தமிழகத்தில் நீட் எதிர்ப்பு வலுக்கிறது. செப்டம்பர் 13, 14, 16-ம் தேதிகளில் வரிசையாக போராட்டங்கள் நடக்கின்றன.
‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற தமிழக அரசு எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. ஓராண்டு விலக்கு தர சம்மதித்த மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது பல்டி அடித்துவிட்டது. இதனால் ‘நீட்’ அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது.
மொத்த மாணவர் சமூகமும் இதை மனக்குமுறலுடன் ஏற்கும் நிலை வந்துவிட்ட சூழலில்தான், செப்டம்பர் 1-ம் தேதி மாணவி அனிதாவின் மரணம் நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் வேகம் பெற்றன. மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்தனர். திடீரென இந்தப் போராட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துவிட்டதாக செப்டம்பர் 8-ம் தேதி மாலையில் செய்திகள் வந்தன. ஆனால் அமைதியான போராட்டத்திற்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் பின்னர் தெளிவுபடுத்தியது.
இதைத் தொடர்ந்து செப்டம்பர் 9-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மாணவ மாணவிகள் ஆவேச மறியல் போராட்டங்களை நடத்தினர். செப்டம்பர் 10-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் மாணவ மாணவிகளின் போராட்டம் நடைபெறவில்லை. தொடர்ந்து அரசியல் கட்சிகளும் அடுத்தடுத்து இந்த விவகாரம் தொடர்பாக போராட்டங்களை நடத்த இருக்கிறார்கள்.
செப்டம்பர் 8-ம் தேதி திருச்சியில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னைக்காக பொதுக்கூட்டம் நடத்தின. அந்தக் கூட்டத்திலேயே, செப்டம்பர் 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மமக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்து 13-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
தமிழக அரசியலில் திமுக என்ன ‘மூவ்’ செய்தாலும், அதற்கு எதிரான நடவடிக்கை எடுக்கவேண்டும் என முடிவெடுத்துவிட்ட பாஜக, செப்டம்பர் 9-ம் தேதி திருச்சியில் திமுக அணி பொதுக்கூட்டம் நடத்திய அதே உழவர் சந்தைத் திடலில் நீட் ஆதரவு பொதுக்கூட்டம் நடத்தினர். மத்திய அமைச்சர் பொன்னார், பாஜக தமிழக தலைவர் தமிழிசை, ஹெச்.ராஜா உள்ளிட்டோர் இதில் பேசினர்.
இதேபோல 13-ம் தேதி திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு பதிலடியாக மறுநாளே (செப், 14) மாவட்டம் வாரியாக பாஜக சார்பில் நீட் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடக்க இருக்கின்றன. இந்தப் பதிலடி போராட்டங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
செப்டம்பர் 9-ம் தேதி நீட் சட்ட எரிப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அதை ரத்து செய்துவிட்டு செப்டம்பர் 16-ம் தேதி மாவட்டம் வாரியாக உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். அதே செப்டம்பர் 16-ம் தேதி திருச்சியில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பாஜக.வும் பொதுக்கூட்டம் நடத்திய அதே திடலில் டிடிவி.தினகரன் அணியினர் நீட்டுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள்.
திங்கட்கிழமை முதல் மாணவ, மாணவிகளின் போராட்டமும் வலுப்பெறும் என தெரிகிறது. இன்னொருபுறம் ஜாக்டோ-ஜியோ போராட்டம், அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம் என மாநிலமே போராட்ட மயமாகி வருகிறது. அடுத்தடுத்த நாட்கள், தமிழக அரசுக்கும் போலீஸுக்கும் சவால்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.