Tamil Nadu traditional rice varieties: இன்று ஒரு பெரிய மழை வந்தால், வேகமாக ஒரு காற்று வீசினால், புயல் எச்சரிக்கை வெளியிட்டாலே மனிதன் மனம் வாடுவது போல் நெற்கதிர்கள் வாடிவிடுகின்றன. மழைக்கும் காற்றுக்கும் சற்றும் தாங்காத நெற்பயிர்கள் விவசாயிகளுக்கு பெரும் நட்டத்தையே ஏற்படுத்துகின்றன. யானை சென்றாலும் தெரியாத அளவிற்கு உயரமாக வளரும் காட்டுயானம் நெற்கதிர் பற்றி உங்களுக்கு தெரியுமா? வறட்சி, காலநிலை மாற்றத்தை சமாளித்து விவசாயிகளுக்கு பயனளித்த குழியடிச்சான் பற்றி தெரியுமா? தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகைகளில் இவைகளும் ஒன்று. அன்றைய மனிதர்கள் மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு அவர்களின் உணவு பழக்க வழக்கங்களும் ஒரு காரணம் என்று நமக்கு இப்போது தான் புரிகிறது. அதனால் தான் பாரம்பரிய நெற்கதிர்களை மீண்டும் நடவு செய்யும் போக்கு விவசாயிகள் மத்தியில் தற்போது அதிகரித்து வருகிறது.
சமீப காலங்களில் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் பல்வேறு தனிப்பட்ட திட்டங்களை நாம் செயல்படுத்துகின்றோம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது முதல், ஆரோக்கியமான உணவு உட்கொள்ளுதல் வரை ஒவ்வொன்றையும் நாம் தேர்ந்தெடுத்து நம் வாழ்வில் செயல்படுத்தி வருகின்றோம். அப்படியான செயல்பாடுகளில் தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது சிறுதானிய உணவு உட்கொள்ளும் முறையும், பாரம்பரிய உணவுகளை மீண்டும் உணவுப் பழக்கத்தில் கொண்டு வரும் முறையும்.
”மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகத்தில் இருக்கும் பாரம்பரிய நெல்வகைகளின் எண்ணிக்கை அதிகமாக தான் இருக்கிறது” என்று தன்னுடைய பாரம்பரிய அரிசி விற்பனை அங்காடி குறித்து தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸுடன் பேச ஆரம்பித்தார் கிருத்திகா குமரன்.
”காய்கறிகளிலும், பழங்களிலும் இத்தனை வகைகள் இருக்கின்ற போது, அரிசிகளிலும் இத்தனை வகைகளா என்று ஆர்வமுடன் வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறுகிறார் கோவையில் ”ஜீரோ-வேஸ்ட்” அங்காடியை வைத்து நடத்தும் கிருத்திகா குமரன்.
வில்வா நிறுவனம் ஏற்கனவே அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்து வந்தது. தங்களின் அங்காடிகளில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கக் கூடாது என்று தீர்க்கமாக இருக்கும் வில்வாவின் புதிய முயற்சி தான் இந்த பாரம்பரிய அரிசி விற்பனை.
ஆரம்ப காலம் முதலே விவசாயிகளிடம் இருந்து அரிசியை வாங்கி பயன்படுத்தி வந்த குமரன் தம்பதியினர் தங்களின் வாடிக்கையாளர்களுக்கும் ஆரோக்கியமான பாரம்பரிய அரிசி வகைகளை விற்பனை செய்தால் என்ன என்ற கேள்வி தான் இன்று வில்வா அக்ரோ உருவாக காரணாமாகியுள்ளது. தங்களின் நிலத்தில் ஆரம்பத்தில் ஒரே ஒரு பாரம்பரிய நெல் வகையை பயிரிட்டு வந்த குமரன் தம்பதியினர் தற்போது கோவையில் தங்களின் சொந்த நிலத்தில் 15க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெற்களை பயிரிட்டு வருகின்றனர். தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து பாரம்பரிய நெற்கதிர்கள் பெறப்பட்டு நெல் பாதுகாப்பினை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக கிருத்திகா தெரிவிக்கின்றார்.
கேரளாவின் முல்லன் கைமா, அசாமின் ஜோஹா, கர்நாடகாவின் ராஜமுடி, பாஸ்மதி (டெஹ்ராடூன்) , காதர்னி (பீகார்), தமிழகத்தின் பறக்கும் சிட்டு, இலுப்பை பூ சம்பா, தூயமல்லி, பூங்கார், கைக்குத்தல் அரிசி, குழியடிச்சான், காட்டுயானம், வெள்ளை மிளகு சம்பா, சீரக சம்பா, துளசி வாசனை சீரகா சம்பா என்று 40க்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசிகளை இந்தியாவின் பல்வேறு பாகங்களில் இருந்து பெற்று கோவையில் விற்பனை செய்து வருகிறது வில்வா அங்காடி.
பிரியாணி என்றால் நம் நினைவுக்கு வருவது ஒன்று பாஸ்மதியாக இருக்கும். இல்லையென்றால் சீரகசம்பா. ஆனால் நம்முடைய பாரம்பரிய அரிசி ரகங்களில் மிகவும் வாசனையான அரிசிகளும் உள்ளன. அந்த அரிசிகளில் பிரியாணி செய்தால் அதன் வாசமே அரிசியின் ரகசியம் பேசும் என்கிறார் கிருத்திகா. வில்வா அங்காடியில் 7 வகையான வாசனை அரிசிகள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய அரிசி ரகங்கள் என்றால் விலை அதிகமாக இருக்குமே என்று கேள்வி எழுப்பிய போது, இன்று பெரும்பாலானோர் உட்கொள்ளும் ஹைப்ரிட் அரிசி ரகங்கள் என்ன விலைக்கு விற்பனையாகிறதோ அதே விலைக்கு மக்களால் பாரம்பரிய அரிசிகளை வாங்கி சமைக்க முடியும். ரூ.85-ல் துவங்கி ரூ. 500 வரை ஒரு கிலோ பாரம்பரிய அரிசி விற்பனை செய்யப்படுகிறது. மூங்கில் மட்டுமே தானாக பூத்து தன்னுடைய இறுதி காலத்தில் அரிசியை உற்பத்தி செய்யும் என்பதால் மிகவும் அரிதாகவே மூங்கில் அரிசி கிடைக்கிறது. அதனால் மூங்கில் அரிசியின் விலை மட்டும் சற்று அதிகம்.
நாம் சாப்பிடும் இன்றைய உணவில் சத்துகளே இல்லை. பாரம்பரிய அரிசிகளிடம் இருக்கும் ஊட்டச்சத்துகள் உடலில் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதையும் நாம் கேட்டு வருகின்றோம். நோயற்ற வாழ்விற்கு இது சிறந்த மாற்றாக அமையும் என்று கூறுகிறார் கிருத்திகா.
அதென்ன ஜீரோ வேஸ்ட் ஸ்டோர்?
விற்பனை நிலையங்களில் ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆங்காங்கே ஜீரோ வேஸ்ட் அங்காடிகள் செயல்பட துவங்கினாலும் கோவை மாநகரில் இந்த வகையான அங்காடிகள் குறைவு தான். ஜீரோ வேஸ்ட் அங்காடி என்றால் என்ன என்று கேட்கின்றீர்களா? உணவுப் பொருட்களை ப்ளாஸ்டிக் பைகள் மூலம் “பேக்கேஜ்” செய்து விற்பனை செய்வதை தவிர்த்து வீட்டில் இருந்து பருத்திப் பைகளையும், எண்ணெய் பாட்டில்களையும் கொண்டு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க வழி செய்வதே இத்தகைய அங்காடிகளின் நோக்கம். தேவையற்ற ப்ளாஸ்டிக் பேக்கேஜ் தடுக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலில் மேற்கொண்டு ப்ளாஸ்டிக் பொருட்கள் குப்பைகளாய் போய் சேர்வதை இத்தகைய அங்காடிகள் பெரிதும் தடுக்கின்றன.
கோவை ஏ.எல்.ஜி. ஹவுஸ், ரேஸ்கோர்ஸ் அருகே அமைந்துள்ள இந்த கடைக்கு நீங்கள் பாரம்பரிய அரிசி வாங்க சென்றால் கட்டாயம் கையில் துணிப்பையை எடுத்து செல்லுங்கள். மேலும் தகவல்களுக்கு வில்வா அங்காடியை நீங்கள் 81100 13553 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.