தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையே கொரோனா ஹாட் ஸ்பாட் ஆக இயங்கி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததற்கு கோயம்பேடு சந்தைக்கு போய் வந்தவர்கள் மற்றவர்களுடன் தொடர்பில் இருந்தது என்பது தெரியவந்துள்ளது. மார்ச் 24ம் தேதி தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு நிலை அமல்படுத்தப்பட்டதில் இருந்து கோயம்பேடு சந்தையில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட முதல்நாளே, மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு நெறிமுறைகளை வெளியிட்டது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான சில்லரை மற்றும் மொத்த விற்பனை மார்க்கெட்கள் அடைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், இந்த அறிவுரையை பொருட்படுத்தாத கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம், வழக்கம்போல, தனது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இவர்கள் தான் அரசின் உத்தரவை மதிக்கவில்லை என்றால், பொதுமக்களும் அதிகளவில் சந்தைக்கு வருகை தந்ததோடு மட்டுமல்லாது தங்கள் குழந்தைகளையும் கொரோனா பாதிப்பின் விபரீதம் அறியாமல் சந்தைக்கு அழைத்து வந்திருந்தனர். சென்னை மாநகராட்சி அதிகாரிகள், கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து கோயம்பேடு சந்தையை மூட அறிவுறுத்தினர்.
மறுநாள் முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே சில்லரை வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். சில மணிநேரங்களுக்கு வர்த்தகர்களும் பொதுமக்களும் இந்த விதிமுறையினை பின்பற்றினர். பின் மீண்டும் அங்கு வழக்கம்போலவே மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் செயல்பட துவங்கினர்.
மற்ற நகரங்களில், காய்கறி சந்தைகள், திறந்த வெளியில், காய்கறி, பழங்கள், மலர்கள் என தனித்தனியாக பிரித்து செயல்பட்டு வந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தை மட்டும் எவ்வித மாற்றமுமின்றி, ஒரே இடத்தில் செயல்பட்டதோடு மட்டுமல்லாது தனிமனித இடைவெளியையும் பின்பற்ற தவறியது குறிப்பிடத்தக்கது.
மதுரை , திருநெல்வேலி போன்ற முன்னணி நகரங்களில் சந்தைகள், அந்தந்த மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டவுடன், காய்கறி, பழங்கள், மலர்கள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் விற்பனை செய்ய திட்டம் வகுக்கப்பட்டு மக்கள் அந்த இடங்களில் கட்டாயமாக தனிமனித இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டார்கள். இதனால், மற்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள்ளேயே இருந்தது.
சென்னையிலோ, கோயம்பேடு சந்தை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இல்லாமல், சிஎம்டிஏ எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. சிஎம்டிஏ அமைப்பு, சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு ஆகும். இந்த அமைப்புக்கு, தொற்று நோய் காலங்களின்போது வகுக்கப்பட வேண்டிய விதிமுறைகள் பற்றி தெரியாது. எனவே, இந்த கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் விதிகள் மீறப்பட்டது குறித்து அது கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து, அரசு எடுத்த நடவடிக்கைகளினாலேயே, தொற்று மேலும் பரவாமல் தடுக்க கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டு, திருமழிசையில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தீர்வு
மதுரை போன்ற பெருநகரங்களிலேயே, காய்கறி, பழங்கள், மலர்கள் என தனித்தனியாக சந்தைகள் இயங்கி வரும் நிலையில், அதிக மக்கள் நெருக்கடி கொண்ட சென்னை மாநகரில், இம்மூன்று பொருட்களின் வர்த்தகம் ஒரே இடத்தில் நடைபெறுவது என்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நிலையில், அதேபகுதியில் சந்தையும் இயங்குவதால் அப்பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இப்பகுதியில் இயங்கிவரும் சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மற்ற நகரங்களைப்போல், வெவ்வேறு இடங்களில் காய்கறிகள், பழங்கள், மலர்கள் விற்பனை செய்யப்படுவதை போல, சென்னையிலும் 3 இடங்களாக பிரித்து வர்த்தகத்தை நடத்தினாலே, மக்கள் நெருக்கடியை தவிர்ப்பதோடு மட்டுமல்லாது, இதுபோன்ற தொற்று நோய் காலங்களில், சந்தை ஹாட்ஸ்பாட் போல மாறுவதை தவிர்க்க இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil