Advertisment

இன்றும் பருத்தி தோட்ட வேலைக்கு குழந்தைகள் செல்கிறார்கள் - ஆசிரியர் மகாலட்சுமி

தொடர்ந்து தேவைகளை முன்வைத்தும் தவறுகளை சுட்டிக்காட்டினாலும் தான் விளிம்பு நிலை மாணவர்களுக்கான கல்வி என்பது சாத்தியப்படும்.   

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus lockdown and prolonged schools shutdown will increase child labours in tribal areas says Teacher Mahalakshmi

ஜவ்வாது மலை அரசவல்லி பகுதியில் ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர் மகாலட்சுமி

இன்று கல்விக் கண் திறந்த காமராஜர் அவர்களின் பிறந்த தினம். ஒவ்வொரு அரசு பள்ளியில் படித்த மாணவர்களும் இவரின் திட்டத்தின் பயனாளிகள் தான். இந்திய அளவில் கல்விக்கான புரட்சியை தமிழகம் தான் முதலில் மேற்கொண்டது என்ற பெருமையை நாம் பெற்றுக் கொள்வோம். ”இலவச மதிய உணவு, அதில் முட்டை, இலவச புத்தகங்கள், இலவச மிதி வண்டிகள், இலவச சீருடைகள், இலவச செருப்புகள்” - இலவசம் மக்களை சோம்பேறி ஆக்கியது என்ற பதத்திற்கு மாறாக இவை அனைத்தும் பழங்குடியினர், ஆதிகுடிகள், அலையோடிகள், விளிம்பு நிலை ஏழை மக்கள், பட்டியல் இனத்தவர்கள் என்று அனைவரையும் பள்ளியை நோக்கி வர வழைத்தது. ஒவ்வொரு முதல்வரும் போட்டி போட்டிக் கொண்டு காமராஜரின் கனவை நினைவாக்கினார்கள். அதன் விளைவு இன்று இந்தியாவில் உண்டு உறைவிட பள்ளிகளை அதிக அளவில் கொண்ட மாநிலமாக இருக்கிறது.

Advertisment

மேலும் படிக்க : பழங்குடி மாணவர்களின் கல்வி என்னாகும்? ஐஇ தமிழ் நேரடி ரிப்போர்ட்

ஆனாலும் அனைவருக்கும் சமமாக கல்வி சென்றடைந்ததா என்ற கேள்விக்கான பதில் இன்றும் நமக்கு கிட்டவில்லை. கொரோனா நோயால் ஏற்பட்டிருக்கும் அசாதாரணமான சூழலில் இங்கு மலைவாழ் பழங்குடி குழந்தைகள் கல்வி கற்றுக் கொள்வதில் ஏற்படும் சிக்கல் குறித்து நம்மிடம் உரையாடினார் ஜவ்வாதுமலையில் பணியாற்றும் ஆசிரியர் மகாலட்சுமி.

உங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் குறித்து?

எங்களின் பள்ளியில் மலையாளி பழங்குடி இனத்தை சேர்ந்த 372 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆசியர்களாக 7+1 ஆசிரியர்கள் பொறுப்பில் இருக்கின்றோம்.  இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் காஃபி, ஏலக்காய், தேயிலை மற்றும் மிளகு தோட்டங்களில் கூலி ஆட்களாக வேலைக்கு செல்கின்றனர். வருடத்தில் 4 மாதங்கள் வரை அவர்கள் அங்கேயே தங்கி வேலை பார்ப்பார்கள்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தொலைக்காட்சி வழி கல்வி சாத்தியம் என்று நினைக்கின்றீர்களா?

நிச்சயமாக இல்லை. மலைகிராமங்களில் ஒவ்வொரு வீடும் தூரம் விட்டு தூரமாக அமைந்திருக்கும். அங்கே அனைவரின் வீடுகளிலும் தொலைகாட்சி இருக்கிறதா என்பதை காட்டிலும் அனைவரின் வீட்டிலும் மின்சாரம் இருக்கிறதா என்பது தான் யோசிக்க வைப்பதாக இருக்கிறது. ஒருவர் வீட்டில் மற்றொருவர் சென்று நாள் முழுவதும் டிவி பார்த்து படிப்பது எந்த வகையில் சாத்தியம் என்பது புரியவில்லை.

தொலைக்காட்சி வழி கல்விக்கு பதிலாக வேறென்ன திட்டத்தை நீங்கள் எதிர்பார்த்தீர்கள்?

பட்ஜெட்டில் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களில் இருக்கும் சத்து மாத்திரை முதற் கொண்டு  முதல் பருவ பாடபுத்தகங்கள் வரைக்கும் அனைத்தையும் மாணவர்களுக்கு பள்ளிகள் மூலமாக கொடுத்திருக்கலாம். வெகு தூரத்தில் வரும் மாணவர்களுக்கு அவர்கள் ஊர் பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி அமைப்பு பொறுப்பினை ஏற்று மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் இதர உதவிகளை வழங்கியிருக்கலாம்.

தண்டோரா அடித்திருக்கலாம்

சென்னையில் இருந்து வரும் மக்களுக்கு யாரும் உதவ வேண்டாமென்று கூற உதவிய தண்டோராவை பயன்படுத்தியே மாணவர்களுக்கு, அவர்களுக்கு தேவையான உதவிகள் பள்ளியிலும் பஞ்சாயத்து அலுவலகத்திலும் கிடைக்கும் என்று கூறியிருந்தால் அவர்கள் வந்து வாங்கிச் சென்றிருப்பார்கள்.

கொரோனா காலத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிக்க நேரிடுமா?

ஏன் இல்லாமல்... நிச்சயமாக அதிகரிக்க கூடும். நல்ல வேலை இப்போது பேருந்துகள் ஏதும் ஓடவில்லை இல்லையென்றால் இந்நேரத்திற்கெல்லாம் கள்ளக்குறிச்சி, சேலம், ஆத்தூர் போன்ற ஊர்களில் இருக்கும் பருத்தி தோட்டத்திற்கு பருத்தி எடுக்க ப்ரோக்கர்கள் மூலமாக பணமும் வந்திருக்கும். பெற்றோர்களும், வருமானம் வருகிறதே என்று தங்களின் குழந்தைகளை அனுப்பி வைத்திருப்பார்கள். உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி எங்கும் தடை பெறவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.  அங்கெல்லாம் குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்பட்ட வண்ணம் தான் உள்ளனர். அதற்கும் முன்பும் கூட அவர்கள் வேலைக்கு சென்றுவிட்டு தான் பள்ளிக்கு  வருகிறார்கள். நமது அரசு முதல் ஐநா வரை 14 வயது என்பது தான் குழந்தைப் பருவம். அதற்கு மேல் கிடையாது. பள்ளிகள் தொடர்ந்து நடைபெற்றால் அவர்களை 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு என கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திவிடுவோம். ஆனால் இப்போது வெளியே வேலைக்கென செல்லும் குழந்தைகள் மீண்டும் வந்து வகுப்பறையில் அமர்வார்களா என்றால் இல்லை.

பழங்குடி மாணவர்களுக்கான கல்வி ஏன் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது?

ஆசிரியர்கள் மட்டத்தில் ஒரு வாக்கியம் உண்டு. “மலைல தான வேல,  வாரத்துக்கு ஒரு தடவ, மாசத்துக்கு ஒரு தடவ வந்து கையெழுத்து போட்டா போதும்” அவர்களின்  நினைப்பு அவ்வளவு தான். ஒரு தலைமுறைக்கான கல்வியை நாம் தரப்போகின்றோம் என்ற மனம் நிறைய பேருக்கு இல்லை. நீலகிரி, ஆனமலை என்ற அடர்த்தியான காடுகளைக் கொண்ட பகுதிகளில் இவர்களை வேலைக்கு அமர்த்தினால் ”காடு இருக்கு... புலி இருக்கு... யானை இருக்கு... உசுருக்கு பாதுகாப்பு இல்லன்னு” ஏதாவது சாக்குபோக்கு சொல்கிறார்கள். ஆசிரியர்களின் மன நிலையே இப்படி இருந்தால் ஆர்வத்தோடு குழந்தைகள் எப்படி வந்து படிப்பார்கள். எங்கள் பள்ளியில் 80 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் ஊரில் இருந்து ஒரு மாணவி வந்து படிக்கிறார். மலைகிராமங்களில் இருக்கும் ஏராளமான பள்ளிகள் பெயரளவில் இயங்கி வருவதால் மாணவர்களுக்கு அவர்களின் அடிப்படை உரிமை கிடைக்காமல் போய்விடுகிறது.

ஆசிரியர்கள் தங்கும் இடத்திற்கும் பள்ளிக்கும் இடைப்பட்ட தொலைவும் முக்கியம். மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் கூட ஆசிரியர்களிடம் கேட்கும் அளவிற்கு அவர்கள் அருகில் இருத்தலும் அவசியம்.

பழங்குடி பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் பள்ளிகள் குறித்து?

கல்விக்கான உள்கட்டமைப்பு அமைத்ததில் தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. அதனால் தான் பள்ளிகள் என்றுமே மாணவர்களுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக இருக்கிறது. அவர்களுக்கான உணவும், தங்கும் இடமும் அவர்களை பல்வேறு இன்னல்களில் இருந்து காப்பாற்றி வைத்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு நிகழ்வும் பாலியல் ரீதியான வன்முறைகளை பற்றி யோசிக்கும் போதெல்லாம் “அவள் இந்நேரத்தில் பள்ளியில் இருந்திருந்தால் இது போன்ற நிலை ஏற்பட்டிருக்காதே” என்ற சிந்தனை மனதை மேலும் வேதனை கொள்ள வைக்கிறது.

பழங்குடி இன மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும்?

பொதுவாகவே மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரும் ஆசிரியர்கள் தினமும் கற்றுக் கொள்ள துடிக்கும் மாணவனாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு தேடலை தனக்குள்ளும் தன் மாணவர்களின் மனதிற்குள்ளும் விதைக்கும் ஒரு நபராக இருக்க வேண்டும். பழங்குடி இன குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியராக அவர் இருக்கும் பட்சத்தில் அம்மக்களின் வாழ்வியல் குறித்தும் அவர்களின் வாழ்க்கை குறித்தும் குறைந்த  பட்ச அக்கறையோடும் இருக்க வேண்டும். ஏன் என்றால் 2000 - 2010 வரையான காலகட்டங்களில் தான் அதிக அளவில் பள்ளிகள் வந்தன. அங்கே மாணவர்களை கொண்டு வர பல்வேறு இலவச  திட்டங்கள் தீட்டப்பட்டது. மலை  பகுதிகளில் படிக்க  வரும் மாணவர்கள் அனைவரும் முதல் தலைமுறை மாணவர்கள். அந்த நினைப்பில் அவர்களுக்கு பாடம் நடத்தினால் அதுவே போதுமானது.

இதுவரை தரப்பட்ட இலவசங்களோடு நின்றுவிடாமல் தொடர்ந்து இந்த பள்ளிகள் இயங்குகிறதா என்பதை நேர்மையாக அரசு அதிகாரிகள் கண்காணித்தால் மட்டுமே இம்மாணவர்களின் எதிர்காலம்  சிறப்பாய் அமையும் என்கிறார் மகாலட்சுமி.

மாற்று சிந்தனை கொண்டிருக்கும் நீங்கள் சமாளிக்கும் பிரச்சனைகள் என்ன?

அனைத்துமே பிரச்சனை தான். மாணவர்களுக்கு ஒரு புத்தகம் வாங்குவதில் இருந்து பக்கத்தில் இருக்கும் ஏரிக்கு அழைத்து செல்லும் வரை அனைத்துமே சவால் நிறைந்தவை தான். ஒவ்வொன்றிற்கும் கெஞ்ச வேண்டும். மீண்டும் மீண்டும் சிரித்துக் கொண்டே விண்ணப்பங்களை வைக்க வேண்டும்.  நமக்கென்ன என்று மற்றவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டாமல் ஒதுங்கி நிற்பவர்களால் தான் இங்கு பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிரச்சனைகளையும் சவால்களையும் சுட்டிக் காட்டுவது பெரும் போராட்டமாக இருக்கிறது. இது இத்துடன் முடியவில்லை. தொடர்ந்து தேவைகளை முன்வைத்தும் தவறுகளை சுட்டிக்காட்டினாலும் தான் விளிம்பு நிலை மாணவர்களுக்கான கல்வி என்பது சாத்தியப்படும்.

மகாலட்சுமி டீச்சர் குறித்து

அனைவராலும் செல்லமாக ”டீச்சர் மகாலட்சுமி” என்று அழைக்கப்படும் இவர்  திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் இருக்கும் ஜமுனாமரத்தூர், அரசவல்லி பகுதியில் அமைந்திருக்கும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 2006ம் ஆண்டு இவர் இந்த பள்ளிக்கு வரும் போது காவலர் மட்டுமே இருந்தார்.  மாணவர்கள் இல்லை. தொடர்ந்து தன்னுடைய முயற்சியால் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ள இவர் மற்ற ஆசியர்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார். இன்று இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 362  பேரில் பெரும்பாலானோர் முதல் தலைமுறையாக பள்ளிக்கு வருகிறவர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Thiruvannamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment