கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள இந்த 21 நாள் ஊரடங்கு காலத்தில் மனிதர்களைப் போலவே, அவர்களைச் சார்ந்திருக்கும் விலங்குகளான நாய்கள், பூனைகளும் நெருகடியான நிலையில் உள்ளன.
சென்னையின் தெருக்களில் ‘காவலர்’களாக வலம் வந்த தெருநாய்கள் இன்று அகோரப் பசியுடன் சுற்றித் பரிதாபமாக திரிகின்றன. அவற்றின் கண்களைப் பார்க்கும் யாரும் ஒரு கனம் மனம் கலங்காமல் இருக்க மாட்டார்கள். பலரும் சென்னையைவிட்டு சொந்த ஊருக்கு போய்விட்ட நிலையில் அவர்களை நம்பியிருந்த பூனைகளும் இன்று ஆதரவற்ற நிலை தொடர்கிறது. இந்த 21 நாள் ஊரடங்கு முடிவதற்குள், அவற்றில் பலவும் பட்டினியால் இறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சில விலங்குகள் நல ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், அமைப்புகள் தெரு நாய்களுக்கும் பூனைகளுகும் உணவு வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளன. தமிழக அரசு, தெரு நாய்களுக்கும் பூனைகளுக்கும் உணவு வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட, மாநகராட்சி ஆணையர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஆதரவற்ற நிலையில் பட்டினியால் வாடும் தெரு நாய்கள், பூனைகள் குறித்தும் அவை பட்டினியால் இறக்க நேரிட்டால் ஏற்பட உள்ள ஆபத்து குறித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் எழுத்தாளருமான கௌதம சன்னா ஐ.இ. தமிழுக்கு பேசியதாவது, “ஒரு இக்கட்டான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். கொரோனா வைரஸ் என்பது ஒரு நுண்ணுயிர். ஆனால், ஒட்டு மொத்த மனித குலமே இக்கட்டில் இருக்கக்கூடிய சூழலில் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள கூடிய ஒரு கட்டத்தில் இருக்கிறோம். உலகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி ஏறக்குறைய 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள். இந்தியாவில் இப்போதுதான் கொரோனா வைரஸ் பரவல் என்பது இரண்டாம் கட்டத்தை எட்டியிருக்கிறது என்றும் அது முதல் கட்டத்தை தாண்டுவதற்குள் ஒட்டுமொத்தமாக அந்த நோய் பரவலை கட்டுப்படுத்தி விட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒரு அங்கமாகத்தான் 21 நாட்கள் curfew எனப்படுகின்ற பொது ஊரடங்கு இப்போது அமலில் உள்ளது.
இந்த பொது ஊரடங்கு அமுலில் இருக்கின்ற பொழுது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. பொதுவாக வீட்டிலேயே மக்கள் முடங்கி இருக்கவேண்டும். நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக யாரும் வெளியே வரக்கூடாது என்றும் நோய்த்தொற்றினை உருவாக்குபவர்களை கட்டுப்படுத்தினால் நோய்த்தொற்று பரவாது என்ற அடிப்படையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டுப்பாடுகளோடு மனிதர்களுக்கு நோய் பரவாது என்கிற நிலை வருமானால் நாம் மகிழ்ச்சி அடைபவர்களாக இருப்போம். அதே நேரத்திலே இந்த இருபத்தி ஒருநாள் கட்டுப்பாட்டின் மூலமாக மனிதர்களை சார்ந்து இருக்கக்கூடிய விலங்குகள் அழிந்து விடக் கூடிய பெரும் ஆபத்தில் இருக்கின்றன என்பதுதான் இப்போது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. மிகக் குறிப்பாக, மனிதர்களை சார்ந்து இருக்கக்கூடிய நாய்கள், பூனைகள், மாடுகள், உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளும் ஆபத்தில் இருக்கின்றன. கிராமங்களில் இருக்கக்கூடிய மாடுகளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை அவை வயலிலேயோ அல்லது காடுகளியோ மேய்ந்து கூட தங்களது உணவுத் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய நிலை இருக்கிறது. ஆனால், மனிதனை சார்ந்து இருக்கக்கூடிய மனிதன் அளிக்கக்கூடிய உணவினை சார்ந்து இருக்கக்கூடிய நாய்களும் பூனைகளும் மிக அபாயகரமான கட்டத்தில் இருக்கின்றன. முதலாவதாக இந்த கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்ற மக்களின் அச்சம் என்னவென்றால் இந்த நாய்களும் பூனைகளும் வைரஸை மக்களுக்கு தொற்றிவிடுமோ என்கின்ற அச்சம் இருக்கின்ற காரணத்தால்தான் மக்கள் இந்த ஜீவன்களிடத்திலே அணுகுவதற்கு அச்சப்படுகிறார்கள். ஆனால், உலக சுகாதார மையமும் கொரோனா வைரஸ் குறித்து ஆராய்ச்சி செய்தவர்களும் சரி கொரோனா, கோவிட்-19 என்கிற இந்த வைரஸானது பூனை நாய் உள்ளிட்ட உயிரினங்கள் மூலமாக மனிதர்களிடத்தில் பரவாது என்பதை உறுதி செய்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில், இது ஒரு தேவையற்ற அச்சமாக இருந்தாலும் மக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவாக இருக்கிறது. இதனால், விளைகின்ற விளைவு என்னவென்றால் சென்னையில் மட்டும் ஏறக்குறைய 1 லட்சத்து 20 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பூனைகள் எவ்வளவு இருக்கின்றன என்பது கணக்கிடப்படவில்லை. மாடுகளும் ஏறக்குறைய மிகக்குறைவாக ஆயிரக்கணக்கில் கூட இல்லாமல் நூற்றுக்கணக்கில் மட்டுமே மாடுகள் திரிகின்றன. அதுவும் தனியார் வசம் இருக்கக்கூடிய மாடுகள்தான். ஆனால், மிக அதிகமாக 1 லட்சத்து 20 ஆயிரம் நாய்களும் இதே அளவிற்கு பூனைகளும் இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால், இந்த இரண்டு ஜீவன்களும் மக்களை எப்படி சார்ந்து இருக்கின்றன என்றால், பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசலில் வைக்கின்ற உணவையும் தண்ணீரையும் ஒவ்வொரு உணவு விடுதிகள் சிற்றுண்டி விடுதிகள் டீ கடைகளில் வாசல்களிலேயே இருக்கக் கூடியவை. மாமிச விற்பனை மையங்களின் வாசல்களில் இருக்கக்கூடிய நாய்கள் மற்றும் பூனைகள், ஒவ்வொரு பகுதியிலேயும் இருக்கக்கூடிய பொது சந்தைகளில் வசிக்கக்கூடிய நாய்கள், பூனைகள் என வகை வகையாக பிரித்துப் பிரித்து வைத்திருக்கிறார்கள்.
இப்படி இருக்கின்ற சூழலில் இந்த அமைப்புகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக இன்றைக்கு மூடப்பட்டிருக்கின்றன. ஆனால், இவற்றை நம்பி இருக்கக்கூடிய இந்த விலங்குகள் அத்தனையும் இன்று பட்டினியால் கிடக்கின்றன.
இதில் 21 நாள் ஊரடங்கில் பட்டினியால் முதலாவதாக பாதிக்கப்படுகிறவைகள் எவை என்று பார்த்தால் நாய்களும் பூனைகளும்தான். மனிதர்களைச் சார்ந்து இருக்கக்கூடிய இந்த உயிரினங்களுக்கு தேவையான உணவு இப்போது கிடைக்கப் பெறவில்லை என்பதால் பல சிக்கல்கள் எழுகின்றன. குறிப்பாக, நான் சொன்னதுபோல பூனைக்குட்டிகள் தனித்துவிடப்பட்ட பூனைக்குட்டிகள் அதிலேயே அவை இறந்து விடும். அவைகளால் உணவை தேடுவதற்கான வாய்ப்பு இல்லாத சூழலில் அது இந்த 21 நாட்களில் முதல் பத்து நாட்களிலேயே அவை இறந்து விடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
இரண்டாவதாக தனித்துவிடப்பட்ட நாய்க்குட்டிகள் அவைகளும் இந்த முதல் பத்து நாட்களில் இறந்து விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மூன்றாவதாக வளர்ந்த நாய்கள் தங்களுக்கு தேவையான உணவைப் பெற முடியாமல் போனால் முதலிலேயே அவை ஒன்றுடொன்று தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு அதன்மூலமாக அவைகள் நோய்வாய்ப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. அதற்குப் பிறகு, அவை மக்களை நோக்கி வரலாம். நோய்வாய்ப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் தொற்றுக்கள் ஏற்படலாம். நோய்வாய்ப்பட்டவை இறந்துவிட்டால் அவற்றை ஆங்காங்கே இறந்து கிடக்கின்ற நாய்கள் மற்றும் பூனைகளால் உருவாகின்ற தொற்றுநோய்கள் குடியிருப்பு பகுதிகளிலேயே பரவலாம். அடுத்ததாக, இந்த இறந்த விலங்குகளை அப்புறப்படுத்துவது யார் என்கிற முக்கியமான கேள்வி எழுகிறது. ஏனென்றால், குடியிருப்புவாசிகள் இந்த நாய்களை அப்புறப்படுத்துவதில் தயக்கம் காட்டுவார்கள். ஆனால், துப்புரவு பணியாளர்கள் இதை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவார்கள். ஏற்கனவே, இந்த கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் துப்புரவு பணியாளர்களின் பங்கு மிகக் கடுமையாக இருக்கிறது. அவர்கள் பசியும் பட்டினியுமாக அவர்களின் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். அவர்களுக்கு இது மேலும் சுமையாக மாறும். அதுமட்டுமின்றி இந்த இறந்த விலங்குகளால் உருவாகின்ற தொற்றுகளும் கொரோனாவால் உருவாகின்ற தொற்றுக்களும் அவர்களின் வாழ்க்கையை மிக மோசமான நிலைக்கு தள்ளும் என்று சூழல் ஏற்படும். அதுமட்டுமின்றி, நாய்கள் மற்றும் பூனைகளிடமிருந்து நோய்த் தொற்றும் என்ற அச்சம் செல்லப்பிராணிகளை வளர்க்கின்றவர்களிடம் உருவாகியிருக்கின்ற காரணத்தினால் நடுத்தர வர்க்க மக்களிடையே இருக்கின்ற செல்லப்பிராணிகள் வெளியேற்றப்படுகின்ற அவலம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான் கண்கூடாக பார்த்த சான்றுகளை என்னால் சொல்ல முடியும் இப்படி வெளியேற்றப்படுகின்ற நாய்கள் உணவு எங்கே கிடைக்கும் என்று தெரியாமல் அவை ஆங்காங்கே சுருண்டு படுத்துக் கொண்டும் நோய்வாய்ப்பட்டும் இருப்பதை இப்போது பல இடங்களில் பார்க்க முடிகிறது.
கழுத்தில் பட்டை அணிந்து கொண்ட அந்த நாய்கள் வளர்ப்புப் பிராணிகளாக இருந்தவை. வீட்டைவிட்டுப் வெளியேற்றப்பட்ட அவை உணவுக்காக அலைந்துகொண்டு விரைவிலேயே அவைகளும் இறந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சிக்கல் என்பது ஒரு உயிரினச் சிக்கல் மட்டுமில்லாமல் ஒரு மிகப்பெரிய சங்கிலித்தொடர் இயற்கைச் சங்கிலித்தொடர பிரச்னையாக மாறுவதற்கான வாய்ப்பிருக்கிறது. இதன் மூலமாக சென்னையில் வசிக்கக்கூடிய மனிதர்கள் மிகப்பெரிய தொற்றுக்கு ஆளாவார்களோ என்று அச்சம் உருவாகிறது. இதை போக்க வேண்டுமென்று அரசுக்கு கொடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அவர்கள் இன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்கள். மிருகங்களுக்கு உணவு கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கை வந்திருக்கிறது. இந்த சுற்றறிக்கையை அரசு மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தினால் இந்த வாயில்லா ஜீவன்களை காப்பாற்ற முடியும் அதுமட்டுமின்றி வீடுகளிலேயே வசிப்பவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவாவது இந்த உயிர்களை பாதுகாக்க முன்வர வேண்டும்.
இந்த விழிப்புணர்வை நாம் உருவாக்க வேண்டும் அதற்கு நாம் இரண்டு காரியங்கள் செய்ய வேண்டும் முதலாவதாக நம் வீட்டு வாசலில் பூனைகள், நாய்கள் குடிப்பதற்கு தண்ணீர் வைக்கலாம். இரண்டாவதாக பூனைகளும் நாய்களும் சாப்பிடுவதற்கு ஏதுவாக உணவுகளை நம் வீட்டு வாசலில் வைத்து விட்டாலே போதும். அவைகள் பிழைத்துக் கொள்ளும் குறிப்பாக பூனைக்குட்டிகள் இருந்தால் அவைகளுக்கு பால் வைக்க வேண்டும். நாய்களுக்கு வாசலில் உணவு வைக்க வேண்டும். இவற்றை தொடர்ந்து செய்தால் ஒரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து நம்மால் தப்பிக்க முடியும். அதேபோல, பூங்காக்களில் சுற்றுகின்ற நாய்களுக்கு உணவு வைப்பவர்களுக்கு தன்னார்வலர்களுக்கும் தேவையான விழிப்புணர்வை தரவேண்டும். அதன் மூலமாக அவர்கள் உணவு வழங்குவார்கள். உணவு விடுதிகள் முறையான வழிகாட்டுதல்கள் இல்லாத காரணத்தினால் அல்லது தாமதமான வழிகாட்டுதல் கிடைத்த காரணத்தினால் பல உணவு விடுதிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. அவைகள் முறையாக திறந்தாள் அதை சார்ந்து இருக்கக்கூடிய ஜீவன்களுக்கு தேவையான உணவு கிடைக்கும்.
எனவே தமிழக மக்கள் தங்களை சார்ந்து இருக்கக்கூடிய தெருவில் உள்ள நாய்களுக்கும் பூனைகளுக்கும் உணவு வழங்குவதற்கு முன் வந்தால் அவைகளிடம் இருந்து உருவாகும் நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். அத்தனை ஜீவன்களின் உயிரையும் நம்மால் காப்பாற்ற முடியும். எனவே, தெரு நாய்களுக்கும் பூனைகளுக்கும் உணவு வழங்குங்கள் குடிநீர் வழங்குங்கள் சமூகத்தை காப்பாற்றுங்கள் கொரோனாவில் இருந்து நாம் முற்றிலுமாக விடுதலை பெறுவோம் நம்பிக்கையோடு செயல்படுவோம்.” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னையில் உள்ள தெரு நாய்கள், பூணைகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் உணவு அளிக்கும் பணியை குழுவாக மேற்கொண்டு வரும், ஷ்ரவன் கிருஷ்ணன் கூறுகையில், “சென்னையில் கடந்த 3 நாட்களாக நாங்கள் 1400 கிலோ நாய்களுக்கான உணவையும் பூனைகள் உணவையும் வழங்கினோம். எங்களால் முடிந்த அளவு, ஈசிஆர், ஓஎம்ஆர் ரோடு, அண்ணா நகர், அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதிகளில் உணவு வழங்கி வருகிறோம். தொழில் அதிபர் வருண் மணியன் ரூ.2 லட்சம் மதிப்பில் நாய்களுக்கான உணவை வாங்கி அளித்தார். எங்களைப் போல பல தன்னார்வலர்கள், விலங்குகள் நல அமைப்புகள் தெரு நாய்களுக்கும் பூனைகளுக்கும் உணவு வழங்கி வருகின்றனர். போலீசாரும் ரோந்து செல்லும்போது உணவுகளை எடுத்துச் சென்று வழங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். பொதுமக்களும் தானாக சிலர் முன்வந்து நாய்களுக்கும் உணவு வழங்கி வருகிறார்கள். இது சென்னையில் ஒரு 70% விலங்குகளுக்குதான் உணவிட முடியும். அனைத்து விலங்குகளுக்கும் உணவு வழங்க மற்ற மாநிலங்களை போல தமிழக அரசும் முன்வர வேண்டும். இதற்காக அரசு தனியாக நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த ஊரடங்கு காலத்தில் தெரு நாய்கள், பூனைகளுக்கு உணவு வழங்கி அவற்றையும் நம்மையும் பாதுகாக்க முடியும்.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.