தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று சட்டப்பேரவையில் பதவியேற்பும் நடந்து முடிந்தது. அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதுதான் பெரும் போட்டியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் சட்டமன்றக் குழு தலைவரை தேர்ந்தெடுப்பதில்தான் கடுமையான போட்டி நிலவுகிறது. அதற்கான ஆலோசனை கூட்டத்தில் முடிவு எட்டபடாமல் இழுபறி நிலவுகிறது.
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில், சட்டமன்றக் குழு தலைவர் பதவிக்கு விஜயதாரணி, எஸ்.ஆர்.முனிரத்தினம், ராஜேஷ்குமார், பிரின்ஸ், செல்வப்பெருந்தகை கடுமையான போட்டி நிலவுகிறது.
சட்டமன்றக் குழு தலைவரை தேர்வு செய்வதற்காக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் மே7-ம் தேதி முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பதற்கான அதிகாரத்தை கட்சியின் தேசிய தலைவர் சோனியாகாந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டமன்றக் குழு தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவியது. காங்கிரஸ் கட்சியில் சட்டமன்றக் குழு தலைவர் பதவிக்கு ஏன் கடுமையான போட்டி நிலவுகிறது என்றால், அந்த பதவி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு நிகரான பதவி ஆகும். அதனால்தான் கடுமையான போட்டி நிலவுகிறது.
அதனால், காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் யார் என்று தேர்வு செய்வதற்காக, காங்கிரஸ் தேசிய தலைமையின் உத்தரவின் பேரில், புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக நேற்று (மே 19) சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். இதையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து அறியும் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு, கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலையால், கொரோனா பாதிப்பு கடுமையாக இருக்கும் சூழலில் அனைவரும் பாதுகாப்புடன் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பதவிக்கு விஜயதாரணி, எஸ்.ஆர்.முனிரத்தினம், ராஜேஷ்குமார், பிரின்ஸ், செல்வப்பெருந்தகை கடுமையான போட்டி நிலவியது.
அதனால், கூட்டத்தின் முடிவில், காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவரை தேர்வு செய்வதற்கான படிவம் எம்.எல்.ஏ.க்களிடம் அளிக்கப்பட்டு அவர்கள் யாரை சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்ய விரும்புகிறார்களோ அவருடைய பெயரை எழுதி தரும்படி கோரப்பட்டது. இதையடுத்து, சட்டமன்றக் குழு தலைவர் யார் என்பதை பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பதாக இருந்தது. ஆனால், அறிவிக்கப்படவில்லை. எம்.எல்.ஏ.க்கள் எழுதிக் கொடுத்ததை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியாவிடம் கொடுத்து அதன் பிறகே சட்டமன்றக் குழு தலைவர் யார் என்று அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இப்படி, காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் இழுபறியில் முடிந்தது. ஆனால், இறுதியாக ஒன்று மட்டும் உறுதியானது, காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக இருந்தாலும், சோனியா காந்திதான் அறிவிப்பார் என்பது மட்டும் உறுதியானது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் சட்டமன்றக் குழு தலைவர் பதவி யாருக்கு என்பதில் ஏன் இத்தனை போட்டி நிலவுகிறது. கட்சி தொண்டர்களின் விருப்பம் என்னவாக இருக்கிறது. சட்டமன்றக் குழு தலைவராக யாரை அறிவிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். அவர்கள் கூறியதாவது, “இப்போது அமைந்துள்ள சட்டப் பேரவை சாதாரணமான சட்டப் பேரவை அல்ல. 13 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றுள்ள சட்டப் பேரவை. பாஜக உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்க காத்திருக்கிறார்கள். திமுகவில் அத்தனை பேரும் கலைஞரைப் போல பேசுபவர்கள். எழுவர் விடுதலை உள்ளிட்ட விஷயங்களில் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி மீது கடுமையாக விமர்சனம் வைக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதனால், அவற்றை எல்லாம் எதிர்கொள்ளும் அளவுக்கு வாதத் திறமை உள்ள ஒருவர்தான் சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்படி பார்த்தால், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பதற்கான வாதத் திறமை உள்ளவர்கள் என்றால் அது இப்போதுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் விஜயதாரணியும் செல்வப் பெருந்தகையும்தான். ஆனால், மற்றவர்களும் போட்டியிடுகிறார்கள்.
இதில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ் குமாருக்கு வாய்ப்பு உள்ளது என்ற தொனியில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவர் ஊடகங்களில் தெரிவித்தார். அதற்கு அவரிடம் பணம் வாங்கிவிட்டீர்களா என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
விஜயதாரணி, காங்கிரஸ் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தி. இவர் 3வது முறையாக எம்.எல்.ஏ-வாக தேர்வாகியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து தமாகா மூப்பனார் தலைமையில் பிரிந்து சென்றபோது, காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வாடகை கொடுத்தவர் விஜயதாரணி. அன்றைக்கு காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்திக்கு தனது காரை கொடுத்து காங்கிரஸ் கட்சியை வளர்க்க உதவியவர். அதுமட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக செயல்படாதவர். அவர் மீது காங்கிரஸ் தொண்டர்கள் சிலருக்கு அதிருப்தி இருக்கலாம்.
விஜயதாரணி சரியாக செயல்படாதவர் என்றால், 3வது முறையாக அவர் வெற்றி பெற்றிருக்க முடியாது இல்லையா. 3முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ, காங்கிரஸ் கட்சியின் விசுவாசி என்ற வகையில் விஜயதாரணிதான் பொருத்தமானவர்” என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பதவிக்கு போட்டியில் இருக்கும் மற்றவர்களைப் பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, எஸ்.ஆர். முனிரத்தினம் பெரிய தொழிலதிபர், பணம் உள்ளவர். 2 முறை தமாகா சார்பில் எம்.எல்.ஏ-வாகவும் 2 முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாகவும் உள்ளார். ஆனால், சடமன்றத்தில் திறமையாக வாதங்களை எடுத்து வைக்க முடியுமா என்பது சந்தேகம். அதே போல, அடுத்ததாக போட்டியில் உள்ள மற்றொருவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ் குமார். இவர் மூத்த காங்கிரஸ் தலைவர் பொன்னப் நாடாரின் மகள் வழிப் பேரன். 2வது முறையாக காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாகியுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ள 18 எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதனால் நாடார் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமாருக்கு சட்டமன்றக் குழு வழங்கப்படும். அப்போதுதான், நாடார் சமூகத்தினரை திருப்திப்படுத்தும்படியாக இருக்கும் என்ற பார்வையில்தான் அந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் கருத்து தெரிவித்தார். ஆனால், இவர் சட்டமன்றத்தில் விமர்சனங்களுக்கு சரியான பதிலடி கொடுத்து பேசுவாரா என்றால் சந்தேகம்தான்.
அதே போல, சட்டமன்றக்குழு தலைவர் பதவிக்கான போட்டியில் செல்வப் பெருந்தகையும் இடம்பெற்றுள்ளார். நல்ல பேச்சாளர். சட்டமன்றத்தில், காங்கிரஸ் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு சரியாக பதிலடி கொடுப்பார். எதற்கும் அஞ்சாதவர். காங்கிரஸ் கட்சியில் முதல்முறையாக எம்.எல்.ஏ.வாகியுள்ளார். அவர் இதற்கு முன்பு 2006-2011 சட்டப் பேரவையில் விசிக சார்பில் எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் முதல்முறை எம்.எல்.ஏ என்பதைத் தாண்டி வேறு எதுவும் அவருக்கு வாய்ப்பு மறுப்பதற்கான கரரணங்கள் இல்லை.
இதையெல்லாம் தாண்டி, ஒரு மாநிலத்தில் 18 எம்.எல்.ஏக்களில் சட்டமன்றக் குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கே இவ்வளவு போட்டிகள் இருக்கிறது என்றால், தேசத்தைக் காக்க இந்திய அளவில் எவ்வளவு போட்டியிருக்கும் எனும்போது காங்கிரஸ் எப்படி மக்கள் நம்பிக்கையைப் பெறும். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை கட்சியில் இப்படி அதிகாரத்தைக் குவித்து வைத்திருக்கக் கூடாது. மாநில தலைவரிடம் அதிகாரத்தை கொடுத்துவிட வேண்டும். அப்போதுதான் இது போன்ற போட்டிகள் இருக்காது” என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.