/tamil-ie/media/media_files/uploads/2017/11/arasar.jpg)
நவம்பர் 8 திமுக ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கிறது. மாநிலம் முழுவதும் தனியாக துண்டு பிரசுரம் வழங்கவும் கட்சியினருக்கு மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் அறிவுறுத்தியிருக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் விடுத்த அறிக்கை : கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிற வகையில் பயன்பாட்டில் இருந்த ரூபாய் 500, 1,000 நோட்டுகள் அனைத்தையும் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதனால் கடந்த ஓராண்டு காலமாக மிகப்பெரிய பொருளாதார பேரழிவை நாடு சந்தித்து வருகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், சிறு வணிகர்கள், சிறு,குறு தொழில் முனைவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ரூபாய் 21 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டது. அதேபோல, ரொக்கமில்லா பரிவர்த்தனைக்காக முன்னேற்பாடுகள் செய்ய வங்கிகளுக்கு ரூபாய் 3800 கோடி செலவு. ஆனால் கணக்கில் வராத பணமோ வெறும் ரூபாய் 16 ஆயிரம் கோடி தான். 16 வங்கி ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மனஉளைச்சலால் உயிரிழப்பு. பணமதிப்பு நீக்கத்தினால் கருப்பு பணமும் ஒழியவில்லை, மாறாக அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டாமா ?
கருப்பு பணத்தை ஒழிப்பதாக வீரவசனம் பேசிய பா.ஜ.க.வினர் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி சேகர் ரெட்டி அலுவலகத்தில் சோதனையிட்ட போது ரூபாய் 33 கோடியே 60 லட்சம் மதிப்பு கொண்ட ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 8 ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் வந்த புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எந்த வங்கியிடமிருந்து சேகர் ரெட்டிக்கு சென்றது என்பதை இன்று வரை ரிசர்வ் வங்கியால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மத்திய புலனாய்வுத் துறையும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதற்கு பின்னாலே இருக்கிற அரசியலை அம்பலபடுத்த வேண்டிய நிலை நெருங்கிவிட்டது. கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறுகிற பா.ஜ.க.வினரே சேகர் ரெட்டியை காப்பாற்றுகிற முயற்சியில் ஈடுபடவில்லை என்று மறுக்க முடியுமா ?
கடந்த நிதியாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் 7.7 சதவீதமாக இருந்தது, தற்போது 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் குறைகிற போது ரூபாய் 2 லட்சம் கோடி வருவாய் இழப்பு நாட்டுக்கு ஏற்படுகிறது. இந்த இழப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில் தான் மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், ‘நல்ல நாட்கள் வந்து கொண்டிருக்கின்றன” என்று அடிக்கடி மாய வார்த்தைகள் கூறி மக்களை மயக்க முயன்ற நவீன குடுகுடுப்பைக்காரனைப் போல நரேந்திர மோடி பேசியதை மக்கள் மறக்கவில்லை. கடந்த மூன்றாண்டுகால பா.ஜ.க.வில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் நாடு வீழ்ச்சிப் பாதையில் சென்றுக் கொண்டிருப்பதை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள்.
நரேந்திர மோடிக்கு எதிராக மக்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டார்கள். பா.ஜ.க.வுக்கு எதிராக காற்று வீச ஆரம்பித்துவிட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வர முடியாது என்று சொல்லி வைத்ததைப் போல நாட்டு மக்கள் ஒருசேர பேச ஆரம்பித்து விட்டார்கள். இந்த பேச்சு தான் பா.ஜ.க.வின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரப் போகிறது.
பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவையும், மக்கள் பாதிப்பையும் கருத்தில் கொண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் நவம்பர் 8 ஆம் நாளை கருப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.
இந்த முடிவின்படி தமிழகத்தில் நவம்பர் 8 ஆம் நாள் கருப்பு நாளாக கடைப்பிடிப்பதோடு, மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை தி.மு.க. அறிவித்துள்ளது. இதில் பங்கேற்பதென காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. அன்று மாலையில் பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மாவட்ட, வட்டார, நகர, பேரூராட்சிகளில் ‘நவம்பர் 8 - ஏன் கருப்பு நாள் ?” என்ற தலைப்பில் துண்டு பிரசுரங்களை அச்சிட்டு பிரதான வீதிகளில் காங்கிரஸ் கொடியுடன் ஊர்வலமாகச் சென்று பொதுமக்கள், வணிகர்கள் ஆகியோரிடம் விநியோகித்து பிரச்சாரம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது.
நரேந்திர மோடி ஆட்சியில் ஏற்பட்ட அவலங்களை பட்டியலிட்டு மக்கள் மன்றத்தில் தோலுரித்து காட்ட வேண்டிய நாள் நவம்பர் 8. தேசியத் தோழர்களே, புறப்படுங்கள். வீதி வீதியாகச் செல்லுங்கள். பா.ஜ.க.வின் முகமூடியை கிழித்தெறியுங்கள்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
நவம்பர் 8-ம் தேதி பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தை தமிழகத்தில் திமுக, இடதுசாரிகள் தனித்தனியாக நடத்துகின்றன. திமுக தரப்பில் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடக்கவில்லை. எனினும் காங்கிரஸ் தாமாகவே திமுக போராட்டத்தில் பங்கேற்பதாக கூறியிருக்கிறது. அதேசமயம், தனியாகவும் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்யும்படி கட்சியினருக்கு திருநாவுக்கரசர் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.