/tamil-ie/media/media_files/uploads/2021/05/rs-sathyamoorthy-bavan.jpg)
பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாத அதிமுக வில் கூட, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான தேர்வு இழுபறி, சச்சரவுகள் இருந்தாலும் முடிவுக்கு வந்துவிட்டது. 18 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சியில் களேபரம் அடங்கிய பாடில்லை. சட்டமன்ற கட்சித் தலைவருக்கான போட்டியும், தேர்வும் இன்னனும் இழுபறியில் சென்று கொண்டுள்ளது.
திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றிப் பெற்று, தமிழக சட்டப்பேரவையில் அதிக உறுப்பினர்களை கொண்ட மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் 18 சட்டமன்ற உறுப்பினர்களில் எஸ்.ஆர்.முனிரத்தினம், விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார், செல்வப்பெருந்தகை ஆகியோரில் ஒருவர் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வாகலாம் எனும் பேச்சும் தேர்தல் முடிவுகளுக்கு பிறகாக அடிபடத்தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவருக்கு இணையாக கருதப்படும் அப்பதவிக்கு தற்போது கடும் போட்டி நிலவி வருகிறது.
காங்கிரஸின் சட்டமன்ற கட்சித் தலைவர் தேர்வு தொடர்பாக, கடந்த 7-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் எம்.எ.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சட்டமன்ற கட்சித் தலைவரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தீர்மானிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் மேலிடம், தமிழக சட்டசபையின் சட்டமன்ற கட்சித் தலைவரை தீர்மானிப்பதற்காக புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி.வைத்தியலிங்கம் மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரை நியமித்து உத்தரவிட்டது.
சட்டமன்ற கட்சித் தலைவர் நியமனம் தொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், விஜய்வசந்த் என பலரும் பங்கேற்க, நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. கூட்டத்தில், விஜயதரணி, முனிரத்தினம், ராஜேஷ்குமார், பிரின்ஸ், செல்வப்பெருந்தகை ஆகியோரிடையே சட்டமன்ற கட்சித் தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் தங்களுக்கு விருப்பமானவர்களை சட்டமன்ற கட்சித் தலைவராக தெரிவு செய்ய படிவம் வழங்கப்பட்டது. நிரப்பப்பட்ட படிவங்கள் அனைத்தும் காங்கிரஸ் மேலிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறாக கூட்டத்தின் காட்சிகள் அரங்கேறி இருக்க, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மல்லிகார்ஜூன கார்க்கே சட்டமன்ற கட்சித் தலைவரை அறிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில், சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே தீர்மானிப்பார் என தெரிய வருகிறது.
காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் தேர்வு தொடர்பாக ஏற்பட்டுள்ள இழுபறி நிலையையும், காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்தும் கூட்டத்தில் கலந்துக் கொண்ட எம்.எல்.ஏ ஒருவரிடம் பேசினோம்.
‘காங்கிரஸின் எம்.எல்.ஏக்கள் அனைவரிடமும் தனித்தனியாக யார் சட்டமன்ற கட்சித் தலைவராக வேண்டுமென்று கருத்து கேட்கப்பட்டது. சீனியர், திறமை, தகுதியின் அடிப்படையில் நாங்களும் எங்களுக்கு விருப்பமானவர்களை பரிந்துரைத்துள்ளோம். ஜனநாயக ரீதியிலான கருத்து கேட்பாகவே நடைபெற்றது. தொடர்ந்து காங்கிரஸில் தனது இருப்பை தக்க வைத்தவரும், மூன்று முறை தொடர்ந்து எம்.எல்.ஏ பதவியில் நீடிப்பவருமான விஜயதரணியை பெரும்பாண்மையான எம்.எல்.ஏக்கள் பரிந்துரைத்துள்ளதாக கூட்டத்திற்கு பின்னான விவாதங்களில் பேசிக் கொண்டதை வைத்து முடிவுக்கு வரலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2021/05/MLA-Vijayatharani.jpeg)
தமிழக சட்டப்பேரவையில், இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு நுழைந்திருக்கும் பாஜக வின் பார்வை முழுவதுமாக காங்கிரஸை குறிவைப்பதாகவே இருக்கும். இந்த சூழலில், விஜயதாரணி நல்ல பேச்சாற்றல் மிக்கவர். எதிர்கட்சிகளின் வாதங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அவரின் வாதம் இருக்கும். தேர்தலில், பெண்களுக்கு குறைந்த அளவிலான இடங்களே ஒதுக்கப்பட்ட நிலையில், சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியை விஜயதரணிக்கு அளிப்பதில் தவறு ஏதுமில்லை. முனிரத்தினத்துக்கும் சில எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பது தெரிய வந்தாலும், அவருக்கான சாத்தியம் என்பது குறைவு தான். எம்.எல்.ஏக்களின் தேர்வு இவ்வாறாக இருப்பினும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முடிவு, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களின் முடிவு, எம்.எல்.ஏக்களின் பரிந்துரை என பல்வேறு காரணிகளின் அடிப்படையிலேயே அப்பதவி தீர்மானிக்கப்படும். சட்டமன்ற கட்சித் தலைவர் குறித்தான அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இன்றோ நாளையோ வெளியிட வாய்ப்புள்ளது’ என அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.