தொற்று ஆரம்பத்தில் பணி செய்த EMT-களில் நான் மட்டும் தான் பெண்; கர்ப்பமாக இருந்தும் பணியை தொடர்ந்தேன்

சமயங்களில் நல்ல சாப்பாடு கிடைக்காது. தூங்க முடியாது. ரெஸ்ட் ரூம் இருக்காது… எங்களைப் பார்த்தால் மக்கள் முகத்தை சுழித்துக் கொண்டு தள்ளி நடந்த சூழல்களும் இருக்கின்றன என்கிறார் ஆம்புலன்ஸ் செவிலியர் தமிழ் மொழி

Covid heroes Thamizh Mozhi : “ஒரு வருடத்திற்கு முன்பு கோவையில் கொரோனா நோயாளிகளின் தேவைக்காக வெறும் 5 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே இருந்தது. அதில் நான் ஒருவர் மட்டும் தான் பெண். என்னுடைய 5 வயது மகன் திருப்பத்தூரில் இருந்தான்… நானோ கோவையில் இருந்தேன். இந்த நோய் தொற்று எப்போது முடிவுக்கு வரும், எப்போது வீட்டிக்கு செல்லலாம் என்று தான் தோன்றும். இருந்த போதும், இந்த சவலான சூழல்களில் நான் மனம் தளராமல் நிற்க விரும்பினேன்.

நான் மட்டும் அல்ல, இன்று கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்றும் செவிலியர்களும் அதே மன நிலைமையில் தான் இருக்கிறார்கள். ஆனால் எனக்கும் அவர்களுக்குமான வித்தியாசம் என்பது, வேலை நிறைவடையும் தருணம் எது என்பதை தெரிந்து வைத்திருப்பது தான்” என்று தன்னுடைய அர்ப்பணிப்பு குறித்து பெருமையுடன் பேசுகிறார் தமிழ் மொழி.

ஒப்பந்த ஊழியராக கோவை 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஆம்புலன்ஸ் செவிலியராக பணியாற்றுகிறார் தமிழ் மொழி. 32 வயதாகும் தமிழ் மொழியின் சொந்த ஊர் ஜோலார்பேட்டை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர் தன்னுடைய 5 வயது மகனை வீட்டில் விட்டு கோவையில் தங்கி கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆரம்ப கட்ட சிகிச்சை உதவிகளை செய்து வந்தார். கடந்த வருடம் கொரோனா தொற்று அதிகரிக்க துவங்கிய நேரத்தில் இவர் ஒருவர் மட்டுமே பெண் இ.எம்.டி. (Emergencey Medical Technician) ஊழியராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

covid19 : 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி; இந்திய அரசின் திட்டம் என்ன?

Covid heroes

“நாளுக்கு நாள் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையும் உயர துவங்கியது. ஆனாலும் கூட நீங்கள் முதலில் அவசரமாக ஆம்புலன்ஸ் தேவை என்று கேட்டால், உதவி மையம் எங்களை தான் அணுகும். நாங்கள் கொரோனாத் தொற்று நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களின் உடல்நிலை குறித்து நன்றாக ஆய்வு செய்த பிறகு அவர்களை நாங்கள் அழைத்து வருவோம்.

அவர்களுக்கு ஏதேனும் அவசர மருத்துவ உதவி தேவை என்றால் நாங்கள் அதனை ஆம்புலன்ஸில் வைத்தே தருவோம். சில நேரங்களில் எங்கே போதுமான படுக்கை வசதிகள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் சிக்கல் இருக்கும். சில நேரங்களில் மாலை 5 மணிக்கு நாங்கள் ஆம்புலன்ஸில் நோயாளியை வைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றால் எங்களுக்கு அடுத்த நாள் காலையில் தான் படுக்கை வசதி உறுதி செய்யப்படும்.

இதில் மிகவும் கடுமையான போராட்டம் என்பது பி.பி.இ. ஆடையை அணிந்திருப்பது. இது போன்று படுக்கைகள் கிடைக்க தாமதமாகின்ற பட்சத்தில் நாங்கள் இரவு முழுவதும் அதே ஆடையில் தான் இருக்க வேண்டும். 8 மணி நேரம் வேலை முடிந்துவிட்டது. கிளம்புவோம் என்று சென்று விட முடியாது” என்று தன்னுடைய அனுபவங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.

Covid heroes Thamizh Mozhi
தன் சக பணியாளர்களுடன் செவிலியர் தமிழ் மொழி

கொரோனா இரண்டாம் அலையின் போது தலைநகர் சென்னையை காட்டிலும் கூடுதல் பாதிப்பை கண்டது கோவை மாவட்டம். கோவையில் மே மாத பிற்பாதியில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்றும் குறையாமல் சென்னையைக் காட்டிலும் கூடுதலாக பதிவானது. கோவை உட்பட 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மே 26ம் தேதி அன்று சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3561 ஆக இருந்த நிலையில் கோவையில் அந்த எண்ணிக்கை 4268 -ஐ தொட்டது.

“இது ஒன்றும் அவ்வளவு எளிமையான காலம் இல்லை என்பதை உணர்ந்தே நாங்கள் இந்த பணியை மேற்கொண்டோம். சமயங்களில் நல்ல சாப்பாடு கிடைக்காது. தூங்க முடியாது. ரெஸ்ட் ரூம் இருக்காது… எங்களைப் பார்த்தால் மக்கள் முகத்தை சுழித்துக் கொண்டு தள்ளிச் சென்ற சூழல்களும் இருக்கின்றன என்று தொடர்ந்தார் தமிழ் மொழி. கொரோனா தொற்றின் துவககக் காலத்தில் வெறும் 21 ஆம்புலன்கள் மட்டுமே இருந்த நிலையில் அதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆற்றைக் கடந்து பழங்குடி மக்களுக்கு சிகிச்சை; பெரும் ஆதரவை பெற்ற கேரள மருத்துவர்கள்

“இந்த தொற்று குறித்து விழிப்புணர்வு கிடைத்ததும், ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை அதிகமானதும் என்னைப் போன்று பலரும் இந்த பணியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். நினைத்து பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. ஒரு மாதத்திற்கு 500 பேர் வரை நான் பணியாற்றும் ஆம்புலன்ஸில் வைத்து கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றோம். சொன்னால் நம்பமாட்டீர்கள், இதுவரையில் 4 முறை கொரோனா சோதனை மேற்கொண்டிருக்கின்றேன். ஆனால் கடவுள் புண்ணியத்தில் எனக்கு எதுவும் ஆகவில்லை” என்று கூறினார் தமிழ் மொழி.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து 13/06/2021 வரை கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கபப்ட்டவர்களின் எண்ணிக்கை 2,01,245. மொத்தமாக கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1733. மொத்தமாக கோவையில் 720 பகுதிகள் கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவை மாநகராட்சியில் 536 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 35 கொரோனா தடுப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இவை தவிர 12 வட்டாரங்களில் கிராம பஞ்சாயத்துகள் சார்பாக 241 தனிமைப்படுத்தும் மையங்கள் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனக்கு தொடர்ந்து பணியாற்ற விருப்பம் தான். நான் கர்ப்பமாக தான் இருக்கின்றேன். ஆனால் எனக்கு தெரியும் என்னை மீறி என் குழந்தைக்கு ஒன்றும் ஆகிவிடாது என்று. அதனால் முதல் இரண்டு மாதங்களில், குறிப்பாக கொரோனா உச்சம் பெற துவங்கிய நாட்களில் மீண்டும் கொரோனா அவசர ஊர்தி செவிலியராக பணியாற்றினேன். பிறகு உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் உறவினர்கள் கூறியதால் தற்போது வீட்டில் இருக்கின்றேன்.

ஆனாலும் சும்மா ஒன்றும் இல்லை. இப்போதும், யாருக்கெல்லாம் ஆம்புலன்ஸ் தேவை என்று அழைப்பு வருகிறதோ, அந்த அழைப்புகளையெல்லாம் ஒருங்கிணைத்து, “படுக்கை வசதிகள் இருக்கின்ற மருத்துவமனைகளை தேடி, வெய்டிங் லிஸ்ட்டில் இருப்பவர்களுக்கு ஆம்புலன்ஸை உறுதி செய்து, ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகளை அந்த நோயாளியை அழைத்து செல்வதற்கான” செக்மெண்ட் வேலைகளில் “பிஸியாக இருக்கின்றேன்” என்று கூறினார் தமிழ்.

18 வயது முதல் 44 வயதினருக்கான தமிழக அரசின் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில் 21/05/2021 முதல் 12/06/2021 வரையான காலகட்டத்தில் மொத்தம் 83700 நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Covid heroes thamizh mozhi emt nurse who never give up her duties despite her pregnancy

Next Story
ஆன்லைனில் பட்டப்படிப்பு; அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 10 கல்வி நிறுவங்களுக்கு அனுமதிTamilnadu news in tamil: 11 TN universities to offer online degrees from next academic year
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com