு உறுப்பினர்களை முழுவீச்சில் வளைப்பதுதான் டிடிவி.தினகரனின் வியூகம்.
இந்த அடிப்படையிலேயே ஏற்கனவே அமைச்சர்கள் உதயகுமார், கே.சி.வீரமணி, காமராஜ் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரது கட்சிப் பதவிகளை பறித்து நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 27-ம் தேதி (இன்று) காலையில் முதல் அதிரடியாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வசமிருந்து, சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை பறித்து உத்தரவிட்டார் டிடிவி.தினகரன். பொதுச்செயலாளர் சசிகலாவின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் பொறுப்பை ஏற்ற எடப்பாடி பழனிசாமி, கட்சியில் தலைமை நிலைய செயலாளர், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஆகிய இரட்டைப் பதவிகளை கைவசம் வைத்திருந்தார். இவற்றில் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை மட்டும் பறித்து உத்தரவிட்டிருக்கிறார் டிடிவி.தினகரன். எடப்பாடிக்கு பதிலாக வீரபாண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும் முன்னாள் மாவட்டச் செயலாளருமான எஸ்.கே.செல்வம் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முதல் அமைச்சரின் கட்சிப் பதவியையே பறித்து அறிவித்திருப்பதன் மூலமாக, கட்சியில் இறுதி யுத்தத்திற்கு தயாராகியிருக்கிறார் டிடிவி.தினகரன். இதற்கு எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ். தரப்பு பதில் நாளை அதிமுக தலைமைக்கழகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் வெளிப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.