Advertisment

கொரோனா டெஸ்ட் ரிசல்ட் இவ்வளவு தாமதமா? 'குவாரன்டைன்' குமுறல்கள்

என்னதான் சாப்பாடு கொடுத்தாலும், உடல் உபாதைகள் உடையவர்களுக்கு வீட்டில் உள்ள கண்காணிப்பு இங்கு கிடைக்காது. அது அவர்களின் உடல் உபாதைகளை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த விஷயத்தில் அதிகாரிகள் செய்ய வேண்டியது, கொரோனா பரிசோதனை வேகத்தை அதிகப்படுத்துவது மட்டுமே

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா டெஸ்ட் ரிசல்ட் இவ்வளவு தாமதமா? 'குவாரன்டைன்' குமுறல்கள்

Coronavirus tenkasi district quarantine camp how it functioning- கொரோனா வைரஸ் தமிழ்நாடு அரசு குவாரன்டைன் முகாம், தென்காசி மாவட்டம்

பரீட்சை முடிவுகளுக்காக இப்படி யாரும் பதைபதைப்புடன் ’வெயிட்’ பண்ணியிருக்க வாய்ப்பில்லை. கோவிட் 19 பரிசோதனை முடிவுகளுக்காக ‘குவாரன்டைன்’ முகாம்வாசிகள் காத்திருக்கும் கொடுமை மிகவும் சோகமானது.

Advertisment

நாடு முழுவதும் பெரும்பாலான கல்லூரிகள் இன்று ‘குவாரன்டைன்’ முகாம்களாக உருப் பெற்றிருக்கின்றன. தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் இதுதான் நிலை! குறிப்பாக மாவட்ட எல்லைகளில் இந்த குவாரன்டைன் முகாம்களின் தேவை அதிகம்!

வெளிநாடு, வெளி மாநிலம் அல்லது சென்னையில் இருந்து நீங்கள் சொந்த ஊர் திரும்புகிறீர்கள் என்றால், உங்களை வரவேற்பவை இந்த குவாரன்டைன் முகாம்கள்தான். மாவட்ட எல்லையில் உங்களை வழிமறிக்கும் போலீஸார், இந்த குவாரன்டைன் முகாமுக்கு அனுப்பி வைப்பார்கள். அங்கு உங்களுக்கு சளி மாதிரி எடுத்து, கோவிட் 19 பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். ரிசல்ட் வருகிற வரை, அந்த முகாம்தான் உங்களுக்கு வாசஸ்தலம்! ஒவ்வொருவரும் உத்தேசமாக ஒரு வாரம் வரை இந்த முகாம்களில் தங்க வேண்டியிருக்கிறது.

publive-image குவாரன்டைன் முகாம், தென்காசி மாவட்டம்

இந்த முகாம்கள் எப்படி இயங்குகின்றன? தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வேலாயுதபுரம் பகுதியில் ராமச்சந்திர நாயுடு கல்வியியல் கல்லூரியில் இயங்கும் முகாமில் விசாரித்தோம்.

மொத்தம் 20 அறைகளில் சுமார் 60 நபர்களை இங்கு தங்க வைத்திருக்கிறார்கள். வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ), சுகாதார ஆய்வாளர் (ஹெல்த் இன்ஸ்பெக்டர்) ஒருவரும் இந்த முகாமுக்கு பொறுப்பாளர்கள்! இவர்கள் முழு நேரமும் இங்கேயே இருக்கிறார்கள். பாதுகாப்புக்கு ஒரு தலைமைக் காவலர் ஷிப்ட் முறையில் வந்து அமர்கிறார்.

தினமும் ஒரு முறை அரசு மருத்துவர் ஒருவர் வந்து, இங்கு தங்கியிருப்பவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்துச் செல்கிறார். வட்டாட்சியர், ஆர்.டி.ஓ,, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடுத்தடுத்த நிலைகளில் இந்த முகாம்களை கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கிறார்கள்.

தங்கியிருப்பவர்களுக்குத் தேவையான உணவு, வெளியே கடைகளில் ஆர்டர் செய்து வாங்கப்படுகிறது. காலையில் இட்லி, மத்தியானம் சாம்பாருடன் சாப்பாடு, ரசம், மோர், இரவில் சப்பாத்தி என கொடுக்கிறார்கள். வாரம் ஒருநாள் சிக்கன் குழம்பு சாப்பாடும் வழங்கப்படுகிறது. சாப்பாட்டில் யாருக்கும் பெரிதாக பிரச்னை இல்லை.

publive-image தென்காசி மாவட்டம், வேலாயுதபுரம், ராமச்சந்திர நாயுடு கல்வியியல் கல்லூரி தனிமைப்படுத்தல் முகாம்

எனினும் அதைத் தாண்டிய குமுறல்கள் இந்த வளாகத்திற்குள் நிறையவே இருக்கின்றன. முகாமில் தங்கியிருக்கும் பாஸ்கர் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) கூறுகையில், ‘இங்கு தங்கியிருக்கும் அனைவருமே இ பாஸ் மூலமாக முறையாக வந்தவர்கள். மிக அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே இ பாஸ் வழங்குகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம். எனவே இப்படி வருகிறவர்களை பரிசோதனை செய்து, ஓரிரு நாளில் அனுப்பாமல், ஒரு வாரம் வரை இழுத்தடிப்பது பெரிய கொடுமை’ என கொந்தளித்தார்.

தென்காசி பகுதியை சேர்ந்த கண்ணன், தனது ரெகுலர் மெடிக்கல் செக் அப்- புக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றார். ஜூன் 28 மாலையில் தென்காசியில் இருந்து கிளம்பியவர், 29-ம் தேதி காலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் செக் அப் முடித்தார். உடனே அங்கிருந்து கிளம்பி காரில் வந்தவரை, ஜுன் 29 இரவில் வேலாயுதபுரம் முகாமுக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள்.

ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு இவர் கொரோனா பரிசோதனை செய்து ‘நெகடிவ்’ ரிசல்ட் வந்திருந்தாலும்கூட, சென்னைக்கு போய் வந்ததால் மீண்டும் சளி மாதிரி எடுக்கப்பட்டது. ஜூன் 30-ம் தேதி எடுக்கப்பட்ட சளி மாதிரிக்கு, ஜூலை 4-ல் நாம் விசாரிக்கும் வரை ரிசல்ட் வந்து சேரவில்லை. இதனால் இன்னொரு உடல் உபாதைக்காக தவிர்க்க முடியாமல் செக் அப்-ப்புக்கு சென்றவர் ஒரு வாரமாக இந்த முகாமுக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்.

என்னதான் சாப்பாடு கொடுத்தாலும், உடல் உபாதைகள் உடையவர்களுக்கு வீட்டில் உள்ள கண்காணிப்பு இங்கு கிடைக்காது. அது அவர்களின் உடல் உபாதைகளை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த விஷயத்தில் அதிகாரிகள் செய்ய வேண்டியது, கொரோனா பரிசோதனை வேகத்தை அதிகப்படுத்துவது மட்டுமே! ஜூன் 30-ம் தேதி எடுத்த சளி மாதிரிக்கு ஜூலை 1 அல்லது 2-ம் தேதி ரிசல்ட்டை கொடுத்திருந்தால், ஒரு வாரம் உடல் உபாதைகளுடன் அவர் முடங்க வேண்டியிருக்காது.

‘சென்னைக்கு போய்விட்டு 48 மணி நேரத்தில் திரும்பினால் இந்த குவாரன்டைன் நடைமுறை கிடையாது என வெளியான செய்தியை நம்பி சென்னைக்கு சென்றேன். அரை மணி நேர செக் அப்புக்கு போய்விட்டு வருகிறவர்களை இப்படி வாரக்கணக்கில் முடக்கி அலைக்கழித்தால், மற்ற உடல் உபாதைகளுக்கு எப்படி சிகிச்சை பெற முடியும்?

அதுவும் தவிர வேறு உடல் உபாதைகள் உடையவர்களை இதுபோல முகாம்களில் அடைத்து, அவர்களுக்கு கொரோனா வாய்ப்பை அதிகாரிகள் அதிகப்படுத்தவே செய்கிறார்கள். 40 கிமீ தொலைவில் உள்ள திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சளி மாதிரிகளை எடுத்துச் சென்று பரிசோதித்து வர, ஒரு வாரம் ஆகுமா? இதுதான் இவர்களின் பரிசோதனை வேகம் என்றால், இவர்கள் எப்படி கொரோனாவை ஒழிப்பார்கள்?’ என ஆதங்கப்பட்டார் கண்ணன்.

காஷ்மீரில் பணியாற்றும் ராணுவ வீரர் ஒருவர் 20 நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, தென்காசி மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்திற்கு புறப்படுகிறார். மதுரையில் விமானத்தில் இருந்து இறங்கியதும், அங்கேயே பரிசோதனைகளை செய்து கொள்கிறார். தென்காசி மாவட்ட எல்லையான வேலாயுதபுரம் சோதனைச் சாவடியிலும் வழி மறிக்கப்பட்டு, இந்த முகாமுக்கு வந்து சேருகிறார்.

சளி மாதிரி எடுத்து, ஒரு வாரம் ஆகியும் ரிசல்ட்டுக்காக இங்கேயே காத்திருக்கிறார். இதற்கிடையே 20 நாட்கள் விடுமுறையை 10 நாட்கள் குறைத்து, அவருக்கு உத்தரவு வந்திருக்கிறது. எனவே அவசரமாக அவர் எல்லைக்கு போகவேண்டும். இப்போது இங்கு கோவிட் 19 ரிசல்ட் வந்ததும் ஊருக்கு செல்வதா, எல்லைக்குச் செல்வதா? என்கிற குழப்பத்தில் இருக்கிறார் அவர்.

இந்த முகாமில் சிக்கியிருக்கும் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் இல்லம், இங்கிருந்து கூப்பிடும் தொலைவில் இருக்கிறது. அவரும் பரிசோதனை முடிவுக்காக கைக்குழந்தையுடன் காத்திருக்கிறார். வெவ்வேறு பகுதிகளில் இருந்து வருகிறவர்கள் தங்கியிருப்பதால், ஒவ்வொருவரும் சக நபரை கொரோனா சந்தேகத்துடன் அணுகவேண்டிய நெருக்கடியில் பொழுதைக் கழிக்கிறார்கள்.

இதற்கிடையே ஜூலை 2-ம் தேதி மாலையில் இங்கு பொறுப்பில் இருக்கும் ஹெல்த் இன்ஸ்பெக்டரிடம், ‘எப்போ எங்க ரிசல்ட் வரும்?’ என முகாம்வாசிகள் கேட்டிருக்கிறார்கள். அவரோ சற்றும் மனசாட்சியின்றி, ‘இங்கு மொத்தம் 30 பேருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் அன்டர் பிராசஸ்’ என பீதியூட்டியிருக்கிறார். இதனால் முகாம்வாசிகள் பலர் பீதியில் கதறியிருக்கிறார்கள். மறுநாள் மருத்துவர் ஒருவர் வந்து, ‘அப்படியெல்லாம் இல்லை. பாசிட்டிவ் என்றால் இதற்குள் ரிசல்ட் வந்திருக்கும். நெகடிவ் என்பதால், சாவகாசமாக ரிசல்டை அனுப்பி வைப்பார்கள்’ என ஆசுவாசப்படுத்தியிருக்கிறார்.

இதுபோக, சுமார் 60 பேர் தங்கியிருக்கும் முகாமில் மொத்தம் 6 கழிவறைகள்தான் இருக்கின்றன. அறைகளை சுத்தப்படுத்துவது, கிருமி நாசினி தெழிப்பது ஆகிய நடைமுறைகளும் சரியாக இல்லை என்கிறார்கள், உள்ளே தங்கியிருப்பவர்கள்.

பெயர் குறிப்பிட விரும்பாத சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், ‘வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினரின் எண்ணிக்கை இப்போதைய பணிக்கு போதுமானதாக இல்லை. அதுதான் தாமதங்களுக்கு காரணம். முடிந்த அளவுக்கு சிறந்த சேவையை அளிக்கவே முயற்சிக்கிறோம்’ என்றார்.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தென்காசி ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment