scorecardresearch

தமிழ்நாட்டில் முதல்முறை, கோவையில் மோப்ப நாய்களுக்கு பெண் போலீசார் பயிற்சி

திண்டுக்கல், பாளையங்கோட்டை மத்திய சிறை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Coimbatore
Coimbatore

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவையில் மோப்ப நாய்களுக்கு பெண் போலீசார் பயிற்சி அளித்து வருகிறார்கள்.

கோவை மாநகர காவல் துறையில் துப்பறியும் மோப்ப நாய் பிரிவு கடந்த 1965ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  தொடர்ந்து கடந்த 2001-ம் ஆண்டு முதல் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இங்கு தற்போது 7 மோப்ப நாய்கள் உள்ளன. போதை பொருட்களை கண்டறிவதற்காக கோவைக்கு தற்போது புதிதாக பெல்ஜியம் மெலானாய்டு வகையை சேர்ந்த மதனா என பெயரிடப்பட்ட 8 மாதம் ஆன  மோப்ப நாய் சேர்க்கப்பட்டதால் மோப்ப நாய் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.

இதுதவிர திண்டுக்கல், பாளையங்கோட்டை மத்திய சிறை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கோவை மாநகரில் கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் நடந்தால் அப்பகுதிக்கு மோப்ப நாய் கொண்டு செல்லப்பட்டு, துப்பறியும் பணியை போலீசார் மேற்கொள்கிறார்கள்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் போன்ற பணிகளிலும் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அம்பலவாணன் தலைமையில் இந்த பிரிவு இயங்குகிறது.

மோப்ப நாய்கள் தங்குவதற்கும், உலாவுவதற்கும் விசாலமான இடவசதி உள்ளது.  அத்துடன் மோப்ப நாயுடன் பயிற்சிக்கு வரும் போலீசார் தங்குவதற்கு இடம் கழிவறை, தண்ணீர் வசதி செய்யப்பட்டு உள்ளது.

இங்கு உள்ள போலீஸ் மோப்ப நாய் பயிற்சி பிரிவில் கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ஆண் போலீசார் மட்டுமே மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மோப்ப நாய் பிரிவில் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய திருப்பூரை சேர்ந்த கவிப்பிரியா (வயது 25), தேனி பகுதி பவானி (26) ஆகிய 2 பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் வில்மா என்ற பெயர் கொண்ட லேப்ரடார் வகை நாய், பெல்ஜியம் மெலானாய்டு நாய் உள்ளிட்ட மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து கவிப்பிரியா, பவானி ஆகியோர் கூறும்போது, நாங்கள் கடந்த 2022ம் ஆண்டு கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந்தோம்.

நாங்கள் ஏற்கனவே வீடுகளில் நாய்களை வளர்த்து வருகிறோம். இதனால் எங்களுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம் உண்டு.

கோவையில் முக்கிய பிரமுகர்கள் வரும்போது மோப்ப நாய்களை கொண்டு சோதனை செய்வதை பாதுகாப்புக்கு சென்ற இடத்தில் பார்த்து உள்ளோம். அப்போது நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மோப்ப நாய் பிரிவில் சேர வேண்டும் என்று எண்ணினோம்.

இதற்கிடையே தான் கோவை மாநகர காவல் ஆணையாளர்  பாலகிருஷ்ணன் போலீஸ் மோப்ப நாய் பிரிவில் சேர பெண் போலீசாரிடம் ஆர்வம் உள்ளதா  என்று கேட்டிருந்தார்.

இதையடுத்து நாங்கள் எங்களின் ஆர்வத்தை கூறினோம். அதன்படி தற்போது மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து நாய்களுக்கு அதிகாரிகளின் சொல்லுக்கு கீழ்ப்படிதல், போதை பொருட்களை கண்டறிவது, கொலை, கொள்ளை சம்பவங்களில் துரத்திச்சென்று மோப்பம் பிடிப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது என அவர்கள் தெரிவித்தனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore first time in tamilnadu women police trained dogs labrador retriever