scorecardresearch

நீலகிரிக்கு இது புதுசு… மக்களுக்கு உதவும் 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள்!

குன்னூர் மக்களுக்கு தேவையான அனைத்து அவரச மருத்துவ உதவிகளையும் வழங்க இவ்வகையான சிறிய ரக ஆம்புலன்ஸ்கள் பெரிதும் உதவும் என்று மருத்துவர் ஹரிஜா கூறினார்.

நீலகிரிக்கு இது புதுசு… மக்களுக்கு உதவும் 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள்!
AmbuRx ஆட்டோ ஆம்புலன்ஸ் அருகே ராதிகா

6 auto ambulances to Nilgiris : நீலகிரி மற்றும் அதனை சுற்றி இருக்கும் மலைக் கிராமங்களில் உள்ள குறுகலான சாலைகளுக்கு ஏற்ற வகையில் தற்போது ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வண்டிச்சோலையை பகுதியை சேர்ந்தவர் ராதிகா. குன்னூரில் பிரபலமான கஃபே ஒன்றை ( Café Diem) நடத்தி வரும் அவர், அந்த பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆட்டோ ஆம்புலன்ஸ்களை வாங்கியுள்ளார்.

Coonoor based cafe owner brings 6 auto ambulances to Nilgiris
ஆட்டோ ஆம்புலன்ஸ் அருகே நிற்கும் ராதிகா சாஸ்திரி (புகைப்படம் – Special Arrangement)

கடந்த மாதம் சமூக வலைதளம் ஒன்றில் பேட்டரியால் இயங்கும் இ-ஆம்புலன்ஸ் சேவையை பார்த்த அவர், நீலகிரியின் காலநிலை, புவியியல் அமைப்பு மற்றும் சாலை வசதிகளுக்கு ஏற்ற வகையில் ஆம்புலன்ஸ் சேவைகளை துவங்க திட்டமிட்ட அவர் மத்திய பிரதேச மாவட்டம் ஜபால்பூரில் உள்ள உற்பத்தியாளர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

470 சிசி திறன் கொண்ட, பெட்ரோலில் இயங்கும், பஜாஜ் மாக்ஸிமா, ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டது. AmbuRx என்று அழைக்கப்படும் இதில் நோயாளிகளை தூக்கி செல்வதற்கான ஸ்ட்ரெச்சர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர், உதவியாளர் இருக்கை ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. மேலும் நோயாளி படுக்க வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் இருந்து ஓட்டுநரின் பிரிவு முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Coonoor based cafe owner brings 6 auto ambulances to Nilgiris
நீலகிரிக்கு கொண்டு வரப்பட்ட 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் (புகைப்படம் – Special Arrangement)

மலைவாழ் பழங்குடி குழந்தைகளுக்கு பாடம் எடுத்து அசத்தும் அந்த கிராமத்தின் முதல் பட்டதாரி

இது தொடர்பாக தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் அவரை தொடர்பு கொண்டு பேசிய போது, “பெரிய ஆம்புலன்ஸ்கள் இந்த பகுதியில் செல்ல சிரமமாக இருக்கும் என்பதால் இந்த யோசனை எனக்கு வந்தது. என்னுடைய கஃபேவிற்கு வரும் வாடிக்கையாளர்கள் உதவியாலும், சமூக வலைதளங்களின் உதவியாலும் நான் நிதி திரட்டி இந்த ஆட்டோக்களை வாங்கியுள்ளேன். இதற்கு மக்களிடமும் நல்ல வரவேற்பு இருக்கிறது” என்று கூறினார்.

“30 நாட்களில் இந்த ஆம்புலன்ஸ் ஆர்டர் செய்து கைக்கும் கிடைத்துவிட்டது. இந்த ஆம்புலன்ஸ்கள் முறையாக பதிவு செய்யப்பட்ட பிறகு கேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குன்னூர் புஷ்பா மருத்துவமனை, கோத்தகிரி மெடிக்கல் ஃபெல்லோஷிப் மருத்துவமனை, கைண்டர் தொண்டு நிறுவனம் மற்றும் 3 ஸ்டார் ஆம்புலன்ஸ் சேவை மையங்களுக்கு வழங்கப்படும்” என்று தெரிவித்தார் ராதிகா.

கொரோனா இரண்டாம் அலையின் போது பாதிப்பிற்கு ஆளான நபர்களுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகமாக இருந்தது. பல நேரங்களில் ஆக்ஸிஜனை நிரப்ப கோவை மாவட்டத்திற்கு பயணிக்கும் சூழலும், காத்திருக்கும் சூழலும் ஏற்பட்ட நிலையில் ராதிகா தன்னுடைய நண்பர்கள் மற்றும் நீலகிரியில் உள்ள தன்னார்வலர்களின் உதவியுடன் குன்னூர் லாலி (Lawly) அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி கலனை துவங்க உதவி புரிந்தார்.

Coonoor based cafe owner brings 6 auto ambulances to Nilgiris
ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைக்கும் அமைச்சர் ராமச்சந்திரன் (புகைப்படம் – Special Arrangement)

தற்போது இந்த ஆம்புலன்ஸ் சேவைகளும் மக்களுக்கு பல்வேறு வகையில் உதவ உள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக துவங்கப்பட்ட ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியாளர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் துவங்கி வைத்தனர். ஒவ்வொரு ஆட்டோவும் ரூ. 3.5 லட்சம் விலையாகும். மொத்தமாக 6 ஆட்டோக்களை வாங்க ரூ. 21 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. சிக்கலான பாதிப்புகளை எதிர்கொள்ளாத நோயாளிகளின் தேவைகளுக்காக இந்த ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படும் என்று ராதிகா கூறினார்.

”இந்த பகுதியில் நிறைய மலைகிராமங்களும், பழங்குடியினர் குடியிருப்புகளும் உள்ளன. அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் உள்ளன. இருப்பினும் குறுகலான சாலைகளில் செல்ல இந்த வகை ஆம்புலன்ஸ்கள் நிச்சயம் இப்பகுதி மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்” என்று கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் குன்னூர் ப்ளான் மருத்துவ அதிகாரி Dr. ஹரிஜா, தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். குன்னூர் மக்களுக்கு தேவையான அனைத்து அவரச மருத்துவ உதவிகளையும் வழங்க இவ்வகையான சிறிய ரக ஆம்புலன்ஸ்கள் பெரிதும் உதவும் என்றும் மருத்துவர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coonoor based cafe owner brings 6 auto ambulances to nilgiris

Best of Express