ம.நடராஜனுக்கு சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சிபிஐ நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி படுத்தியது.
வி.கே.சசிகலாவின் கணவர் ம.நடராஜன். தமிழரசி பத்திரிகை ஆசியராகவும் செயல்பட்டவர். வெவ்வேறு காலகட்டங்களில் அதிமுக.வின் மறைமுக ஆலோசகராக இவர் செயல்பட்டதாக தகவல்கள் உண்டு. ஆனால் ஜெயலலிதா இவருடன் தொடர்பு வைக்கக்கூடாது என கட்சிக்காரர்களை எச்சரித்து பல முறை அறிக்கை விட்டிருக்கிறார்.
Lexus import case: Madras HC upholds 2-year sentence awarded to VK Sasikala's husband M.Natarajan & a relative, Baskaran in 2010. Natarajan imported a Lexus car from UK and forged invoices in 1994.
— ANI (@ANI) November 17, 2017
நடராஜன் லண்டனில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்ததில் அரசுக்கு ஒரு கோடியே 60 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ ஒரு வழக்கு பதிவு செய்தது. அதாவது, லண்டனில் இருந்து பழைய காரை வாங்குவதாக அவர் ஆவணங்களில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் நடராஜன், அவரது உறவினர் பாஸ்கரன் உள்பட 4 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த 2010-ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடராஜன் உள்ளிட்டவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அதில் கடந்த 1-ம் தேதி இறுதிகட்ட விசாரணை முடிந்து, நவம்பர் 17-ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே சிபிஐ நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ம.நடராஜன் உள்ளிட்ட நால்வருக்கும் உறுதி செய்து உத்தரவிட்டது.
ம.நடராஜன் அண்மையில் கல்லீரல் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துகொண்டு, ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டார். அதன்பிறகு நடராஜன் இல்லம் உள்பட சசிகலாவின் உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனை தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்திற்கு சசிகலாவின் உறவினர்கள் போய் வருகின்றனர்.
இந்தச் சூழலில் நடராஜனுக்கும் சிறைத் தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 3 ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத் தண்டனை என்பதால், ம.நடராஜன் ஜாமீன் பெற்றுக்கொண்டு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யும் வாய்ப்பு இருப்பதாக வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
நேற்று இன்னொரு வழக்கில் சசிகலாவின் அக்காள் மகள் மற்றும் மருமகன் ‘ரிசர்வ் வங்கி’ பாஸ்கரன் ஆகியோருக்கு இதேபோல சிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.