கதிராமங்கலம்-பந்தநல்லூர் இடையே அமைக்கப்பட்டிருந்த எரிபொருள் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதன்காரணமாக அதிலிருந்து வெளியேறிய எரிபொருள் அப்பகுதி முழுவதும் பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனால், எரிபொருள் குழாய் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த ஜூன் 30-ஆம் தேதி காலை முதல் போராட்டம் நடத்தினார். அன்று மாலை திடீரென கலவரம் ஏற்பட்டது. இதனால், போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர்.
இதனால், கதிராமங்கலம் கிராமமே கலவர பூமியாக காட்சியளித்தது. வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உட்பட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது பொது சொத்துக்கு சேதம், அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து, கதிராமங்கலத்தில் விவசாயிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் அங்கு கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், பழுதடைந்த எரிவாயு குழாயை சரி செய்வதற்காக ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் கதிராமங்கலம் தடியடி குறித்து திமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "கதிராமங்கலத்தில் குறைந்த அளவே தடியடி நடத்தப்பட்டது. போராட்டத்தின் போது மக்களில் சிலர், போலீசார் மீது கற்களை வீசினார்கள். இதில், காவல் ஆய்வாளர் உட்பட மூன்று போலீசார் காயம் அடைந்தனர். காவல்துறை வாகனம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டது. மேலும், வைக்கோல்களை வழிப்பகுதியில் போட்டு அதற்கு தீ வைத்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/a704-300x217.jpg)
இதுபோன்று காவல்துறையினரை அவர்களது பணியை செய்யவிடாமல் தடுத்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கதிராமங்கலத்தில் போதுமான பாதுகாப்பு போடப்பட்டு, அங்கு அமைதியான சூழல் நிலவுகிறது" என்றார்.