மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர், பி.எஸ். பாரதி அண்ணா (வயது 51), அக்கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் பார்வையற்ற ஒருவர் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருப்பது இதுவே முதல் முறை.
தகுதி மூலம் ஒரு வழக்கறிஞராக இருக்கும் பி.எஸ். பாரதி அண்ணா, தனது 19 வயதில் இந்திய மாணவர் கூட்டமைப்பு மூலம் கட்சியில் நுழைந்தார். பின்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பங்காற்றிய இவர், மதுராந்தகத்தில் வட்டசெயலாளராக பணியாற்றியுள்ளார்.
தனது இளங்கலைப் படிப்பை மீனம்பாக்கத்திலுள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் முடித்து, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த பிறகு, செங்கல்பட்டில் வழக்காடும் பயிற்சியைத் தொடங்கினார். அதன் பிறகு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி இளைய மாநில துணைப் பொதுச்செயலாளராக இருந்தபோது நிலப்போராட்டங்கள், சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள், குடிஉயிர் சமூகங்களுக்கான போராட்டங்கள் ஆகியவற்றை நடத்தியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பில் பாரதி அண்ணாவிடம் பேசினோம். அவர் கூறியதாவது:
“எனக்கு மூன்றாம் வகுப்பு படிக்கும் வரை பார்வை இருந்தது. பின்னர், மயோப்பியா (கிட்டப்பார்வை) என்று கண்டறியப்பட்டது. 2016 இல் முழுமையான குருட்டுத்தன்மையாக முன்னேறியது. அதன்பிறகு, என்னுடைய சமூக நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக முடங்க ஆரம்பித்தது.
சிறிது காலம் கடந்ததும், என்னை மாற்றுத்திறனாளியாக அறிவிக்க முடியாமல் பெரும் மனப்போராட்டத்திற்கு உள்ளானேன். பின்பு, 2018ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளி என்று அடையாள அட்டை பெற்று, மாற்றுத்திறனாளி அமைப்பில் இனைந்து, மாநில துணைத்தலைவராக செயல்பட ஆரம்பித்தேன். அது எனக்கு உத்வேகத்தை கொடுத்தது. கண்பார்வை இழப்பால் பலவகையில் இடையூறுகள் இருந்தாலும், நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் மீண்டு எழ முடிகிறது.
2017ஆம் ஆண்டு நடந்த 22ஆம் மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கழக உறுப்பினராக மட்டும் பணியாற்றி கொள்கிறேன் என்று கேட்டேன். ஆனால், 23ஆவது மாநாட்டில் எல்லோரும் சேர்ந்து என்னை தலைமைத் தாங்கி நடத்த வேண்டும் என்று கேட்டார்கள்.
களத்தில் பணியாற்ற செல்லும் போது, எதிரில் நின்று பேசுபவர்களின் உடல் மொழி புரியாமல் இருப்பது சற்று கடினமாக இருக்குமா என்று அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், எனக்கு அது கடினமாக தென்படவில்லை. ஏனென்றால், நான் செல்லும் இடங்களில், என்னிடம் பேச வருபவர்களிடம் வெளிப்படையாக விமர்சனத்தை வைக்க வேண்டி கேட்டுக்கொள்வேன்.
ஊனமுற்றோர் உரிமைகள் சாசனத்தின் பிரிவு: 29இன் படி, அரசியல் பங்கேற்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அது பெரும் அளவிற்கு இங்கு பின்பற்ற படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
தற்போது, பெண்களுக்கு காட்சிகளில் இடஒதுக்கீடு அளிப்பது போல, மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தது 5% வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.”, இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil