/indian-express-tamil/media/media_files/2025/11/04/p-shanmugam-tn-elections-ceo-2025-11-04-11-11-50.jpg)
“எஸ்.ஐ.ஆர் படிவம் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என்ற தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் கருத்து வன்மையான கண்டனத்துக்குரியது” என்று சி.பி.எம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்தார்.
சமீபத்தில் பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) பணிகள் நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், விரைவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் பணி கடந்த 28-ம் தேதி தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ள தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தி.மு.க சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், எஸ்.ஐ.ஆர் படிவம் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும். முகவரி மாற்றம் செய்திருந்தாலும் அவர்கள் பெயர் பட்டியலில் இடம்பெறாது என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாக சன் நியூஸ் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்ததைச் சுட்டிக் காட்டிய சி.பி.எம். மாநில செயலாளர் பெ. சண்முகம், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் கருத்து கண்டனம் தெரிவித்தார்.
இது குறித்து பெ.சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “எஸ்.ஐ.ஆர் படிவம் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என்ற தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் கருத்து வன்மையான கண்டனத்துக்குரியது.
எஸ்.ஐ.ஆர் என்பதே சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் வாக்காளர்களை மிரட்டும் இந்த கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
Click here for SIR 2026 instructions :- https://t.co/vWHOY0a81qhttps://t.co/JeNkN3iSJGpic.twitter.com/3lAT5xvs9y
— TN Elections CEO (@TNelectionsCEO) November 3, 2025
சி.பி.எம் மாநில செயலாளர் பெ. சண்முகத்தின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில், “இந்திய தேர்தல் ஆணையம் 27.10.2025 ஆம் நாளிட்ட கடிதம் எண் 23/2025-ERS(Vol.II)-இன் படி பதிவு அலுவலர் வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களும் சேர்த்து, வரைவு வாக்காளர் பட்டியலை தயாரிப்பார்.
வரையறுக்கப்பட்ட காலத்தில் நிரப்பப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இயலாத வாக்காளர்கள் குறித்த சீர்திருத்தப் படிவம் 6 உடன் குறிப்பிடப்பட்டுள்ள உறுதிமொழிப் படிவத்தையும் கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளுக்கு அளிக்கப்பட்ட காலமான 9.12.2025 முதல் 8.1.2026 வரை, தங்கள் பெயரை சேர்ப்பதற்குத் தாக்கல் செய்யலாம்.
1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 24 ஆம் பிரிவின் கீழ், 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 24(a) பிரிவின் படி, வாக்காளர் பதிவு அலுவலரின் யாதொரு முடிவிற்கும் எதிராக, மாவட்ட நடுவரிடம் மேல்முறையீடு செய்யலாம். மேலும், முதல் மேல்முறையீட்டு அதிகாரி வழங்கிய முடிவிற்கு எதிராக, 24(b) ஆம் பிரிவின் கீழ், தலைமை தேர்தல் அதிகாரியிடம் இரண்டாம் மேல்முறையீடு செய்யலாம். இத்தகைய மேல்முறையீடுகள் 1960 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளைச் சேர்ந்த, 27 ஆம் விதியின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us