கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவத்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மோடி அரசின் 40 மாத கால ஆட்சி என்பது அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்துவிட்டது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் மோடியால் நிறைவேற்ற முடியவில்லை. மக்கள் மத்தியில் மோடி அரசுக்கு எதிராகவும், பாஜக ஆளும் மாநில அரசுகளுக்கு எதிராகவும் கடும் கோபம் எழுந்துள்ளது. பல்வேறு தேர்தல் முடிவுகள் இதை உணர்த்துகின்றன.
குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், பாஜக பதற்றம் அடைந்துள்ளது. மோடி அரசின் மதவெறி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் சித்தாந்த ரீதியாகவும் போராட்டக் களத்திலும் எதிர்த்து வருவதால், அவர்களது ஆத்திரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி திரும்பியுள்ளது.
கேரளத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் நேரடியாக பங்கேற்று கலகத்தை தூண்ட முயற்சித்தபோதும், கேரள மக்கள் இந்த சதியை முறியடித்துள்ளனர்.
கேரளத்தில் நடக்கும் வன்செயல்களுக்கு ஆர்எஸ்எஸ்-பாஜகவின் காவி பயங்கரவாதமே காரணம் என்பதை அந்த மாநில மக்கள் தெளிவாக உணர்ந்திருப்பதால், பாதயாத்திரை என்ற பெயரில் அவர்கள் நடத்திய முயற்சி கேரள மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்துள்ள ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள கட்சி அலுவலகங்களையும் ஊழியர்களையும் தாக்கினர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு அஞ்சவில்லை. அரசியல் ரீதியாக பாஜகவை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது.
நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் என பத்திரிகையாளர்கள், பகுத்தறிவாளர்களை படுகொலை செய்து வன்முறையில் ஈடுபடுவது யார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பசு பாதுகாப்பு என்கிற பெயரில் நாடு முழுவதும் காவிப்படை செய்து வரும் அட்டூழியங்கள் நாட்டின் மதச்சார்பற்ற அடித்தளத்திற்கே சவால் விடுவதாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ‘கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள மாநிலத்தை தாண்டி வேறு எங்கும் கால் வைக்க முடியாது’ என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் இதேபோன்று, மிரட்டும் தொனியில், பினராயி விஜயன் கேரளாவை விட்டு வெளியே போக முடியாது என்று கூறியுள்ளார்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு முதல்வரை இவ்வாறு மிரட்டுவது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. பாசிச மனப்பான்மை கொண்டவர்கள்தான் இத்தகைய மிரட்டலில் ஈடுபடுவார்கள். பொன்.ராதாகிருஷ்ணன், தாம் வகிக்கும் மத்திய அமைச்சர் பதவிக்கு சற்றும் பொருந்தாத வகையில், இவ்வாறு பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, கேரளாவுக்கு யாத்திரை செல்லப் போவதாக கூறிக் கொண்டு, அந்த மாநில மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஆத்திரத்தில் வரம்பு மீறி வார்த்தைகளை பயன்படுத்துகிறார். ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற வள்ளுவரின் குறளை இருவருக்கும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். சட்டம்-ஒழுங்கை கெடுக்கும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளவேண்டும் என கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.