இரட்டை இலைச் சின்னத்தை முதல்வர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கீடுசெய்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்தது. கட்சியின் பெயர் மற்றும் கொடியை அந்த அணியே பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்புக்குப்பின் சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன், “தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடக்கவில்லை. மத்திய அரசின் விருப்பப்படியே செயல்பட்டது. இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதில் தேர்தல் ஆணையம் குறியாக இருந்தது. 122 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 37 எம்.பி-க்கள் ஆதரவுடன் இருந்தபோது, சின்னத்தை ஏன் முடக்கினார்கள். தேர்தல் ஆணைய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம்" என்றார்.
இந்தநிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.
முதலில் பேசிய ஓ.பி.எஸ், "கட்சிக்கு ஏற்பட்ட சோதனைக்கு, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதிமுகவின் பொதுக்குழு, எம்.எல்.ஏ., எம்.பி.க்களின் ஆதரவுடன் சின்னம் கிடைத்துள்ளது. ஜெ.நியமித்த நிர்வாகிகள் இணைந்து அதிமுகவை வழிநடத்தி செல்வோம். இரட்டை இலை வழக்கில் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கே உள்ளது; டிடிவி-க்கு அல்ல. தொண்டர்கள் இயக்கமாக அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்தினார். எங்களுக்கு பின்னாலும் யாரும் இல்லை, முன்னாலும் யாரும் இல்லை. தலைமை கழக நிர்வாகிகளில் எந்த மாற்றமும் இல்லை" என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "ஆட்சியை கவிழ்க்கலாம் என நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடியாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. கட்சியில் அனைவரும் ஒற்றுமையோடு செயல்படுகிறோம். நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு உள்ளோம். தேர்தல் ஆணையம் நீதி, உண்மை, தர்மத்தை நிலைநாட்டி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பின்படி, தினகரன் அதிமுகவின் உறுப்பினர் கூட கிடையாது" என்றார்.