திமுக காங்கிரஸ் கூட்டணி சிதறாமல் சட்டமன்றத் தேர்தலை சந்தித்ததில் முக்கிய பங்கு வகித்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக கருதப்படும் பீட்டர் அல்போன்ஸ் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் யாருக்கு எந்த பதவி அளிக்கப்பட்டாலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிடுவார். ஆனால், பீட்டர் அல்போன்சுக்கு வாழ்த்து தெரிவித்து அப்படி அறிக்கை வெளியிடவில்லை. அதனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கும் பீட்டர் அல்போன்சுக்கும் இடையே முரண்பாடு நிலவுவதாக பேச்சுகள் எழுந்தன.
தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள பீட்டர் அல்போன்ஸ் அந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்கிறார்கள் காங்கிரஸில் உள்ள தொண்டர்கள். சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கிறிஸ்தவ பிஷப்களுடன் நெருக்கமாக இருப்பவர். சிறுபான்மையினர் சம்பந்தமான அரசின் கொள்கைகளைப் பற்றி மிகவும் விழிப்புடன் செயல்படுபவர். அதனால், பிஷப்கள் மத்தியில் பீட்டர் அல்போன்ஸ்க்கு நல்ல செல்வாக்கு உள்ளது என்கின்றனர்.
அது மட்டுமில்லாமல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, சில விஷயங்களில் பீட்டர் அல்போன்ஸை அழைத்து ஆலோசனை நடத்தி கருத்துகளைக் கேட்டிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸில் திமுகவை விமர்சித்த சிலர், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற தொணியில் பேசினார்கள். அப்போதெல்லாம், பீட்டர் அல்போன்ஸ், அவர்களுக்கு எதார்த்தத்தையும் மக்கள் மனநிலையையும் புரிய வைத்து, திமுக எதிர்ப்புக் குரலை அடக்கி, திமுக - காங்கிரஸ் கூட்டணியை சிதறாமல் பாதுகாத்துக் கொண்டுவந்தார். இன்றைக்கு திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு பீட்டர் அல்போன்ஸ்தான் காரணம் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரங்கள்.
தமிழ்நாடு காங்கிரஸில் திமுக ஆதரவாளர் என்று கூறப்படும் பீட்டர் அல்போன்ஸ்க்கு தேர்தலின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்கு தேவையான தொகுதியை ஒதுக்குவதாக முன்வந்து காங்கிரஸ் கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அப்போது, பீட்டர் அல்போன்ஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல், அவருடைய மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனால், பீட்டர் அல்போன்ஸ் தேர்தலில் கவனம் செலுத்த முடியாது என்று கூறி தேர்தலில் போட்டியிட அளிக்கப்பட்ட வாய்ப்பை மறுத்துவிட்டார் என்கிறார்கள். பீட்டர் அல்போன்ஸ் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் செய்ய முடியுமா என்று மு.க.ஸ்டாலின் கேட்டபோது, தன்னால் முடிந்த வரை செய்கிறேன் என்றுதான் தெரிவித்தார். ஓரளவு உடல்நிலை சரியான பிறகு, பீட்டர் அல்போன்ஸ் 4 -5 தொகுதிகளில்தான் பிரச்சாரம் செய்தார். அந்த சூழ்நிலையிலும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவராக செயல்பட்டு தேர்தல் அறிக்கையையும் தயாரித்துக் கொடுத்தார். அதனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முதலமைச்சர் பீட்டருக்கு ஏதேனும் ஒரு பொறுப்பு தரவேண்டும் என்று முடிவு செய்து அவரை, மிகவும் பொருத்தமான, சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்துள்ளார் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரங்கள்.
அதே நேரத்தில் பீட்டர் அல்போன்ஸை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு தெரியாமல் நியமனம் செய்யவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டுவிட்டுதான் பீட்டர் அல்போன்ஸை சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்தார். அறிவிப்பு வெளியானதும் பீட்டர் அல்போன்ஸ் கே.எஸ்.அழகிரிக்கு போனில் நன்றி கூறினார். அதனால், இதில் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிடுவதற்கு ஒன்றுமில்லை. இருவருக்கும் இடையே எந்த உரசலும் இல்லை. பீட்டர் அல்போன்ஸ் புரோ காங்கிரஸ் ஆனாலும் அல்லது புரோ திமுகவானாலும் எத்தனை விமர்சனம் இருந்தாலும் அவர் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைவதற்கு காரணமாக இருந்தவர். அதனால், அவருக்கான கௌரவம் கிடைத்துள்ளது என்கிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.