Advertisment

இந்து அறநிலையத் துறை கல்லூரி: முதலமைச்சர் வழங்கிய பணி ஆணை; நிரந்தர பணிக்கா? தற்காலிக பணிக்கா?

இந்து அறநிலையத் துறையின் கீழ் கொளத்தூரில் தொடங்கப்பட்ட அருள்மிகு கபாலீஸ்வர் கலை அறிவியல் கல்லூரியில் பணி புரிய முதலமைச்சரிடம் பணி ஆணை பெற்ற உதவிப் பேராசிரியர்கள் எந்த நிலை ஆசிரியர்களின் வகைப்பாட்டிற்குள் வருகிறார்கள் என்பதை தெளிவுப்படுத்தவேண்டியது அரசின் கடமையாகும் என்று முனைவர் சே.சோ.ராமஜெயம் கூறினார்.

author-image
Balaji E
New Update
CM MK Stalin gives appointment order for assistant professor of college of hrce, Arulmigu Kabaleeshwarar arts and science college, HRCE, guest lectures rise questions, இந்து அறநிலையத் துறை, அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி, முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கிய பணி ஆணை நிரந்தர பணிக்கா, முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கிய பணி ஆணை தற்காலிக பணிக்கா, HRCE news, guest lectures demand, tamil news

இந்து அறநிலையத் துறை சார்பில், சென்னை கொளத்தூரில் புதியதாக தொடங்கப்பட்ட அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் மற்றும் ஆசிரியர்களாக பணிபுரிய தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பணி ஆணை வழங்கினார். இது தமிழ்நாடு கல்லூரி கல்வித் துறையில் சில விவாதங்களை எழுப்பியுள்ளது.

Advertisment

இந்து அறநிலையத் துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள கல்லூரிகள் இந்து அறநிலையத் துறையில் உள்ள கோயில்களில் இருந்து வரும் வருமானத்தின் மூலம் நடத்தப்படும் கல்லூரிகள். அதனால், இந்த கல்லூரிகள் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டாலும் உயர்க் கல்வித் துறையின் கீழ் வராது. அரசு உதவி பெறும் கல்லூரிகளின் வகையிலும் வராது. கிட்டத்தட்ட இது ஒரு வகையான சுயநிதி கல்லூரிகளைப் போன்றது என்கிறார்கள்.

கொளத்தூரில் தொடங்கப்படுகிற அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் பணி புரிய உதவி பேராசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர், நூலகர், மற்று ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு நேர்காணல் செப்டம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியானது. மேலும், அதில் இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசின் இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கல்லூரியில் மதத்தின் அடிப்படையில் இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இந்து அறநிலையத் துறை சட்டப்படி இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று பதில் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அறநிலையத்துறை நிதியில் இயங்கும் கல்லூரிகளில் இந்து மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்து மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று கொளத்தூரில் இயங்கும் கபாலீஸ்வரர் கல்லூரி பணியில் இந்துக்களை மட்டுமே சேர்ப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரிய உதவிப் பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர், நூலகர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு நேர்காணல் நடத்தி தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்டோபர் 21) பணி ஆணை வழங்கியுள்ளார். அப்போது இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு உடனிருந்தார். இந்த பணி ஆணை வழங்கிய நிகழ்வு தமிழ்நாடு கல்லூரி கல்வித் துறையில் சில விவாதங்களை எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் 4,500க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு முதல்தான் மாதம் ரூ.20,000 ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் இன்னும் பணி நிரந்தம் செய்யப்படவில்லை. அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணி நிரப்பப்படாமல் அப்படியே உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு புதிய கல்லூரிகளை தொடங்குவது நல்ல விஷயம் என்றாலும் நிரந்தர ஆசிரியர்கள் இல்லாமல் கல்லூரிகளை தொடங்குவது ஆரோக்கியமானதல்ல என்று கௌரவ விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.

இந்து அறநிலையத் துறையின் கீழ் தொடங்கப்பட்ட அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் நேர்காணல் மூலம் உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பணி ஆணை வழங்கியுள்ளார். முதலமைச்சர் வழங்கிய பணி ஆணை தற்காலிக பணிக்கான பணி ஆணையா அல்லது நிரந்தரப் பணிக்கான பணி ஆணையா என்று அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அது நிரந்தரப் பணி ஆணை என்றால் எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்று முறைப்படி தேர்வு நடத்தியிருக்க வேண்டும். முதலமைச்சர் வழங்கியது தற்காலிக பணி ஆணை என்றால் எப்போதும் இல்லாத அளவில் ஒரு முதலமைச்சர் தற்காலிக பணி ஆணை வழங்கியிருக்கிறார் என்று சுட்டிக்காட்டுகிறார்கள். எந்த ஒரு பணிக்கும் அறிவிப்பு செய்தித்தாளில் வெளியிடும்போது அந்த பணிக்கான கல்வித் தகுதியுடன் ஊதியம் எவ்வளவு என்பதையும் அறிவிக்க வேண்டும். ஆனால், இந்து அறநிலையத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அந்த விளம்பரத்தில் ஊதியம் குறிப்பிடப்படவில்லை.

இது குறித்து அரசு கல்லூரியில் பணி புரியும் கௌரவ விரிவுரையாளர் முனைவர் சே.சோ. ராமஜெயம் அவர்களிடம் பேசினோம். அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அவர் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியதாவது: “அரசு கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் என புதிது புதிதாக கல்லூரிகள் திறக்கப்படுவது ஆரோக்கியமான நடவடிக்கை என்றாலும், அந்த மாணவர்களுக்கு கல்வியை போதிக்கக்கூடிய ஆசிரியர்களை நியமிக்காமல் வெறுமனே கல்வி நிலையங்களை மட்டுமே திறப்பது என்பது சடங்கு சம்பிரதாயம் என்பதாகத்தான் வெகுமக்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது.

புதிதாக உருவாக்கியுள்ள அரசு கலைக் கல்லூரிகளில் தற்காலிக முறையில் ஆசிரியர்களை நியமித்து கல்வியை போதிப்பது நல்ல ஆரோக்கியமான சூழலை உருவாக்குமா.?

கற்பிப்பவர்கள் மனதளவில் ஆரோக்கியமாகவும் பொருளாதார மந்தமின்றி இருந்தால்தானே அவர்களால் சிறப்பாக கற்பித்தல் பணியை மேற்கொள்ள இயலும் என்பதை அரசு எப்போது உணரப்போகிறது?

தாய் தந்தையர்கள் அன்றாடம் கூலி வேலை செய்தும், வீட்டில் உள்ள சொத்தை விற்றும் தங்களது பிள்ளைகளை முனைவர் பட்டம் வரை படிக்க வைத்து, அவர்களுக்கு பேராசிரியர் வேலை கிடைக்கும் என அவர்களின் நம்பிக்கை பொய்த்து விடுமோ என்ற ஏக்கத்தில் பல பெற்றோர்கள் பரிதாபகரமான சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள் என்பதை அரசின் கவனத்திற்கு வரவில்லையா?

தமிழகத்தில் கல்வி துறை மிகவும் அதளபாதாளத்திற்கு சென்று விட்டதை இந்த மாதம் அக்டோபர் 20ம்தேதி தினமணி நாளிதழில் வெளியான நடுபக்க கட்டுரை சுட்டிக் காட்டியும், தமிழக அரசு இதைப் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை என்பது இங்கு வேதனையாக இருக்கிறது.

தற்காலிகமாக ஆசிரியர்களை நியமித்து, குறைந்த அளவில் ஊதியத்தை கொடுத்து, அவர்களின் உழைப்பையும் உள்ளத்தையும் வீணடிப்பது ஜனநாயக துரோகம் என கல்வியாளர்கள் குறிப்பிட்டும் அரசு செவிசாய்க்கவில்லை என்றால் இது ஜனநாயக படுகொலைக்கு நிகரானதுதானே.

ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை படிப்பதற்கே தங்களது வயதையும் சம்பாதித்ததையும் தொலைத்தவர்களுக்கு என்ன வழி சொல்லப்போகிறது இந்த அரசு?

ஏற்கனவே தமிழகத்தில் தற்காலிக முறையில் அரசு கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களை 4500க்கு மேற்பட்டவர்களை நியமித்து குறைந்த ஊதியத்தில் அவர்களை ஈடுபடுத்தி, பல வருடங்களாக அவர்களை தற்காலிகப்பணியிலியே நீடித்து வைத்திருக்கும் அவல நிலை இங்கு கவனிக்கத்தக்கது.

