Advertisment

காமராஜரை அவதூறு செய்வதா? தி.மு.க ராஜீவ் காந்திக்கு எதிராக காங்கிரஸ், பா.ஜ.க கண்டனம்

'காமராஜர் சொந்த காசிலா பள்ளிக்கூடங்களை திறந்தார். பெரியார் அறிவுறுத்தி தான் காமராஜர் பள்ளிக்கூடங்களை திறந்தார்' என்று தி.மு.க மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி பேசிய நிலையில், அவருக்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.

author-image
Martin Jeyaraj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Congress BJP condemns DMK student wing President  Rajiv Gandhi for his speech about Kamaraj Tamil News

தி.மு.க. மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, மறைந்த முன்னாள் முன்னாள் காமராஜர் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தி.மு.க-வில் மாநில மாணவரணி தலைவராக இருப்பவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி. நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தற்போது தி.மு.க-வில் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்நிலையில், தி.மு.க. இளைஞரணி அலுவலகம் அமைந்துள்ள சென்னை அன்பகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய தி.மு.க. மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, மறைந்த முன்னாள் முன்னாள் காமராஜர் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisment

அவர் அந்த விழாவில், 'காமராஜர் சொந்த காசிலா பள்ளிக்கூடங்களை திறந்தார். பெரியார் அறிவுறுத்தி தான் காமராஜர் பள்ளிக்கூடங்களை திறந்தார்' என்று பேசியுள்ளார். இந்நிலையில், அவரது பேச்சுக்கு தற்போது காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் அறிக்கையில், "தி.மு.க. இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய, தி.மு.க. மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி, பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசியிருக்கிறார். அவர் வரம்பை மீறி, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்ற பாதுகாப்பில் மிகுந்த ஆணவத்தோடு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியினரின் மனம் புண்படுமாறு பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்க விரும்புகிறேன். இப்படி பேசுவதற்கு அவருக்கு எப்படி துணிவு வந்தது என்று தெரியவில்லை. நாம் தமிழர் கட்சியில் இருந்த போதே தி.மு.க தலைவர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்களையெல்லாம் நாக்கில் நரம்பின்றி மிகமிக கீழ்த்தரமாக பேசியவர். அங்கிருந்து சீமானால் விரட்டப்பட்டு, தி.மு.க.வில் தஞ்சம் புகுந்தவர் தான் ராஜிவ் காந்தி. இத்தகைய பின்னணி கொண்ட ஒருவர் பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை

பெருந்தலைவர் காமராஜர் 1954 ஆம் வருடம் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 13 அன்று முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தி கிடைத்தவுடன் ஆதரிக்க தொடங்கிய தந்தை பெரியார், காமராஜர் ஆட்சி செய்த ஒன்பதரை ஆண்டுகாலமும் பாராட்டி பேசியதை எவரும் மறந்திட இயலாது. 1961 ஆம் ஆண்டில் காரைக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு காமராஜரை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள், அவரை விட்டால் தமிழர்களுக்கு வேறு ஆளே சிக்காது என்று பேசி 1962 தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்காக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரப்புரை மேற்கொண்டவர் தந்தை பெரியார். அவரும், பெருந்தலைவர் காமராஜரும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே எந்தளவிற்கு காமராஜர் ஆட்சியை எப்படி தாங்கி பிடித்தார் என்ற வரலாறெல்லாம் ராஜிவ் காந்தி போன்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

1954 இல் காமராஜர் முதலமைச்சரானதும் குடியாத்தம் இடைத் தேர்தலில் போட்டியிட்ட போது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரைத் தவிர எவரும் எதிர்த்து போட்டியிடவில்லை. தந்தை பெரியார் தீவிரமாக ஆதரித்தார். தி.மு.க. அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கவில்லையே தவிர, அண்ணா அவர்கள் குணாளா, குலக்கொழுந்தே என்று எழுதி ஆதரித்தார். இத்தகைய வரலாற்று பின்னணியோடு தான் பெருந்தலைவர் காமராஜர் தமிழக அரசியலில் கம்பீரமாக வலம் வந்தார்.

தமிழகத்தில் காமராஜரின் ஒன்பதரை ஆண்டுகால ஆட்சியை பொற்கால ஆட்சி என்று பண்டித நேரு உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் சான்றிதழ் கொடுத்த நிலையில், அதை உறுதி செய்து தீவிர பரப்புரை மேற்கொண்டவர் பெரியார்.

ஒருமுறை காமராஜர் ஆட்சியைப் பற்றி குறிப்பிடும் போது, ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக சேர, சோழ, பாண்டியர் ஆட்சிக் காலத்தில் நிகழாத அற்புதங்களெல்லாம் காமராஜர் ஆட்சியில் நிகழ்கிறது என்று வாழ்த்தி மகிழ்ந்தவர் தந்தை பெரியார். அவர் சொல்லித் தான் அன்று முதலமைச்சர் காமராஜர் பள்ளிகளை திறந்தார் என்று கூறுவது அரசியல் அறியாமையை காட்டுகிறது. தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களை காமராஜரின் சொந்த பணத்தை கொண்டா நிறைவேற்றினார் என்று கூறுவது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவது போல் இருக்கிறது. இவரைப் போன்றவர்கள் இப்படி பேச தி.மு.க. தலைமை அனுமதிக்குமேயானால், தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு இதைவிட பெரும் கேடு இருக்க முடியாது. இத்தகைய வரம்பு மீறி பேசிய ராஜிவ்காந்தியை அடக்கி வைப்பது கூட்டணி தர்மத்திற்கு உகந்ததாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

தமிழிசை கண்டனம் 

தி.மு.க-வின் ராஜீவ் காந்தி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "பெருந்தலைவர் காமராஜரை பற்றி திமுக மாணவர் அணி நிர்வாகி ராஜூவ் காந்தியின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி கொண்டு வந்தார் அதற்காக அழகப்பன் கமிட்டி அமைத்து முழுவதுமாக ஆராய்ந்தார்.

6000 மூடிய பள்ளிகளைத் திறந்ததார். 12000 புதிய பள்ளிகளை திறந்தார். 500 மக்கள் தொகை கொண்ட கிராமம் தோறும் பள்ளிகள் திறந்தார். மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராமத்திற்கு ஒரு ஆசிரியர் பள்ளிகள் திறந்தார். பள்ளிகள் திறந்தாலும் பசியோடு குழந்தைகள் படிக்க முடியாது என்பதால் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதனால் 8 ஆண்டுகளில் பள்ளிக்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பானது. 

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் செயல் வீரராக இருந்தார். அவரின் கல்வித் திட்டத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற்று இருக்கிறது. சொந்த காசிலா அவர் பள்ளிக்கூடங்களை திறந்தார் என்று கேள்வி கேட்கிறீர்களே? பெரியார் பெயரில் இன்றளவும் இயங்கிக்கொண்டிருக்கும் தஞ்சை பெரியார் பல்கலைக்கழகம் போன்ற பெரியாரின் சொத்துக்கள் எல்லாம் எப்படி வந்தது என்பதை உங்கள் இனமான  தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டிருப்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். 

தி.மு.க-வினரின் இந்த ஆணவ பேச்சுகளால் பெருந்தலைவர் காமராஜரால் பலன் பெற்ற பலரது மனம் புண்பட்டு இருக்கிறது. கல்விக்கு பெரியார் தான் காரணம் என்று சொல்வது உங்களின் பொய்யுரை. பெரியார் வாய் சொல் வீரராக மட்டுமே இருந்தார். உடனே தமிழக முதல்வர் தலையிட்டு தி.மு.க நிர்வாகி ராஜுவ் காந்தியை கண்டிப்பது மட்டுமல்லாமல் இந்த வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். பெரியாரை ஆராதிக்கிறேன் என்று நினைத்து பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்த வேண்டாம் என்று  எச்சரிக்கிறேன்." என்று கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment