நம்பிக்கை வாக்கெடுப்பு; சிபிஐ தலையிட முடியாது - முதல்வர் பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி சட்டசபையில் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் பெரும் அடிதடிக்கிடையே வெற்றிப் பெற்றது. அப்போது சட்டசபையில் நடந்த வன்முறையில், மு.க.ஸ்டாலின் அவைக்காவலர்களால் குண்டுக்கட்டாக தூக்கி வெளியே கொண்டுவரப்பட்டார். திமுக உறுப்பினர்கள் அவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து ரகளை செய்தனர். இப்படிப்பட்ட அமளிதுமளிக்கு இடையேதான், முதல்வர் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி அடைந்தது. இதை எதிர்த்து, மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்

இந்நிலையில், சமீபத்தில் ‘டைம்ஸ் நவ்’ ஆங்கில தொலைக்காட்சி ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில், மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் பேரம் பேசுவது போல ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. இது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இதையடுத்து, எம்.எல்.ஏ.க் களுக்கு லஞ்சம் கொடுத்தது குறித்து சி.பி.ஐ மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளை கொண்டு விசாரிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த வழக்கில் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்தமனுவில், ‘நம்பிக்கை தீர்மானம் தமிழக சட்டசபைக்குள் நடந்தது. அந்த தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.கக்கள் சட்டசபைக்குள் தான் ஓட்டுப் போட்டனர். எனவே, சட்டசபைக்குள் நடந்த ஒரு சம்பவத்தை சி.பி.ஐ. மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளை கொண்டு விசாரிக்க முடியாது. இந்த விவகாரம் சட்டசபை உரிமை சம்பந்தப்பட்டது. எனவே, சி.பி.ஐ. மற்றும் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்ககக்கூடாது. அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நாளை (வெள்ளி) விசாரணைக்கு வருகிறது.

×Close
×Close