சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும், தெலுங்கு சினிமா உலகின் மெகாஸ்டாருமான சிரஞ்சீவி, கடந்த 2008ம் ஆண்டு அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதற்கு 'பிரஜா ராஜ்யம்' என பெயரிட்டார். ஆந்திர மாநிலத்தின் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை சிரஞ்சீவி ஏற்படுத்துவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. 2009ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பலேகொல், திருப்பதி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டதில் திருப்பதியில் மட்டும் சிரஞ்சீவி வெற்றி பெற்றார். ஆனால், அதன் பிறகு அவரால் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்த முடியவில்லை.
இதைத் தொடர்ந்து, 2011ம் ஆண்டு காங்கிரஸில் தனது கட்சியை இணைத்துக் கொண்டு ஐக்கியமாகிவிட்டார். இப்போது மீண்டும் அவர் நடிகராகிவிட்டார்.
கிட்டத்தட்ட ரஜினியைப் போலத் தான் சிரஞ்சீவியின் நிலைமையும் இருந்தது. கடந்த 2007ம் ஆண்டு தெலுங்கில் 'ஷங்கர் தாதா எம்.பி.பி.எஸ்' (தமிழில் 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்') என்ற ஒரு படத்தில் நடித்தார் சிரஞ்சீவி. அதன்பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சில காலம் தனது திரைப்பயணத்திற்கு ஓய்வு கொடுத்திருந்தார். அரசியலுக்கு தான் அவர் இடைவேளை எடுத்துள்ளார் என செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தது. ஆனால், இந்த செய்திகளுக்கு சிரஞ்சீவி மறுப்பும் தெரிவிக்கவில்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை. இதனால், அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என நம்பிய அவரது ரசிகர்கள், விரைவில் சிரஞ்சீவி அரசியல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என அழுத்தம் கொடுத்தனர். அப்போதும் அவர் மவுனம் காக்க, போராட்டம் நடத்தினர். சில ரசிகர்கள் தற்கொலை முயற்சி எடுத்ததாகவும் செய்திகள் உண்டு. சிரஞ்சீவியின் நண்பர்களும் அழுத்தம் கொடுக்க, பெரிதாக விருப்பம் இல்லை என்றாலும், அரசியல் பிரவேசம் செய்தார் சிரஞ்சீவி.
ஆனால், இன்று நிலைமை என்ன? அவரது 'பிரஜா ராஜ்யம்' அரசியல் கட்சி காணாமல் போய்விட்டது. விஜயகாந்த் கூட, இன்றும் தனது கட்சியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், சிரஞ்சீவி காங்கிரசில் ஐக்கியமாகி, இன்று நாம் அரசியலில் இருக்கிறோமா, இல்லையா என்பது அவருக்கே தெரியாமல் உள்ளது.
நிலைமை இப்படியிருக்க, ரஜினி இன்று தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துள்ளார். மற்றவர்களின் அழுத்தத்தால், ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டு இருப்பாரேயானால் நிச்சயம் சிரஞ்சீவியின் நிலைமை தான் ரஜினிக்கும். ரசிகர்கள் சந்திப்பில் பேசும் போது கூட, 'மீடியாக்களை பார்த்தால் தான் எனக்கு பயமாக இருக்கிறது' என கூறியிருக்கிறார். இப்படி அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாமல் அவர் அரசியல் என்ட்ரி கொடுத்து இருந்தால், அவர் ஜெயிப்பது சந்தேகம் தான்.
அதேசமயம், "நான் பணம், புகழுக்காக அரசியலுக்கு வரவில்லை. அதையெல்லாம் நான் கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவிற்கு கொடுத்துவிட்டீர்கள். இனியும் நான் தமிழக மக்களுக்காக நல்லது செய்யவில்லை எனில், அந்த குற்ற உணர்ச்சி சாகும் வரை என்னை உறுத்திக் கொண்டே இருக்கும்" என்று ரஜினி இன்று கூறியிருக்கிறார்.
இதை சம்பிரதாயமான வார்த்தையாக நம்மால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் சொல்வதும் உண்மை தான். இனியும் ரஜினிக்கு சொத்தோ, பேரோ, புகழோ சேர்க்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக, புகழ் என்பதற்கு உச்சம் என்று ஒன்று இருந்தால், அந்த உச்சத்தை மிச்சம் இல்லாமல் அனுபவித்தவர் ரஜினிகாந்த். அதனால், இனி அவர் புதிதாக அதை சம்பாதிக்க தேவையில்லை.
தெளிவான திட்டமிடல், நேர்த்தியான கொள்கை, நடப்பு தேவை என்ன என்பதில் ஆழ்ந்த அறிவு உள்ளிட்டவற்றை ரஜினி சிறப்பாக கையாண்டால், சிரஞ்சீவி போல தோற்காமல், நிச்சயம் அவர் போரில் வெல்வது உறுதி!.