இலங்கைத் தமிழரை அகதிகள் ஆக்கிய காங்கிரஸ் தான் மதவாத கட்சி - தமிழிசை சௌந்திரராஜன்

இஸ்லாமிய நாடான பங்களாதேஷே ரோஹிங்கியா மக்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள மறுத்து திருப்பி அனுப்புகிறது

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மியான்மரில் இருந்து வரும் ரோஹிங்கியா மக்களுக்கு ஆதரவாக பேசி மதவாதத்தை தூண்டும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் பேச்சு கண்டிக்கதக்கது.

ரோஹிங்கியா மக்களின் ISIS தீவிரவாத தொடர்பு குறித்து தகவல் அடிப்படையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அகதிகள் என்ற பெயரில் குடியேறும் தீவிரவாதிகள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்பதால் தான் நாம் அவர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள சிந்தித்து செயல்பட வேண்டி உள்ளது. அவர்களின் பின்புலம் நோக்கம் தெரியாமல் வெறும் இஸ்லாமியர் என்று பார்ப்பது இங்குள்ளவர்களே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இதனை முஸ்லிம்கள் என்பதால் கருணை காட்ட மறுப்பதாக சொல்லி மதசாயம் பூசி இருப்பதை அமைதியை விரும்பும் நம் நாட்டு இஸ்லாமிய சகோதரர்களே ஒற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இதே கருத்தை தான் இஸ்லாமிய நாடான பங்களாதேஷ் பிரதமரே சொல்வதால் அந்த நாடே ரோஹிங்கியா மக்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள மறுத்து திருப்பி அனுப்புகிறது. ஏற்கனவே லட்சக்கணக்கான பங்களாதேஷ் அகதிகள் பிரச்சனை மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக குடியிருப்பதாக கூறப்படும் நிலையில் மியான்மர் அகதிகள் என்ற புது வரவு தேவையா என்ற எச்சரிக்கை தவறில்லையே. இதை வழக்கம்போல் மதத்தின் பெயரால் முன்னிறுத்துவது காங்கிரஸ் என்பதால் நீங்கள் தான் மதவாத கட்சி என்பது நிதர்சனம். நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் மதத்தை புகுத்தி பேசுவது தான் மதவாதம்.

நம் தொப்புள் கொடி உறவுகள் ஆன இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு அளிக்கும் ஆதரவை மியான்மர் ரோஹிங்கியா மக்களுக்கு ஏன் செய்யவில்லை என்று கேள்வி கேட்கும் உமர் அப்துல்லாவை கண்டிக்கும் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா?

காஷ்மீர் பண்டிட்டுகள் நம் மண்ணில் இருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்டபோது அதை பற்றி கவலைப்படாதது அன்றைய காங்கிரஸ் ஆட்சி. அதேபோல் இலங்கையில் இருந்து போராடிய தமிழ் இனத்தை அழிக்க துணை நின்றது காங்கிரஸ்.

நரேந்திர மோடி அரசை பாராட்டி துபாய் இளவரசர் அங்கே அவர்கள் நாட்டில் ஹிந்துக்கள் கோயில் கட்ட நிலம் வழங்குகிறார். பாக்கிஸ்தான் நாட்டில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கானோர் இன்னமும் இங்கு வந்து உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகள் பெற்று திரும்புகிறார்கள். அதேபோல் குஜராத் கடல் எல்லையில் பிடிபடும் பாகிஸ்தான் மீனவர்கள் பத்திரமாக எச்சரித்து உயிருடன் திரும்புகிறார்கள். இங்குள்ள முஸ்லீம் சகோதரர்களுக்கு வேண்டிய உதவிகளும் பாதுகாப்புகளும் மோடி அரசு அளிக்கிறது. ஆண்டு தோறும் நடக்கும் ஹஜ் யாத்திரைக்கு காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட அதிகம் பேர் அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.

வெளிநாடுகளில் தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொள்ளும் அப்பாவி இந்தியர்கள் குறிப்பாக பல தமிழர்கள் மரணத்தில் இருந்து காப்பாற்றியது மோடி அரசு” என்று தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close