Coimbatore textile industry affected badly during covid19 lockdown : கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் இரண்டு மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, தொழிற்சாலை வேலைகள் அனைத்தும் முடங்கும் நிலை ஏற்பட்டது. நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கடைகள் திறக்கப்பட்டு, வாடிக்கையாளர்களின் வருகைக்காக காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
கோவை ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, உப்புகிணறு வீதி ஆகியவை ஆண்டாண்டு காலமாக, பலதரப்பட்ட மக்களின் தேவைகளுக்காக ஆடைகளை விற்பனை செய்து வருகிறது. இங்கு கோவை மட்டும் இல்லாமல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து ஆடைகளை வாங்கிச் செல்வது வழக்கம். சில்லரை மற்றும் மொத்த வியாபாரமாக நடைபெறும் இந்த ஜவுளி வர்த்தகம் கொரோனா ஊரடங்கிற்கு பிறகும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
கோவை மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரிகள் நிறைய இருக்கின்றன. அநேக மக்கள் இங்கிருக்கும் பனியன் கம்பெனிகளுடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பில் இருப்பார்கள். அதே போன்று இந்த பகுதிகளில் தெருவிற்கு 10 தையற்கடைகளும் இருப்பது வாடிக்கையான ஒன்று தான்.
உப்புகிணர் வீதி
கொங்கு பகுதியில் திருமணத்திற்கு எடுக்கப்படும் ஜவுளிகள் பொதுவாக உப்பு ஜவுளி என்று அழைக்கப்படும். இந்த உப்பு கிணர் வீதியில் இருக்கும் கோவிலில் ஜவுளிகள் வைக்கப்பட்டு, பிரார்த்தனை செய்யப்பட்டு மணமக்கள் தங்களின் வீடுகளுக்கு துணிகளை எடுத்துச் செல்வது வழக்கம். எனவே இது உப்புகிணர் வீதி என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட துணிக்கடைகள், ஃபேன்ஸி, நகைக்கடைகள் இயங்கி வருகிறது. மேல்தட்டு மக்கள் ஆர்.எஸ்.புரம், காந்திபுரம் என்று உடைகளை வாங்க, தையல் கடைகள் வைத்திருப்பவர்களுக்கும், சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் செய்பவர்களுக்குமான தேர்வாக அமைந்துள்ளது இந்த உப்புகிணர் வீதி.
சி.பி.சி.
வட இந்தியாவில் இருந்து இங்கேயே தங்கி, தங்களின் சொந்த தொழிலை துவங்கியவர் சுனில் குமார். 50 ஆண்டுகளாக கோவை உப்புகிணர் வீதியில் இந்த கடையை வைத்து நடத்தி வருகிறார் அவர். கொரோனா ஊரடங்கு அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கடையை மூடிவிட்டதாக கூறும் அவரின் கடையின் முகப்பிலேயே வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை பிரிண்ட் எடுத்து ஒட்டியிருக்கிறார். வாடிக்கையாளர்கள் நிச்சயமாக மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று கூறும் அவரே, கடைக்கு வருகை தருபவர்களுக்கு சானிடைஸரையும் வழங்கி உதவுகிறார். இந்த இரண்டு மாத ஊரடங்கு காலத்தில் தொழில் நடைபெறவில்லை. இருந்த போதும் தன்னுடைய ஊழியர்கள் 15 பேருக்கும் இரண்டு மாத சம்பளத்தையும் வழங்கியுள்ளார்.
கொரோனா ஊரடங்கிற்கு முன்பு இங்கே வரும் வாடிக்கையாளர்களில் 10% பேர் கூட தற்போது கடைகளுக்கு வரவில்லை என்று கூறுகிறார். மேலும் கேரளாவில் இருந்து வந்து இங்கே பர்ச்சேஸ் செய்பவர்கள் அதிகம். மாநிலம் விட்டு மாநிலம் வருவதற்கும் மண்டலம் விட்டு மண்டலம் வருவதற்கும் தடைகள் நீடிப்பதால் அவர்களால் வர இயலவில்லை என்று கூறுகிறார். மேலும் உள்ளூரில் போக்குவரத்து குறைவாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் வரவில்லை என்று கூறுகிறார். ஆனால் தீபாவளிக்கு முன்பு இந்த நிலை மாறும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
தையற்கலைஞர்கள்
மொத்த கடை வீதியையும் ஈர்க்கும் ஒரே விசயம் இந்த தையற்கலைஞர்கள் தான். உப்புகிணர் வீதி, பெரிய கடை வீதி, ராஜவீதி, ஒப்பணக்கார வீதி என அனைத்து பகுதிகளில் ரெடிமேட் ஆடைகள் வாங்கி வரும் மக்கள் அதனை ஆல்ட்டர் செய்வதற்கு உப்புகிணர் வீதியில் இருக்கும் இந்த தையற்கலைஞர்களை தான் அணுகுவார்கள். 20 வருடங்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்ட தையற்கலைஞர்கள் இங்கே பணியாற்றினார்கள். தெருவில் வரிசையாக தையல் மிஷின்களை வைத்து, தேவைக்கு ஏற்றபடி துணிகளை தைத்து தருவார்கள். 50 நபர்கள் இருந்த போது அவர்களுக்கென தனியாக சங்கம் இருந்தது.
ஆனால் தற்போது ஆட்கள் சுருங்கி வெறும் 11 பேர் மட்டுமே இந்த பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். வைசியாள் வீதியில் வசிக்கும் இவர்கள் இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் வட்டிக்கு வாங்கி குடும்ப தேவைகளை கவனித்துக் கொண்டதாக கூறுகிறார் தையற்காரர் துர்கா ராவ். மூன்று தலைமுறைகளாக இவர்கள் தையல் பணியில் தான் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இவர்களை அடுத்து இந்த தொழிலை மேற்கொள்ள அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மறுத்துவிட்டனர். ஊரடங்குக்கு முன்பு தினமும் ரூ.500-க்கு துணிகள் தைத்து கொடுப்போம். மழை காலங்களில் ஒன்றுமே இருக்காது. லாக்டவுனுக்கு பிறகு 10 நாட்களாக தான் நாங்கள் துணிகளை தைத்து வருகின்றோம். ஆனால் நாள் ஒன்றுக்கு ரூ. 200 சம்பாதிப்பதே பெரும்பாடாக இருக்கிறது என்று வருத்தம் தெரிவித்தார். முகூர்த்த தினங்கள், கோவில் திருவிழாக்கள், சாலை போக்குவரத்து இவைகளை நம்பி தான் இனி எங்களின் வியாபாரம் இருக்கும். ஆனால் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் துர்கா ராம்.
மேலும் படிக்க : எங்க தான் கிடைக்கும் இந்த இளநீர் சர்பத்? கோவை மக்களை தேட வைக்கும் சூப்பர் கடை!
குடோன்களில் வேலை பார்க்கும் 2000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும்?
60 நாட்கள் கழித்து இயங்கும் கடைகள் குறித்தும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை குறித்தும் அறிந்து கொள்ள உப்புகிணர் சந்து அனைத்து வியாபாரிகள் மற்றும் குடியிருப்போர் சங்க தலைவர் ராஜகோபாலை சந்தித்து பேசினோம். அவர் கூறிய தகவலின் படி இந்த பகுதில் 200க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் மற்றும் 50 குடியிருப்பு பகுதிகள் இருப்பதை உறுதி செய்தார்.
மேலும் இந்த லாக்டவுன் காலத்தில் இந்த கடைகளுக்காக குடோனில் பணியாற்றும் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்கள், லோட்மேன்கள், அன்லோட்மேன்கள் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் இருக்கும் கடைகளில் நிறைய தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை கடை உரிமையாளர்களே செய்து கொடுத்தனர். இருப்பினும் வட இந்தியர்கள் இந்த பகுதியில் அளவுக்கு அதிகமாக பணியாற்றுகின்றார்கள். அவர்கள் அனைவரையும் கடையின் உரிமையாளர்கள் அவர்கள் வீட்டில் தங்க வைப்பது என்பது நடவாத காரியம். மேலும் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் அளவிற்கு சங்கத்திலும் போதுமான நிதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.
10% குறைவாகவே வாடிக்கையாளர்கள் வருகின்றார்கள். இவர்கள் வருவதால் எங்களுக்கு எந்த விதமான பலனும், நன்மையும் கிடையாது. சிறப்பு பொருளாதார அறிக்கைகள் பலவும் வெளியானது. ஆனால் அதனால் எங்களின் வியாபாரிகளுக்கு எந்தவிதமான பலனும் இல்லை. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : யானைகள் ஏன் கும்கிகள் ஆக்கப்படுகிறது? தமிழக பாகன்களின் கதை தெரியுமா உங்களுக்கு?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
பொருளாதார நிலை மந்தமாக இருப்பதால், மக்களுக்கு தேவையான ஆடைகள் வெளிமாநிலங்களில் தேக்கம் அடைந்துள்ளது. அவை அனைத்தும் இங்கே வரவேண்டும் என்றால் அதற்கு அரசு ஒத்துழைப்பு தேவை. மேலும் மக்கள் நடமாட்டமும் இங்கு குறைவாகவே இருக்கிறது. போதுமான அளவு பேருந்து போக்குவரத்து துவங்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த பகுதிகளில் வியாபாரம் முன்பு போல் நடைபெறும். ஆனால் தற்போது இருக்கும் நிலையில் அது சாத்தியமா என்ற கேள்வி தான் நிலவுகிறது என்று தன்னுடைய கருத்தினை பதிவு செய்துள்ளார் ராஜ கோபால்.
பெரியகடை வீதி என்பது சென்னையின் தியாகராய நகருக்கு ஒப்பானது தான். தனிமனித இடைவெளி பின்பற்றப்படும் என்ற நிலை அனைத்தையும் மக்கள் உணர்ந்து செயல்படுவார்களா என்பதும் கேள்விக்குறிதான். கொரோனாவுக்கு முடிவு இல்லாமல், முன்பை போல் எங்கும் தொழில்கள் சீராக நடைபெறுவதில் சிக்கல்கள் இருந்து கொண்டு தான் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.