மேலும் அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் பெரும்பான்மையினர் 45 வயது முதல் 50 வயதை எட்டிய வர்களாக இருக்கும் சூழலில் இவர்களுக்கு அரசு எப்போது நிரந்தரப்பணியை வழங்கப்போகிறது, எப்போது அவர்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கப்போகிறது?

நிரந்தர பேராசிரியர்களை கல்லூரிகளுக்கு பணியமர்த்தாமல், தற்காலிக நிலையில் அவர்களை நியமிப்பது, எப்படிப்பட்ட சூழலை சமூகத்தில் உருவாக்கும் என்பதை அரசு உணராமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் புதிதாக சென்னையில் அரசு கலைக் கல்லூரியை மாண்புமிகு தமிழக முதல்வர் நேற்று (அக்டோபர் 21, 2021) திறந்து வைத்து, அக்கல்லூரிக்கு உதவிப் பேராசிரியர்களை நியமித்து பணி ஆணை வழங்கியிருப்பது படித்தவர்கள் மத்தியில் சற்று ஆறுதல் தருவதாக இருந்தாலும், பணி நியமனம் பெற்ற உதவிப் பேராசிரியர்கள் எந்த நிலை ஆசிரியர்களின் வகைப்பாட்டிற்குள் வருகிறார்கள் என்பதை தெளிவுப்படுத்தவேண்டியது அரசின் கடமையாகும்.

புதிதாக உருவாக்கப்பட்ட கலைக் கல்லூரிக்கு ஆசிரியர்களை நியமித்து, பணி ஆணை வழங்கியிருப்பது நிரந்தரப்பணியா அல்லது தற்காலிக பணியா என்பதை அரசு விளக்கமளிக்காமல் அவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி இருப்பது படித்தவர்களை ஏய்க்கும் போக்கு என்பதாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

அரசு கலைக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கென தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் அல்லது அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் இருக்கும் சூழலில், அதற்கென அரசு விதிகள் உருவாக்கப்பட்டு நீண்ட காலமாக பணிநியமன விதிகள் நடைமுறையில் உள்ள சூழ்நிலையில் நேற்று முதலமைச்சர் அவர்கள், உதவிப்பேராசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியிருப்பது, படித்து வேலைக்காக காத்திருக்கும் ஏராளமான இளைஞர்கள் மத்தியில் ஒரு விதமான அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

இந்தியா முழுவதிலும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடுகள் நிலவி வருகிறது.

தற்காலிக பேராசிரியர்களுக்கு மாத ஊதியம் UGC வரையறுத்து கூறியிருக்கும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் ஊதிய முரண்பாடு நிலவி வருகிறது. தற்போது ஹரியானாவில் 50,000 ரூபாயும், கேரளாவில் 35,000 ரூபாயும், டெல்லியில் 40,000 ரூபாயும், ஆந்திராவில் 30,000 ரூபாயும், கர்நாடகத்தில் 30,000 ரூபாயும், குறிப்பாக தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் தற்காலிக பேராசிரியர்களுக்கு 30,000 ரூபாயும், சட்டக்கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக பேராசிரியர்களுக்கு 45,000 ரூபாயும் வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் 20,000 ரூபாய் வழங்கப்பட்டு வருவது தவறான முன்னுதரணமாகும். இதுபோன்ற ஊதிய முரண்பாட்டை களைவது அரசின் கடமையாகும்.

முதலமைச்சர் வழங்கிய உதவிப் பேராசிரியர் பணி தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா, இவர்களுக்கு வழங்க இருக்கும் ஊதியம் யுஜிசி அடிப்படையிலான ஊதியமா, என பல்வேறு ஐயங்கள் இருப்பினும், இதுபோன்ற நியமனங்கள் எதிர்காலத்தில் எவ்விதமான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.” என்று .

இந்து அறநிலையத் துறை சார்பில் தொடங்கப்பட்ட அருள்மிகு கபாலீஸ்வர் கலை அறிவியல் கல்லூரிக்கு உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சரால் வழங்கப்பட்ட பணி ஆணை நிரந்தர பணிக்கானதா தற்காலிக பணிக்கானதா என்பது குறித்து விளக்கமாக தெரிந்துகொள்ள இந்து அறநிலையத் துறை ஆணையர் மற்றும் இணை ஆணையரை போனில் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ஆனால், யாரும் அழைப்பை எடுக்கவில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Cm Mk Stalin Hindu Minister P K Sekar Babu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment