காங்கிரஸ் கட்சியில் கடும் போட்டிக்கு மத்தியில் அக்கட்சியின் திருப்பெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலத்துக்குப் பிறகு பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மிக முக்கிய பதவி அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்றிருக்கும் செல்வப்பெருந்தகை தலித் இயக்கங்களில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர். அவர் செல்பேசி வழியாக தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு நேர்காணல் அளித்தார்.
கேள்வி: ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். இந்த சட்டமன்றத்தில் பல கட்சிகளின் அனுபவம் வாய்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள் எப்படி உணர்கிறீர்கள்?
செல்வப்பெருந்தகை: ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆரோக்கியமாக இருக்கிறது. ஏனென்றால், விவரமானவர்கள் மத்தியில்தான் நாம் உரையாற்ற முடியும், விவரமானவர்களுக்கு நிறைய புரிந்தல் இருக்கும். அதனால், இந்த சட்டமன்றம் ஒரு ஆரோக்கியமான விவாதங்களுக்கு உட்பட்ட சட்டமன்றமாக இருக்கும். மக்கள் பிரச்னையை நிறைய பேசலாம்.
கேள்வி: உங்களுடைய குடும்ப பின்னணி மற்றும் உங்களுடைய அரசியல் பயணம் பற்றி கூறுங்கள்.
செல்வப்பெருந்தகை: எனக்கு மனைவி உமையாள், எனக்கு ஒரே மகள் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். அரசியல் என்றால், நான் சிறிய வயதில் இருந்து கம்யூனிஸத்தின் பால் ஈர்க்கப்பட்டவன். பொதுவுடைமைக் கட்சியால் ஈர்க்கப்பட்டவன். பொதுவுடமைக் கட்சி என்றால் எனக்கு ஆரம்பத்திலேயே பிடிக்கும். ஆனால், அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அதனால், நான் தலித் இயக்கங்களில் நிறைய பணியாற்றி இருக்கிறேன். இன்றைக்கு பெரிய அளவில் சொல்கிற மாதிரி இருக்கிற தலித் இயக்கங்களில் எல்லாம் என்னுடைய பங்களிப்பு இருந்திருக்கிறது. சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அங்கிருந்து பணியாற்ற இயலாததால் நான் காங்கிரஸ் பேரியக்கத்தை தேர்ந்தெடுத்தேன். இப்போது காங்கிரஸ் பேரியக்கத்திலே பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். நான் சேர்ந்த உடனேயே எனக்கு, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கொடுத்தார்கள். வெற்றி வாய்ப்பு நழுவவிட்டோம். மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கொடுத்தார்கள் அப்போதும் வெற்றி வாய்ப்பை தவறவிட்டோம். இந்தமுறை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள் மக்கள். 3 முறையும் எனக்கு தொகுதிகளை ஒதுக்கிகொடுத்த எனது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வெற்றி பெற்ற பின்னர் சட்டமன்றத் தலைவராக என்னை நியமித்திருக்கிறார்கள்.
கேள்வி: காங்கிரஸ் கட்சியில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு ஒரு கடுமையான போட்டி இருந்தது இல்லையா?
செல்வப்பெருந்தகை: எல்லோரும் கேட்டார்கள், அவரவர்களுக்கு கேட்பதற்கு உரிமை உண்டு. ஆனால், தேர்தலும் வைத்தார்கள். எல்லோருடைய அபிப்ராயத்தைக் கேட்டார்கள். டெல்லி தலைமையில் இருந்து மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர், முதிர்ச்சியான தலைவர் இப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார், முன்னாள் மத்திய கேபினேட் அமைச்சராக இருந்தவர். அதே போன்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வைத்தியலிங்கம் அவர்களை அனுப்பி ஒரு கலந்துரையாடல் நடத்தி 18 சட்டமன்ற உறுப்பினர்களிடம் யாரை நியமித்தால், இந்த காலகட்டத்தில் சரியாக இருக்கும் என்று கேட்டார்கள். அந்த அடிப்படையில் இவர்கள், திரட்டிய தரவுகள் அனைத்தையும் அன்னை சோனியா காந்தியிடமும் தலைவர் ராகுல் காந்தியிடமும் கொடுத்தார்கள். நீண்ட நெடிய விவாதத்திற்குப் பிறகு, என்னை சட்டமன்றக் குழு தலைவராக அறிவித்தார்கள்.
கேள்வி: நீங்கள் இதற்கு முன்பு தலித் கட்சிகளில் இருந்திருக்கிறீர்கள், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறீர்கள். இப்போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருக்கிறீர்கள். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக அறிவித்துள்ளார்கள். ஒரு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் ஒரு பட்டியல் இனத்தவருக்கு முக்கிய பொறுப்பு அளித்திருக்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
செல்வப்பெருந்தகை: காங்கிரஸ் பேரியக்கம் மட்டும்தான் தொடந்து தலித் மக்களை, ஒடுக்கப்பட்ட மக்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள், அரசியல் ஆளுமைக்கு ஆளாக்கி இருக்கிறார்கள். காங்கிரஸில் தலித்துகள் அதிகாரம் பெறமுடியும் என்பதை தொடர்ந்து நிரூபித்திருக்கிறார்கள். அப்போது நீதிக்கட்சி இருந்தது. நீதிக்கட்சி எதற்காகப் போராடினார்களோ, அவர்களே தலித்துகளுக்கு அமைச்சரவையில் இடம்கொடுக்கவில்லை. ஆனால், ராஜகோபாலாச்சாரி தலைமையில் காங்கிரஸ் பேரியக்கம் ஆட்சிக்கு வந்தபிறகு, முதல்முதலில் வி.எம்.முனுசாமி என்பவரை அமைச்சராக்கினார்கள். கேபினேட் அமைச்சராக்கினார்கள். இப்படிப்பட்ட வரலாறு சுதந்திரத்திற்கு முன்பே காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்திருக்கிறது. அந்த அடிப்படையிலேயே கக்கன், இளையபெருமாள், மரகதம் சந்திரசேகர், பரமேஸ்வரன் ஆகியோர் காங்கிரஸில் முக்கிய தலைவர்களாக இருந்துள்ளனர். கக்கன் உள்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். பரமேஸ்வரன் இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒரு தலித் காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கிறார். கர்நாடகாவில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் தலைவராக இருக்கிறார். துணை முதலமைச்சராக இருந்திருக்கிறார். உள்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். ஆகவே, இன்று தலித்துகளை அடையாளப்படுத்துகின்ற, உண்மையாக அரசியல் அதிகாரப்படுத்துகின்ற ஒரே இயக்கம் காங்கிரஸ் பேரியக்கம்தான். அந்த அடிப்படையில்தான், காங்கிரஸைப் பொறுத்தவரை முதல்முறை சட்டமன்ற உறுப்பினர் நான். ஆனால், 4 முறை, 3முறை சட்டமன்ற உறுப்பினராகி உள்ளவர்களும் இருக்கிறார்கள். இருப்பினும், சமூக நீதி அடிப்படையிலே, இவர்களுக்கு இந்த வாய்ப்பை தர வேண்டும். இவர்களால்தான் உண்மையாக திறமையாக வாதாட முடியும். கட்சியை வளர்க்க முடியும் என்ற அடிப்படையிலே என்னை அறிவித்திருக்கிறார்கள்.
கேள்வி: காங்கிரஸ் கட்சியில் தங்களை கக்கன், இளையபெருமாள், பரமேஸ்வரன், மரகதம் சந்திரசேகர் ஆகியோரின் தொடர்ச்சி என்று எடுத்துக்கொள்ளலாமா?
செல்வப்பெருந்தகை: நிச்சயமாக, முன்னாள் மத்திய அமைச்சர் மரகதம் சந்திரசேகர் அம்மையார், முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் பரமேஸ்வரன், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஐயா இளையபெருமாள் இவர்களின் தொடர்ச்சிதான். அவர்களுக்குப் பிறகு, இந்த பொறுப்பிலே என்னை நியமித்திருக்கிறார்கள்.
கேள்வி: நீங்கள் தலித் இயக்கங்களிலும் தலித் கட்சிகளிலும் வேலை செய்துவிட்டு ஒரு தேசிய மைய நீரோட்ட கட்சிக்கு வந்திருக்கிறீர்கள். இங்கே உங்களுடைய தனித்துவத்துடன் தொடர்ந்து செயல்படுவீர்களா? அதாவது தலித் பிரச்னைகளை தொடர்ந்து பேசுவீர்களா?
செல்வப்பெருந்தகை: நான் கடந்த 11 ஆண்டுகளாக தனித்துவத்துடன் தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் எல்லோருக்குமான கட்சி. தலித் பிரச்னைகளை இந்த கட்சியில்தான் பேசமுடியும். வேறு எந்த கட்சியிலும் பேச முடியாது.
உதராணத்துக்கு, உத்தரப் பிரதேசத்தில் அத்ராஸ் என்ற கிராமத்தில், ஒரு தலித் பெண்ணை பட்டப்பகலில் கற்பழித்து கொடூரமாக கொலை செய்தார்கள். அந்த பெண்ணுக்காக இந்தியாவில் முதலில் யாரும் குரல் எழுப்பவில்லை. யாரும் அந்த கிராமத்துக்கு போகவில்லை. யாரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு போகவில்லை. அங்கே, எங்கள் தலைவர் ராகுல்காந்திதான் போனார். தலித் பிரச்னையை யார் கையில் எடுக்கிறார்கள். தலித்துகளைப் பற்றி யார் திரும்பி பார்க்கிறார்கள். நீலிக் கண்ணீர் வடித்தால் மட்டும் போதாது. தலித்துகளுடைய உண்மையான பிரச்னைகளை கையிலெடுக்க வேண்டும். அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். வண்கொடுமைகளை எதிர்த்துப் போராட வேண்டும். அப்படி இருக்கின்ற ஒரு தலைவர் என்றால், அது எங்கள் தலைவர் ராகுல் காந்தி மட்டும்தான். ஆகவே காங்கிரஸ் கட்சியில்தான் எல்லாப் பிரச்னைகளையும் பேசலாம். யார் யார் எல்லாம் தாக்கப்படுகிறார்களோ, யார் யார் எல்லாம் புறக்கணிக்கப்படுகிறார்களோ, ஜாதி மத பேதம் இல்லாமல் அனைவருக்காகவும் குரல் கொடுப்போம். எல்லா வகையிலும், தலித்துகளுக்கு பாதுகாப்பான கட்சி காங்கிரஸ் பேரியக்கம்தான்.
கேள்வி: தமிழ்நாடு சட்சமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு உங்களுடன் பலரும் போட்டியிட்டார்கள். அவர்கள் சட்டமன்ற நடவடிக்கைகளில் உங்களுக்கு எந்த அளவுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள். நீங்கள் எந்த அளவுக்கு அவர்களை அரவணைத்துச் செல்வீர்கள்?
செல்வப்பெருந்தகை: தாராளமாக அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்வேன். எனக்கு அனைவரும் வாழ்த்து சொன்னார்கள். தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள். கலந்துரையாடலும் நடந்துகொண்டிருக்கிறது.
கேள்வி: 7 பேர் விடுதலை பற்றி ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இது தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசியிருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த 7 பேர் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் நீங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்.
செல்வப்பெருந்தகை: இந்த வழக்கைப் பொறுத்தவரை எங்களுடைய அகில இந்திய தலைமை ரொம்ப தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். எங்களுடைய மாநில தலைவரும் ரொம்ப தெளிவாக அறிக்கை கொடுத்திருக்கிறார். அவர்களின் நிலைப்பாட்டை காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில், சட்டமன்றத்திலே எங்களின் குரல் ஒலிக்கும். அந்த வழக்கை, நீங்கள் எப்படி சொல்ல வேண்டும் என்றால், தலைவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்று சொல்லக்கூடாது. திருப்பெரும்புதூர் கொலை வழக்கு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், அவருடன் 15 தமிழர்கள் இறந்திருக்கிறார்கள்.
கேள்வி: 7 பேர் விடுதலையை உங்கள் கூட்டணி கட்சி முழுமையாக ஆதரிக்கிறார்கள் அதைப் பற்றி?
செல்வப்பெருந்தகை: ஒவ்வொரு கட்சிக்கும் அவர்களுக்கென பேச்சுரிமை, எழுத்துரிமை இருக்கும். அவரவருக்கென ஒரு கொள்கை இருக்கும். ஒருவர் சொல்கிறார் என்பதால் அவர்கள் சொல்வது தவறு என்று சொல்ல முடியாது. எங்களுடைய பார்வை, எங்களுடைய முடிவு அதைத்தான் பேச முடியும்.
கேள்வி: 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு கூட்டணிக்குள் பிரச்னையை ஏற்படுத்தாதா?
செல்வப்பெருந்தகை: இது கூட்டணிக்குள் ஒரு பிரச்னையையும் ஏற்படுத்தாது. நாங்கள் இப்போது கூட்டணிக்குள்தானே இருக்கிறோம். பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை.
கேள்வி: 7 பேர் விடுதலையை எதிர்க்க காங்கிரஸ் கட்சி எந்த அளவுக்கு தயாராக இருக்கிறீர்கள்?
செல்வப்பெருந்தகை: ஏற்கெனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அண்ணன் அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையும் எங்கள் தலைவர் ராகுல் காந்தி சொன்னதும்தான் மையப்புள்ளி. இதைத்தான் நாங்கள் பேசுவோம்.
கேள்வி: சட்டமன்றத்தில் என்ன மாதிரியான பிரச்னைகளைக் கொண்டு போக திட்டமிட்டு வருகிறீர்கள்?
செல்வப்பெருந்தகை: மக்கள் பிரச்னைகளை கண்டிப்பாக நாங்கள் அரசின் கவனத்துக்கு கொண்டுபோவோம். முந்தைய அரசு மாதிரி பேசுவதற்கு வாய்ப்பு இல்லாத அரசு போல இந்த அரசு இல்லை. பேசுவதற்கு வாய்ப்பு கொடுப்பார்கள். இதற்கு முன்பு 2011 வரை கலைஞருடைய அமைச்சரவை இருக்கும்போது, நாங்கள் நிறைய பேசியிருக்கிறோம். மக்கள் பிரச்னையை அணுகியிருக்கிறோம். நிறைய வாய்ப்பு கொடுப்பார்கள் என்ற அந்த நம்பிக்கை இருக்கிறது. அன்றாடம் என்ன மக்கள் பிரச்னை இருக்கிறதோ அதை சட்டப் பேரவையில் கவனத்திற்கு கொண்டுபோவோம்.
கேள்வி: இந்த சட்டமன்றம் சவாலாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
செல்வப் பெருந்தகை: சவாலாக இருக்காது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். மக்கள் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்வு காண்பதற்கு ஏதுவாக இருக்கும். ஏனென்றால், இங்கே சர்வாதிகாரம் இருக்காது. ஜனநாயக வழியிலே பேரவை நடக்கும். இந்த கொரோனா பேரிடர் காலத்தில் முதல் அமைச்சர் தினம் இரவு பகலாக உழைத்துக்கொண்டிருக்கிறார். அமைச்சர்களும் தங்களுடைய பணிகளை செம்மையாக செய்துகொண்டிருக்கிறார்கள்.
கேள்வி: தாங்கள் காங்கிரஸ் கட்சியில் ஒரு எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவராக இருந்து சட்டமன்ற கட்சி தலைவராகி இருக்கிறீர்கள். இது தலித்துகளுக்கு காங்கிரஸ் கட்சி மீது எந்த அளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது? தலித்துகளை காங்கிரஸ் கட்சியை நோக்கி இழுப்பதற்கு ஏதேனும் திட்டங்கள் இருக்கிறதா?
செல்வப்பெருந்தகை: நாங்கள் தொடர்ந்து 11 - 12 வருஷமா அந்த வேலைத் திட்டங்களை செய்து வந்துகொண்டிருக்கிறோம். அந்த வேலைத் திட்டத்தின் அடிப்படையில்தான் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் ஒரு தலித் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மாணவர் காங்கிரஸ் தேர்தலில் ஒரு தலித் போட்டியிட்டு முதல் இடத்தைப் பிடித்தார். இப்படி காங்கிரஸ் கட்சியில் கடந்த 10 வருடமாக தலித்துகளின் வரவு நடந்துகொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் பார்த்தீர்கள் என்றால், பட்டியல் இன மக்கள் குறிப்பாக, காங்கிரஸ் கூட்டணிக்கு காங்கிரஸ், திமுக, பொதுவுடமைக் கட்சிகள், விசிக போன்ற கட்சிகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இதனை, அவர்களுடைய வாக்குகள் எப்படி விழுந்திருக்கிறது என்பதைப் பார்த்தாலே தெரியும். நாங்கள் ஒரு ஆய்வு செய்திருக்கிறோம். ஒரு பகுதியில் பூத் நம்பர் எந்த பகுதியில் இருக்கிறதோ, அந்த பகுதியில் யார் வசிக்கிறார்கள் என்று பார்த்ததில் பட்டியல் இன மக்கள் எங்கெல்லாம் அதிகமாக வசிக்கிறார்களோ அங்கெல்லாம் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஏராளமான வாக்குகள் வந்திருக்கிறது. குறிப்பாக என்னுடைய தொகுதியிலேயே அதை கண்கூடாக பார்க்க முடிந்தது.
அவர்கள் நீண்ட நெடிய நாட்களுக்குப் பிறகு காங்கிரஸ் பேரியக்கத்தை திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள்.
கேள்வி: காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு குழுக்கள் இருக்கிறது. இது வெளியே பேசப்படுகிற ஒன்றுதான். இதனை நீங்கள் எப்படி கையாளப் போகிறீர்கள். நீங்களும் ஒரு குழுவாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதா?
செல்வப்பெருந்தகை: எனக்கு எந்த குழுக்களும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை எனக்கு தலைவர் ராகுல் காந்தி அவர்கள். ராகுல் காந்தி என்ன நினைக்கிறாரோ, என்ன விரும்புகிறாரோ, நான் அதை நிறைவேற்றுவேன்.
கேள்வி: இந்த கொரோனா பெருந்தோற்று காலத்தில் உங்களுடைய தொகுதியில் என்ன மாதிரியான பணிகளை செய்து வருகிறீர்கள்?
செல்வப்பெருந்தகை: கொரோனா பெருந்தொற்று காலத்தில், தொகுதியில் வார் ரூம் அமைத்திருக்கிறோம். அந்த வார் ரூமில் 24 மணிநேரமும் 20 பேர் கொரோனா தடுப்பு தொடர்பாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் விட்டிருக்கிறோம். தொடர்ந்து பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உள் நோயாளிகளுக்கு தினம் தினம் அவர்களை சந்தித்து பேசுவதற்கு கவச உடை அணிந்த கொரோனா வாரியர்கள் என்ற ஒரு ‘டீம்’ஐ உருவாக்கி அவர்கள் உணவு கொடுப்பது உள்ளிட்ட தேவையான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தடுப்பூசி திட்டமும் நடத்திவருகிறோம். கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அவர்களுக்கு பதிவு செய்வது, முகாம் அமைப்பது, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை எடுப்பது, அதற்கும் மேல், எங்கள் தொகுதியில் தினமும் 360 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்கிறார்கள். அதிலிருந்து ஏழை எளிய மக்களுக்கு, யாருக்கெல்லாம் ஆக்ஸிஜன் தேவை இருக்கிறதோ அவர்களுக்கு ரூ.17.20-க்கு ஒரு லிட்டர் ஆக்ஸிஜன் ‘பி’ டைப் சிலிண்டரில் வழங்கி சேவை செய்து வருகிறார்கள். இதையெல்லாம், ராஜீவ் காந்தி பெயரில் உள்ள கொரோனா வாரியர்கள் செய்து வருகிறார்கள். மக்கள் 24 மணி நேரமும் கொரோனா வாரியர்களை தொடர்புகொள்ள ‘டோல் ஃபிரீ’ நம்பர் இருக்கிறது.
கேள்வி: காங்கிரஸ் கட்சியில் இருந்து தலித்துகளுக்கு என்ன மாதிரியான அழைப்பை விடுக்கிறீர்கள்.
செல்வப்பெருந்தகை: அகில இந்திய அளவில், ஷெட்யூல் இன மக்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் தரும் ஒரே இயக்கம் அகில இந்திய அளவில் காங்கிரஸ் பேரியக்கம்தான். அவர்களின் உரிமைக்காக குரல்கொடுக்கிற இயக்கம் காங்கிரஸ் பேரியக்கம். ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்து இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தது வரை தொடர்ந்து தலித்துகளுக்கு உரிமைகளை மீட்டுக் கொடுப்பதில் அவர்கள் தெளிவாக இருந்திருக்கிறார்கள்.
கேள்வி: இப்படி அரசியல் கட்சிகளில் தலித் மக்களுக்கு ஆதரவான குரல் என்பது மாநிலத்திலோ அல்லது தேசிய அளவிலோ காங்கிரஸ் கட்சியைவிட மற்ற கட்சிகளில் குறைவாக இருக்கிறது என்கிறீர்களா?
செல்வப்பெருந்தகை: நிறைய தலித் மக்கள் இயக்கம் இருக்கிற ஒரே கட்சி காங்கிரஸ் பேரியக்கம்தான். எப்போதெல்லாம், அன்னை இந்திரா காந்தியின் குடும்பம் கட்சியில் தலைமை தாங்குகிறார்களோ, அப்போதெல்லாம், ஷெட்யூல் இன மக்கள், தலித் மக்கள் நம்பிக்கையோடு காங்கிரஸ் பேரியக்கத்தை நோக்கி வருவார்கள். எப்போதெல்லாம், இந்திரா காந்தியின் குடும்பம் தலைமையில் இல்லையோ அப்போதெல்லாம், தலித் மக்களுக்கு ஒரு நம்பகத் தன்மையில்லாமல் போகிறது. அப்போது அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். இதுதான் கள யதார்த்தம். தலைவர் ராகுல் காந்தி தலைவராக இருக்கிறார், அன்னை சோனியா காந்தி தலைவராக இருக்கிறார் என்றால் தலித் மக்களுக்கு ஒரு நம்பிகை வருகிறது. எங்களுடைய பாதுகாவலர்கள் தலைவராக இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையோடு பணியாற்றுகிறார்கள்.
கேள்வி: மாநிலத்தில் தலித்துகள் மீது ஏதேனும் வன்கொடுமைகள் நடந்தால், தனித் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிற பொதுக்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் யாரும் குரல் கொடுப்பதில்லை என்ற விமர்சனங்கள் இருக்கிறது. நீங்கள் தலித் இயக்கங்களில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்திருக்கிறீர்கள். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராகி இருக்கிறீர்கள் நீங்கள் எந்த அளவுக்கு குரல் கொடுப்பீர்கள்?
செல்வப்பெருந்தகை: அவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கலாம். அதை தாண்டி அவர்கள் குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தேர்தலில் அவர்கள் மக்களைச் சென்று சந்திக்க முடியும். ஷெட்யூல் இன மக்கள் பாதிக்கப்பட்டால் குரல் கொடுக்காதீர்கள் என்று எந்தக் கட்சி தலைவரும் சொல்வது கிடையாது. ஆனால், இவர்களுக்குள்ளேயே ஒரு அச்ச உணர்வு இருக்கிறது. இவர்களுக்குள்ளேயே இருக்கிற தாழ்வு மனப்பான்மைதான் காரணம்.
கேள்வி: இந்த அச்ச உணர்வு என்பது தலித் பிரச்னைகளை பேசினால், மற்ற சமூகத்தவர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்ச உணர்வா?
செல்வப்பெருந்தகை: அப்படியெல்லாம் இல்லை; இந்த வன்கொடுமைகள், கற்பழிப்பு, கொலை போன்ற வன்கொடுமைகளை மற்ற சமூகத்தினர் அவர்களே வெறுக்கிற நிலைமை வந்துள்ளது. இது போன்ற வன்முறைகள் இருக்குதான். ஆனால், அது தமிழ்நாட்டில் குறைந்து வந்திருக்கிறது. சில அரசியல் கட்சிகள், சில இயக்கங்கள் தூண்டி விடுகிறார்கள். அதை தூண்டிவிட்டு குளிர் காய வேண்டும் என நினைக்கிறார்கள். இது எல்லா இயக்கங்களிலும் உண்டு. இது தலித் இயக்கங்களிலும் இருக்கிறது. தலித் அல்லாத இயக்கங்களிலும் இருக்கிறது. அதை மக்கள் முறியடிக்க வேண்டும்.
கேள்வி: அப்போது, சமூகங்களுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்த ஒரு இயக்கம் வர வேண்டும் இல்லையா?
செல்வப்பெருந்தகை: நிச்சயமாக வர வேண்டும். தமிழ்த் தேசிய கட்சிகள் எல்லாம், தமிழைப் பற்றி பேசுகிறார்கள். தமிழர் நலனைப் பற்றி பேசுகிறார்கள். எங்காவது தலித்துகள் மீது வன்முறை தாக்குதல் நடந்தால் அங்கே முதலில் போய் நிற்க வேண்டும் இல்லையா. எம்.எல்.ஏ.க்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேட்டீர்கள், அவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கலாம். அவர்களுக்கு சில அச்சம் இருக்கலாம். பொதுவான கட்சிகள் குரல் கொடுக்கிறது. தமிழ்த்தேசிய கட்சிகள் என்று சொல்லிக் கொள்கிற கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு முன்னால் நிற்க வேண்டும் இல்லையா? ஆனால், அதையெல்லாம் பார்ப்பதற்கு அரிதாக இருக்கிறது. அவர்களுக்கு இந்த மக்கள் மேல் அக்கறை இருக்க வேண்டும். 2000 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வன்கொடுமை நடக்கிறது என்றால் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், ஏன் குரல் கொடுக்க மாட்டேங்கிறார்கள். நீங்கள் தமிழ்த் தேசியக் கட்சியைக் கேளுங்கள். தமிழ் தமிழர் என்கிறீர்கள், தமிழர் என்றால் யார் தமிழர், இவர்கள் எல்லாம் பச்சைத் தமிழர்கள் இல்லையா? இவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டாமா? ஏன் குரல் கொடுக்க மாட்டேங்கிறார்கள்.
கேள்வி: இந்த விமர்சனம் திமுக, அதிமுக போன்ற பொதுக் கட்சிகள் மீதும் வைக்கப்படுகிறதே?
செல்வப்பெருந்தகை: திமுகவை அப்படி சொல்ல முடியாது. இதில் திமுகவையும் அதிமுகவையும் ஒப்பிட முடியாது. திமுக தலித்துகளுக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறது.
நான் தொடர்ந்து 12 -13 வருடமாக காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்து தலித் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டு வருகிறேன். எஸ்.சி மக்களுக்கு வன்கொடுமை நடந்தாலும் குரல் கொடுப்போம். தாழ்த்தப்பட்ட அல்லாத மக்களுக்கு வன்கொடுமை நடந்தாலும் குரல் கொடுப்போம்.
கேள்வி: ஆணவக் கொலைகள் தடுப்பதற்கு தனிச்சட்டம் கொண்டுவருவது பற்றி பேச ஏதேனும் திட்டம் இருக்கிறதா?
செல்வப்பெருந்தகை: அதையெல்லாம், வருகிற சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசுவோம். நிறைய விஷயங்கள் இருக்கிறது. சட்டமன்றம் நடக்கும்போது வாருங்கள் பேசுவோம் என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.