Advertisment

பட்டுக்கோட்டை நகைக்கடை உரிமையாளர் தற்கொலை வழக்கு: திருச்சி எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்

இதனடிப்படையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா, பட்டுக்கோட்டை நகைக்கடை உரிமையாளர் தற்கொலை தொடர்பான வழக்கில் கே.கே.நகர் உதவி ஆய்வாளர் உமாசங்கரி என்பவரை ஆயுதப்படைக்கு மாற்றி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டார்.

author-image
WebDesk
New Update
நகைக்கடை உரிமையாளர் தற்கொலை

நகைக்கடை உரிமையாளர் தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் பி.ராஜசேகரன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர். இவரின் மனைவி லெட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். ராஜசேகரன் பட்டுக்கோட்டை தேரடித்தெருவில் ரோஜா என்ற பெயரில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நகைக்கடை நடத்தி வந்தார்.

Advertisment

அதனால் அவரை ”ரோஜா ராஜசேகரன்” என்றே அந்தப் பகுதியில் அழைத்து வந்தனர். இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சுமார் 25 வருடங்களுக்கும் மேலாகப் பயணித்ததுடன், அப்பகுதியில் பொதுமக்கள் பிரச்சனைகளில் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு வந்ததால், பட்டுக்கோட்டைப் பகுதிகளில் எல்லோருக்கும் பரிச்சயமானவராக இருந்து வந்தார்.

இந்நிலையில், இவர் திருட்டு நகையை வாங்கியதாகக் கூறி, ஜூன் 22-ம் தேதி திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல்துறையினர், இவரது நகைக்கடையில் சோதனை நடத்தினர். பின்னர், ராஜசேகரன், அவருடைய மனைவி லட்சுமி ஆகியோரை விசாரணைக்கு திருச்சிக்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகு, வியாபாரிகள் உள்ளிட்டோரின் முயற்சியால் நேற்று முன்தினம் ராஜசேகரன், அவரது மனைவி ஆகியோர் வீட்டுக்கு திரும்பினர்.

இந்நிலையில், வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்ற ராஜசேகரன், செட்டியக்காடு என்ற பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவாரூர் ரயில்வே காவல்துறையினர் ராஜசேகரனின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகரன், அவரது மனைவி லட்சுமி ஆகியோரை திருச்சி போலீஸார் சித்ரவதை செய்ததாகவும், இதனால் ராஜசேகரன் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறி, போலீஸாரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, பட்டுக்கோட்டையில் நேற்று காலை முதல் நகைக் கடைகள், நகைப் பட்டறைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அதேபோல மதியம் 2 மணி முதல் 4 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு கடைத்தெருக்கள் வெறிச்சோடின.

நகைக்கடை உரிமையாளர்கள், பொற்கொல்லர் சங்கத்தினர், வணிகர் சங்கத்தினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து உள்ளிட்டோர் ராஜசேகரனை தற்கொலைக்கு தூண்டிய போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ-வான ரெங்கராஜன், ``ராஜசேகரன் தவறு செய்வதற்கு வாய்ப்பில்லை, பெண் போலீஸ் அதிகாரி விசாரணை என்ற பெயரில் கடுமை காட்டி போராட்ட குணம்கொண்ட ராஜசேகரனைத் தற்கொலைக்கு தூண்டியிருக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்'' என்று தெரிவித்தார்.

மேலும், பட்டுக்கோட்டை வழித்தடத்தில் புதிய ரயில்கள் வருவதற்கான போராட்டங்களில் பங்கெடுத்தவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை கொண்டது வேதனை என்றும் தெரிவித்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில், ``பெண் ஒருவரிடம் திருட்டு நகை வாங்கியது தொடர்பாக, வழக்கமான விசாரணைதான் அவர்களிடம் நடத்தப்பட்டது. கடுமையாகவெல்லாம் நடந்துகொள்ளவில்லை'' என்றனர்.

 ராஜசேகரன் மரணத்தால் பட்டுக்கோட்டை நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் அவர் இல்லம் முன் திரண்டு தங்களின் இரங்கலைத் தெரிவித்ததுடன், அரசு மருத்துவமனை முன்பும் போராட்டம் நடத்தி காவல்துறைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

அதன் பின்னர் பட்டுக்கோட்டை வருவாய்த்துறையினர் இதுகுறித்து மத்திய மண்டல ஐ.ஜியிடம் பட்டுக்கோட்டையில் அசாதாரண சூழல் நிலவுவதை விவரித்தனர். அதன் பின்னர், காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் இறுதியில், திருச்சி கே.கே.நகர் உதவி ஆய்வாளர் உமாசங்கரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர் மீது வழக்குப் பதிவு செய்வதாகவும் உறுதியளித்தனர்.

இதனடிப்படையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா, பட்டுக்கோட்டை நகைக்கடை உரிமையாளர் தற்கொலை தொடர்பான வழக்கில் கே.கே.நகர் உதவி ஆய்வாளர் உமாசங்கரி என்பவரை ஆயுதப்படைக்கு மாற்றி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து, 7 மணிநேர போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர், ராஜேசகரனின் சடலத்தை அவரது குடும்பத்தினர் பெற்றுச் சென்றனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment