கோவையில் வசித்து வந்த தமன்னா என்ற இளம்பெண் ஆயுதங்களுடன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர காவல் துறையினர் அப்பெண்ணை தேடி வந்தனர்.
அதேசமயம் அந்தப் பெண் தான் தற்பொழுது திருந்தி கணவருடன் வாழ்ந்து வருவதாகவும் ஆறு மாதம் கருவுற்று இருப்பதாகவும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
மேலும் ஆயுதங்களுடன் பதிவிட்ட வீடியோக்கள் எல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்த இளம் பெண் சங்ககிரி பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து அங்கு சென்ற கோவை போலீசார் தமன்னாவை பிடித்து கோவைக்கு அழைத்து வந்து, பீளமேடு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
பின்னர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள இன்றியமையா பண்டகங்கள் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லோகேஸ்வரன் வரும் 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து போலீசார் தமன்னாவை நீதிமன்றத்தில் இருந்து கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
ஏற்கெனவே கடந்த 2021 ஆம் ஆண்டு கஞ்சா வழக்கில் தமன்னா மற்றும் சூரிய பிரசாத் ஆகியோர் மீது பீளமேடு காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை இன்றியமையா பண்டகங்கள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தமன்னா நீதிமன்றத்தில் வாய்தாவிற்கு தொடர்ந்து ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி தமன்னாவிற்கு பிடிவாரண்ட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“