/indian-express-tamil/media/media_files/2025/10/14/coimbatore-farmers-association-insists-setting-up-committee-headed-ias-officer-to-protect-the-noyyal-river-tamil-news-2025-10-14-16-59-24.jpg)
"தமிழக அரசு நொய்யல் ஆற்றை பாதுகாப்பதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி அடங்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும். அதில் விவசாயிகளையும் சேர்க்க வேண்டும்" என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அச்சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி பேசுகையில், "கோவையை சேர்ந்த விவசாயி கருப்பசாமி என்பவர் 10 ஏக்கர் நஞ்சை விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பணப் பயிர்கள் மற்றும் தென்னை மரங்களை வைத்து விவசாயம் செய்து வருகிறார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து சட்டவிரோதமாக தனிநபர் ஒருவருக்கு சாதகமாக அந்த தென்னை மரங்களை வெட்டி சேதம் விளைவித்து விட்டார்கள். எனவே அந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிழக்கு புறவழி சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்தப்படவில்லை என்று மாவட்ட நிர்வாகம் கூறும் நிலையில் தற்போது சாலை ஓரங்களில் அளவெடுக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. எனவே அதன் உண்மையை மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதால், இனிவரும் காலங்களில் வாக்குறுதிகள் எல்லாம் வரும். அந்த வாக்குறுதிகளும் அறிவிப்புகளும் நீர் பூத்த நெருப்பாக மாறிவிடக்கூடாது. அந்த அறிவிப்புகள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். எதிராக இருந்தால் தேர்தல் காலங்களில் விவசாயிகள் அவர்களது பதிலை தெரிவிப்பார்கள்.
கிழக்கு புறவழிச் சாலை மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறதா? அல்லது மாநில அரசால் செயல்படுத்தப்படுகிறதா? என்று தெரியாத நிலை இருக்கிறது. தற்போது மத்திய அரசானது மாநில அரசின் நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் மூலமாகத்தான் இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கூறி இருக்கிறார்கள். எனவே அதன் உண்மை விளக்கத்தை மாவட்ட நிர்வாகம் கூற வேண்டும். கிழக்கு புறவழிச் சாலைக்கு விவசாயிகள் நிலத்தை கொடுக்கின்ற நிலையில், சர்வீஸ் ரோடு எதுவும் தற்போது வரை அமைக்கப்படவில்லை. எனவே கூடிய விரைவில் அதனை அமைத்து தர வேண்டும்.
கோவையில் அவிநாசி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை என்று பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்பட்டு விட்டது. ஆனால் அதனை மீண்டும் நடுவதற்கு எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. வெட்டிய மரங்களை சட்டபூர்வமாக வைப்பதற்கு எந்த ஒரு திட்டமும் இல்லை. மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். கோவையில் ஜிடி நாயுடு மேம்பாலம் திறக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவையில் காட்டு யானைகள், காட்டு பன்றிகள், மான்கள் மயில்கள் ஆகியவற்றினாலும் தற்போது கிளிகளினாலும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும். சட்டப்பேரவையில் விவசாயம் சார்ந்த எந்த திட்டமாக இருந்தாலும் விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு தான் அதனை செயல்படுத்த வேண்டும். இல்லை எனில் கடும் எதிர்ப்புகளை தெரிவிப்போம். விவசாயிகளிடம் கருத்தை கேட்காமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்ற முதல்வர் கூறியிருப்பதை நம்புகிறோம்.
தற்போதைய காலத்தில் ரியல் எஸ்டேட் துறை பெருகி வருகிறது. அதனால் விவசாய நிலங்கள் சுருங்கி வருகிறது. மாநில அரசு இதனை பரிசீலனை செய்ய வேண்டும். இது ஒரு மாவட்டத்திற்கு மட்டுமல்ல அனைத்து மாவட்டத்திற்கும் பொருந்தும். நொய்யல் ஆற்றை பாதுகாப்பதற்கு கோடிக்கணக்கில் நிதிகள் ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்தப் பணம் எங்கு செல்கிறது என்று தெரியவில்லை. ஆக்கிரமிப்புகளால் நொய்யல் ஆறு சுருங்கி சுருங்கி அடையாளம் தெரியாமல் போய்விடும் அளவிற்கு மாறி வருகிறது. இதற்காக பலரும் போராடி வருகிறார்கள். எனவே, மாநில அரசு நொய்யல் ஆற்றை பாதுகாப்பதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி அடங்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும். அதில் விவசாயிகளையும் சேர்க்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.