370வது பிரிவு விவாதம்; மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் உரை நிகழ்ச்சி ரத்தானது ஏன்?

370வது பிரிவு குறித்து பேச மெட்ராஸ் பார் அசோசியேஷன் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் உரையை ஏற்பாடு செய்திருந்த நிலையில், பாஜக வழக்கறிஞர் பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

By: August 15, 2019, 10:18:18 PM

Article 370 Debates; Why cancelled Senior Advocate Speech: காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ள அரசிலமைப்பின் 370வது பிரிவு திருத்தம் குறித்து மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் உரையாற்ற மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி பாஜகவின் வழக்கறிஞர்கள் பிரிவினரின் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் மத்திய அரசு அரசியலமைப்பின் 370வது பிரிவை திருத்தம் செய்து காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு, எதிர்க்கட்சியினரும் காஷ்மீர் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 370வது பிரிவு நாடு முழுவதும் விவாதமாக மாறியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள மெட்ராஸ் பார் அசோசியேஷன், அரசியலமைப்பின் 370வது பிரிவு குறித்து உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் பேசுவதற்கு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்த நிலையில், பாஜகவின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர் குமரகுரு, மெட்ராஸ் பார் அசோசியேஷனில் 370வது பிரிவு குறித்து மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அளித்துள்ளார். கே.எம்.விஜயன் ஏற்கெனவே 370 வது பிரிவு திருத்தத்துக்கு எதிராக பேசியுள்ளார் என்றும் மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இதைப்பற்றி பேசக்கூடாது என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த நிகழ்ச்சியை மெட்ராஸ் பார் அசோசியேஷன் ரத்து செய்தது.

இது குறித்து, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் ஒரு ஆங்கில செய்தித்தாளில் கூறுகையில், “370வது பிரிவு திருத்தம் குறித்து விவாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது? அந்த நிகழ்ச்சியை ஏன் நிறுத்தினார்கள். இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் விஜயனின் நிலைப்பாடு என்ன என்று தெரிந்துகொள்ளாமலே மெட்ராஸ் பார் அசோசியேஷன் நிகழ்ச்சியை ரத்து செய்திருக்க கூடாது. அப்படி யென்றால் 370வது பிரிவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் மட்டும்தான் கருத்து தெரிவிக்க முடியுமா? ”என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, பாஜகவின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த குமரகுரு ஐ.இ. தமிழுக்கு கூறுகையில், “வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ஏற்கெனவே 370வது பிரிவு திருத்தம் குறித்து சமூக ஊடகங்களில் எதிராகத்தான் பேசியுள்ளார். அதனால், அவரையே கொண்டுவந்து பேசவைத்தால், எதிராகத்தான் பேசுவார். இதில் அவருக்கு தவறான முன்முடிவு இருக்கிறது. அதோடு, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அசோசியேஷன் தனியாக இது பற்றி விவாதிக்குமா? என்று கேள்வி எழுப்பினேன். ஒருவேளை உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஜனநாயக முறையில் அரசியலமைப்பின்படிதான் செயல்பட்டிருக்கிறது என்று கூறினால். அப்போது, அசோசியேஷன் அவருடைய உரையை திரும்ப பெற்றுக்கொள்ளுமா? என்று கேள்வி எழுப்பினேன். ஒருவேளை என்னுடைய கேள்வியில் நியாம் இருந்ததால்தான் மெட்ராஸ் பார் அசோசியேஷன் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளது” என்று கூறினார்.

இது தொடர்பாக, இந்தியாவில் இருக்கிற அரசியலைப்பு வல்லுனர்களில் நானும் ஒருவன். 370வது பிரிவு பற்றிய குடியரசுத் தலைவரின் பிரகடனம் வந்த உடன் அதைப் பற்றிய முழுக்க முழுக்க சட்ட சம்பந்தமாக, அது எப்படி புரிந்துகொள்ளப்படுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்துகொண்டேன். இதையடுத்து, அமெரிக்காவில் இருந்துகூட ஒரு அமைப்பின் கட்டுரையில் என்னிடம் ஒரு நேர்காணல் செய்திருந்தார்கள்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.எச்.ஏ மற்றும் எம்.பி.ஏ என்று இரண்டு வழக்கறிஞர்கள் சங்கம் இருக்கிறது. மெட்ராஸ் பார் அசோசியேஷன் என்கிற எம்.பி.ஏ மாதந்தோறும் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி யாரையாவது பேச வைப்பார்கள். அப்படி, இந்த 370வது பிரிவு நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருவதால் அரசியலமைப்பு துறையில் நிபுனர் என்கிற முறையில் என்னை வந்து பேச கேட்டார்கள். நானும் ஒத்துக்கொண்டேன். செவ்வாய்க்கிழமை பேசுவதாக அறிவித்தார்கள். இந்த உரை அகாடெமிக்கானதுதான். இதில் அரசியல் ஏதும் இல்லை. நானும் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் கிடையாது. நிகழ்ச்சிக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டார்கள்.

இந்த நிலையில், பாஜகவின் சட்டப்பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர் குமரகுரு என்பவர் நான் பேசக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். நான் ஏற்கெனவே 370வது பிரிவு திருத்தத்துக்கு எதிராக பேசியுள்ளதாகவும் அதனால் பேசக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் கடிதம் கொடுத்தார்கள். இதையடுத்து, எம்.பி.ஏ இந்த நிகழ்ச்சியை என்னிடம் கேட்காமலேயே திடிரென்று ரத்து செய்துவிட்டார்கள். இதற்குப் பிறகு, இதில் எனக்கு ஆர்வம் இல்லை. இதில் எனக்கு அரசியல் எதுவும் இல்லை. நிறுத்த சொன்னவர்களுக்குதான் அரசியல் இருக்கிறது.

ஒரு உயர் நீதிமன்றத்தில் ஒரு சட்ட வழக்கறிஞர்களுடைய ஒரு பிரிவு சட்டரீதியாக ஏற்பாடு செய்த ஒரு சட்டப் பிரச்னை விவாதத்தை நடத்தக்கூடாது என்று பாஜகவின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த 5 – 8 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இதை நிறுத்தியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜக ஒன்றும் பெரிய அளவில் பிரச்னை இல்லை. தமிழ்நாட்டில் அதுவும் உயர் நீதிமன்றத்தில் அதன் சட்டம் சம்பந்தமாக அதைப் பற்றி பேச முடியாது என்றால், பாஜக ஆளும் மாநிலத்தில் என்ன நிலைமை இருக்கும். கருத்து சுதந்திரம் அங்கே எப்படி இருக்கும். இதன் மூலம் அரசு சட்ட விளக்கங்களோ அல்லது அரசு தனக்கு எதிரான எந்த விளக்கங்களையும் கேட்க தயாராக இல்லை என்பது தெரிகிறது” என்று கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Courts News by following us on Twitter and Facebook

Web Title:Article 370 debates senior advocates speech cancelled because by bjp legal wing

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X