கலர் கலரான கனவுகளில் காவிகள் துள்ளுவதாக ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளேடு போட்டுத் தாக்கியிருக்கிறது.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க.வின் அத்தனை அணிகளும் போட்டி போட்டு பா.ஜ.க.வை ஆதரித்தன. அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச்செயலாளரான சசிகலா, துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது வழக்குகள் பாய்ந்ததால், டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மறைமுகமாக பா.ஜ.க.வின் காலை வாரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஒரு வாக்குகூட ‘கிராஸ்’ ஆகாமல், மொத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வின் ராம்நாத் கோவிந்தை ஆதரித்து வாக்களித்திருந்தனர்.
அதேபோல துணை ஜனாதிபதி தேர்தலிலும் அ.தி.மு.க.வின் அனைத்து அணி எம்.பி.க்களும் பா.ஜ.க. வேட்பாளர் வெங்கையா நாயுடுவை ஆதரிக்கிறார்கள். நெடுவாசல், கதிராமங்கலம், நீட் என எந்தப் பிரச்னையிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ மத்திய அரசை விமர்சிப்பதில்லை. டி.டி.வி.தினகரனும்கூட மத்திய அரசுக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதை நிறுத்தி நீண்ட நாட்கள் ஆகிறது.
ஆனால் அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளிதழான ‘நமது எம்.ஜி.ஆர்.’ மட்டுமே அவ்வப்போது பா.ஜ.க.வையும் மத்திய அரசையும் தாக்கிக் கொண்டிருந்தது. அதுவும் அந்த இதழின் 30-வது ஆண்டு விழாவையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால், ‘கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழ்’ என சான்றிதழ் வழங்கப்பட்டபிறகு, மத்திய அரசு மீதான ‘அட்டாக்’கை நமது எம்.ஜி.ஆர். குறைத்திருந்தது. ஆனால் இப்போது முதல்வர் எடப்பாடியும், அவரது அமைச்சரவை சகாக்களும் டெல்லியில் முகாமிட்டிருக்கும் வேளையில் மறுபடியும் பா.ஜ.க. மீதான ‘அட்டாக்’கை தூசு தட்டியிருக்கிறது ‘நமது எம்.ஜி.ஆர்.’
ஜூலை 26-ம் தேதி ‘நமது எம்.ஜி.ஆர்.’ இதழின் கடைசி பக்கத்தில், ‘மதியாலே சதியை வெல்ல’ என்ற தலைப்பில் ‘சித்திரகுப்தன்’ பெயரில் ஒரு கவிதை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், கச்சத்தீவு, காவிரி, முல்லைப் பெரியாறு, மீத்தேன், நெடுவாசல், கதிராமங்கலம், கீழடி, உதய் மின் திட்டம், ஜி.எஸ்.டி., நீட், எய்ம்ஸ் அனுமதி, வர்தா புயல், வறட்சி நிவாரணம் என தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னைகள் அனைத்திலும் வஞ்சிக்கப்பட்டு நிற்பதாக பட்டியல் இடப்பட்டிருக்கிறது.
அடுத்துதான் பா.ஜ.க. மீதான ‘அட்டாக்’! ‘கேட்டது எதுவும் கிடைக்கல.. கெட்டது எதுவும் விலகல.. வெங்கய்யா வந்து விடுகதை சொல்ல.. பொன்னார் வந்து புதுக்கதை சொல்ல.. தமிழிசை வந்து தனிக்கதை சொல்ல.. எச்.ராஜாவோ ‘ஆண்டி இண்டியன்’னு ஆவேசம் கொள்ள.. அறிவுரைகள் அள்ள.. கூடவே கழகங்களில்லா தமிழகம்னு கலர் கலராக கனவுகளில் காவிகள் துள்ள.. கன்னித்தமிழ் பூமியின் கோப அலையை திசைதிருப்ப காதல் கிழவரசனோ கழக அரசை பழித்து கதைகள் பல சொல்ல, மாற்றாந்தாய் போக்கை வெல்ல மன்றாடுது தமிழகம்’ என நீள்கிறது அந்தக் கவிதை!
தமிழகத்தை மாற்றாந்தாய் போக்குடன் மத்திய அரசு அணுகுவதாக வெளிப்படையான விமர்சனத்தை இந்தக் கவிதை மூலமாக ‘நமது எம்.ஜி.ஆர்.’ முன்வைக்கிறது. தவிர, ‘கழகங்கள் இல்லா தமிழகம்’ என்கிற கோஷத்தை முன்வைக்கும் பொன்னார் உள்ளிட்ட தமிழக பா.ஜ.க. தலைவர்களையும் போட்டுத் தாக்குகிறது. கழக அரசை பழிக்க கதை சொல்வதாக, ‘காதல் கிழவரசன்’ என கமல்ஹாசனையும் விமர்சிக்கிறது. இதற்கெல்லாம் மேலாக, ‘தமிழகத்தின் நலனில் அக்கறை உள்ளவர்’ என முன்தினம் எடப்பாடி பழனிச்சாமியால் சான்றிதழ் வழங்கப்பட்ட துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடுவையும் இந்தக் கவிதை விட்டு வைக்கவில்லை.
இதன் பின்னணி குறித்து அ.தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘ஜனாதிபதி தேர்தலில் அம்மா அணி முடிவெடுக்கும் முன்பு மரியாதை நிமித்தமாவது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்தார். ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலில் அதைக்கூட செய்யவில்லை. குறைந்தபட்சம் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுடனும் ஆலோசிக்கவில்லை. அதன் எதிரொலிதான் துணை ஜனாதிபதி வேட்பாளரில் ஆரம்பித்து ஹெச்.ராஜா வரை வெளுத்து வாங்கப்பட்டிருக்கிறார்கள்” என்கிறார்கள் அவர்கள்.
மத்திய அரசு மீதான டி.டி.வி.தினகரனின் கோபமாகவே இந்த கவிதை வரிகள் பார்க்கப்படுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.