Advertisment

மார்க்சிஸ்ட் போராட்டங்களுக்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவு தேவை : ஜி.ராமகிருஷ்ணன்

ரேசன் கடைகளில் மானிய விலையில் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்து மத்திய அரசு பொதுவிநியோக முறை திட்டத்தையே சீர்குலைக்க முயற்சிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்துப் பகுதி மக்களும், கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
மார்க்சிஸ்ட் போராட்டங்களுக்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவு தேவை : ஜி.ராமகிருஷ்ணன்

ரேஷன் முறையை சீர்குலைக்கும் முயற்சிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளும் துணை நிற்க வேண்டும் என ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

Advertisment

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:

சமையல் எரிவாயு மானியத்தை முற்றாக நிறுத்தப் போகிறோம் என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பு, எளிய மக்கள் மீது அமிலத்தை வீசுவதாக அமைந்தது. மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்ற வேண்டுகோள், மானியம் வேண்டும் என்றால் ஆதார் எண்ணுடன் இணை என்ற நிபந்தனை, மானியத்தை வங்கிக் கணக்கில் போடுகிறோம் என்று துவங்கி தற்போது மானியம் ரத்து என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்புக்கு எதிராகக் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

வேறு வழியின்றி, அதனைத் திரும்பப் பெறுவதாக மாநிலங்களவையில் அமைச்சர் கூறினாலும், அது கழுத்தில் தொங்குகிற கத்தியாகத் தான் இருக்கிறது. ஏனெனில், மத்திய பாஜக அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் நவீன தாராளமய கொள்கையின் ஒரு முக்கிய அம்சம், மானியத்தை வெட்டுவது அல்லது நிறுத்துவது. அந்தக் கொள்கை வழியில் எடுக்கப்பட்ட முடிவே இது. எதிர்ப்பின் காரணமாக ஒத்திப் போடுகிறார்கள், சமையல் எரிவாயுக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்யும் முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறது.

அடுத்து உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தமிழக மக்களில் 50 சதவீதத்தினருக்குத் தான் பொது விநியோக முறை அமலாகும் என்ற நிலையில், கணிசமான மக்களை அந்தப் பாதுகாப்பு வட்டத்திலிருந்து வெளியே துரத்தும் ஏற்பாடு ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே, இதை மனதில் வைத்து, மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பும் மலிவு விலை அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவற்றைக் குறைக்கும் நடவடிக்கை துவங்கி விட்டது. இது, தமிழக அரசின் 2017-2018 கொள்கை விளக்கக் குறிப்பிலேயே தெளிவாக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, மார்ச் 2010ல் மத்திய அரசு வழங்கி வந்த 59780 கி.லி. மண்ணெண்ணெய், ஏப்ரல் 2017 முதல் 17940 கி.லி.ஆகக் குறைக்கப்பட்டு விட்டது. சர்க்கரைக்கான மானியம் இனி ‘அந்தோதயா அன்னயோஜனா’ அட்டைதாரர்களுக்கு மட்டும் தான் என்று மத்திய அரசு அறிவித்து விட்டது. சர்க்கரை மீதான லெவி கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு விட்டன. அரிசியும் கூட, மாதாந்திர தேவைக்கும் மத்திய அரசு அனுப்புவதற்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. மொத்தத்தில் வெளிமார்க்கெட் விலைக்கு வாங்கி, பொது விநியோக முறைக்குப் பயன்படுத்தும் கூடுதல் சுமை மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் பொதுவிநியோக முறை திட்டத்தின் மூலம் பயன்பெறும் குடும்பங்களை முன்னுரிமை பகுதி, முன்னுரிமையல்லாத பகுதி என்று பிரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூபாய் ஒரு லட்சமும் அதற்கு மேலும் ஆண்டு வருமானம் பெறக்கூடிய குடும்பங்கள், 5 ஏக்கரும் அதற்கு மேலும் நிலம் வைத்திருக்கும் குடும்பங்கள் உள்ளிட்டு பல நிபந்தனைகளை விதித்து இத்தகைய குடும்பங்கள் எல்லாம் முன்னுரிமையற்ற குடும்பங்கள் இவர்களுக்கு ரேசன் கடைகளில் மானிய விலையில் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்து மத்திய அரசு பொதுவிநியோக முறை திட்டத்தையே சீர்குலைக்க முயற்சிக்கிறது.

மக்களின் வாழ்வாதாரத்தையே புரட்டிப் போட்டு நிர்மூலமாக்கும் மோடி அரசின் மேற்கண்ட கொள்கைகளை வன்மையாகக் கண்டிப்பதுடன், இத்தகைய முடிவுகளை ஏற்க மறுப்பதோடு ரத்து செய்திட மாநில அரசு, மத்திய அரசிற்கு கூடுதல் நிர்ப்பந்தத்தை அளிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசை வலியுறுத்துகிறது. சீரழிவு கொள்கைகளின் தாக்கம் குறித்து மக்களை சந்தித்து விளக்குவதற்கும், போராட்ட பாதைக்கு அணி திரட்டுவதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்துப் பகுதி மக்களும், கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Cpm G Ramakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment