அத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளுக்கு வருபவர்களை துன்புறுத்தக் கூடாது என தமிழக உள்துறை செயலாளருக்கும், டிஜிபி-க்கும் உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை தடுக்க மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு மற்றும் மாநில அரசின் 144 தடை உத்தரவு நடமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருட்களான பால், மருந்து, மளிகை போன்றவற்றை விற்கவும், விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் சமூக விலகல் அறிவுத்தலால் அத்தியாவசிய பொருட்களை வாங்க வருபவர்களிடம் சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் காவல்துறை கடுமையாக நடந்துகொள்வதாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
21 நாட்கள் ஊரடங்கு காரணமாக தினக்கூலிகள், தெரு வியாபாரிகள், வெளி மாநிலங்களிலிருந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவிப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையினர் சாலையில் செல்பவர்கள் மீது தடியடி பிரயோகம் செய்கின்றனர் என்றும், சட்டத்திற்கு முரணாக செயல்படுபவர்களை கைது செய்யலாமே தவிர அவர்களை தண்டிக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ள சூழலில், காவல்துறை தாக்கும்போது மக்களும் சில இடங்களில் திருப்பி தாக்குவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடும்பட்சத்தில், மனுவிற்கு எண்ணிடும் பணிகள் முடிந்து சம்பந்தப்பட்ட நீதிபதிகள் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.