CoronaVirus Tamil News: ஏப்ரல் 8-ம் தேதி சென்னைக்கு வருவதாக கூறப்பட்ட, ‘ரேபிட் டெஸ்ட்’ கருவிகள் புதன்கிழமை (ஏப்ரல் 15) சென்னையைத் தொடும் என தெரிய வந்திருக்கிறது. இதையொட்டி சென்னையில் புதிதாக 20 இடங்களில், ‘ஐசோலேஷன்’ வார்டுகள் அமைக்கும் பணியை அரசு முடுக்கி விட்டிருக்கிறது.
இந்தத் தகவலை நம்மிடம் கூறிய உள்ளாட்சித் துறை அதிகாரி ஒருவர், ‘சிறப்பு செயலாக்கத் திட்ட அமைச்சர் என்ற முறையிலும், மாநகராட்சியை உள்ளடக்கிய உள்ளாட்சித் துறை அமைச்சர் என்ற முறையிலும் ஐசோலேஷன் வார்டுகள் அமைக்கும் பொறுப்பு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர் தூங்குகிறாரோ இல்லையோ, எங்களை அவர் தூங்கவிடுவதாக இல்லை’ என அங்கலாய்த்துக்கொண்ட அந்த அதிகாரி, மேலும் சில தகவல்களை பட்டியலிட்டார்.
‘ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு சீன நிறுவனத்திடம் தமிழக அரசு ஆர்டர் கொடுத்தது. ஏப்ரல் 8-ம் தேதியே அந்தக் கருவி வருவதாக இருந்ததும், பின்னர் தாமதமானதால் அது அரசியல் ரீதியாக சர்ச்சை ஆனதும் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் பலரும் பேசியதுபோல அமெரிக்கா அந்தக் கருவிகளை பறித்துக் கொண்டு போகவும் இல்லை; மத்திய அரசு முடக்கி வைக்கவும் இல்லை. தொழில் நிறுவனங்களுக்கே உரிய நிர்வாகப் பிரச்னைகளால் அந்தக் கருவிகள் ஒரு வாரம் தாமதமாக வருகிறது.
முதல்கட்டமாக 50,000 கருவிகள் வரக்கூடும் என எதிர்பார்க்கிறோம். இந்தக் கருவிகள் மூலமாக அரை மணி நேரத்தில் கொரோனா பாதிப்பை உணர முடியும். ஒரு கருவி மூலமாக 50 பேருக்கு பரிசோதனை செய்யலாம். அந்த வகையில் சுமார் 25 லட்சம் பேருக்கு குறுகிய காலத்தில் பரிசோதனை செய்யலாம்.
ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலமாக அதிக கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்தி வைக்க ‘ஐசோலேஷன் வார்டுகள்’ தேவை. சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் அந்த அளவுக்கு அரசு மருத்துவமனைகளில் வார்டுகள் இல்லை. பெசண்ட் நகரில் திவாலான ஒரு தனியார் மருத்துவமனையை கையகப்படுத்தி வைத்திருக்கிறோம்.
அடுத்தகட்டமாக சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் பெரிய கல்வி நிறுவனங்கள் உள்பட 20 இடங்களை கையகப்படுத்துகிறோம். மேற்படி இடங்களை, ‘ஐசோலேஷன் வார்டு’களாக மாற்ற உரிமை கோரி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் அண்ணா பல்கலைக்கழக வளாகங்களும் அடங்கும். உள்ளாட்சித் துறை அமைச்சரே மேற்படி நிறுவனங்களுடன் போனில் பேசி, இடங்களை தயார் படுத்தியிருக்கிறார்.
முன்கூட்டியே, ஐசோலேஷன் வார்டுகள் அமையும் இடங்களை அறிவித்தால் தேவையற்ற சர்ச்சைகள் எழும் என்பதால் அவற்றை அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடவில்லை. அதேபோல ரேபிட் டெஸ்ட் கருவிகள் வருவதாக ஏற்கனவே ஒரு முறை அறிவித்து ஏமாற்றமாகிப் போனதால், இந்த முறை தமிழகம் வந்த பிறகே அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறது அரசு’ என்றார் அந்த அதிகாரி.
ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலமாக சோதனை நடந்தால், அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மளமளவென உயரக்கூடும். ஆனால் அதைக் கண்டு பீதியாகத் தேவையில்லை. கொரோனாவை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரை, ஒரு துரித நடவடிக்கையாக அது இருக்கும் என்கிறார்கள் அதிகாரிகள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.