Advertisment

'இந்துக்களை வெறியேற்றி நம் கூட்டணியை வேட்டையாடி விடுவார்கள்'- காங்கிரஸ் பிரமுகர் எச்சரிக்கை

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜி.கே. முரளிதரன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Sanatana Dharma Abolition Conference

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான ஜி.கே. முரளிதரன்.

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான ஜி.கே. முரளிதரன், தமிழக முதல்வருக்கு அன்பு வேண்டுகோள் என்கிற தலைப்பில் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், “திமுகவுக்கு நல்லது செய்கிறேன் என்கிற பெயரில் தினம்தோறும் யாராவது ஒருவர் திமுகவுக்கு எதிராக இந்துக்களை ஒருங்கிணைக்கும் வேலையை செய்து வருகிறார்கள்.

Advertisment

நீங்களோ நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று மிகுந்த சிரமத்துக்கிடையில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களால் ஆதரவு பெற்று உங்கள் அரவணைப்பில் இருக்கும் இவர்கள், நமது கூட்டணியை வளர்ப்பதற்கு பதிலாக பாஜக கூட்டணியை வலுவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

இதனால் நாம் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்கிற தோற்றம் உருவாகிக்கொண்டே இருக்கிறது. உங்கள் தந்தையார் அரசியல் செய்த காலங்களில் தகவல் தொடர்பு ஊடகங்கள், செல்போன்கள், சமூக வலைத்தளங்கள் இல்லை.

யார் எதைச் சொன்னாலும் நம்பும் நல்ல குணம் வாய்ந்த மக்கள் வாழ்ந்த காலம் அது. அன்றைய தினம் மேடை போட்டு பேசி எல்லோரையும் நம்ப வைக்க முடிந்தது. 

இன்று எல்லார் கையிலும் செல்போன் இருக்கிறது. ஆண்டிப்பட்டியில் நடக்கும் விஷயத்தை அடுத்த நொடி அமெரிக்காவில் பார்க்க முடிகிறது; அதன் எதிரொலி அமெரிக்காவில் கேட்கிறது.

சமூக வலைத்தளங்கள் மூலமாகவே வளர்ந்த கட்சியான பாஜக, நம் கூட்டணியில் உள்ளவர்களின் வாயிலிருந்து வரும் இந்த வார்த்தைகளை வைத்து வடை சுட்டுக் கொண்டிருக்கிறது. இந்துக்களை வெறியேற்றி நம் கூட்டணியை வேட்டையாடும் வேலையை செய்து விடுவார்களோ என்று எனக்கு அச்சம் ஏற்படுகிறது.

எனவே, தாங்கள் தயவு செய்து இந்த தேர்தல் நேரத்தில் மட்டுமாவது இந்த திராவிட மாடல் பரப்பும் குழுவை கொஞ்ச காலத்திற்கு கண்டம் விட்டு கண்டம் கடத்தி விடுங்கள்.

தேர்தலில் நாம் வெற்றி பெறுவதற்கு பதிலாக இந்த வெட்டிப் பேச்சுகளுக்கு பதில் சொல்லும்படி ஆக்கி நமது நோக்கத்திற்கு இடையூறாக இருப்பவர்கள் இவர்களே.

இந்த விஷவேதாந்தவாதிகள் தேர்தல் முடிந்த பிறகு தமிழகத்திற்கு வரட்டும். அப்போது அவர்களுக்கு நாம் மாலை போட்டு வரவேற்று மரியாதை செய்து கொள்வோம். இப்போதைக்கு அவர்கள் இங்கே இருந்து நமக்கு வெட்டி வேலை வைக்க வேண்டாம்.

இன்னொரு முக்கியமான வேண்டுகோள் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது மாதிரி சனாதன ஒழிப்பு கூட்டங்களுக்கு நமது அமைச்சர்கள் போய்த்தான் ஆக வேண்டுமா ? கொஞ்ச நாளைக்கு இவர்கள் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் நல்லது.

ஏற்கனவே கிராமத்தில் வசிப்பவர்களுக்கு கூட 'இந்து எதிர்ப்பையும் கருணாநிதி கட்சியையும் பிரிக்கவே முடியாது' என்பது தெரிந்திருக்கும் நேரத்தில் இப்படி எல்லாம் பேசினால் அது நமக்கு வெற்றியை தேடி தராது மாறாக தலைவலியை தான் வாங்கித் தரும்" என்றார்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment