/tamil-ie/media/media_files/uploads/2017/07/g.r.jpg)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக.வுக்கு ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு, சொந்த மேடையில் பிரசாரம் செய்வோம் என அறிவித்திருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் இன்று (30.11.2017) கோவையில் மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், டி.கே. ரங்கராஜன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
மத்திய பாஜக அரசு நாசகார பொருளாதார நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது, மோடி எடுத்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் நிர்மூலம் ஆக்கியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி இழப்பு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடக்கம் பணியில் இருந்த தொழிலாளர்கள் வேலை இழப்பு, வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது,
மேலும், பணவீக்கம் விலை உயர்வு போன்றவற்றால் வெந்து மடியும் மக்கள் மீது ஜிஎஸ்டி வரி எனும் அதிரடி தாக்குதலையும் மோடி அரசு தொடுத்துள்ளது, இதனால் அனைத்து பொருள்களின் விலையும் மேலும் ஒரு சுற்று உயர்ந்துள்ளது.
விவசாயம் பொய்த்துப்போனதால் விவசாயிகள் சொல்லொண்ணா நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர், விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை தீர்மானிக்க மறுப்பது, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மறுப்பது என முற்றிலும் விவசாயிகள் விரோத அரசாக மோடி அரசு மாறியுள்ளது.
மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மதவெறி நிகழ்ச்சி நிரலை மோடி அரசு தீவிரமாக முன்னெடுக்கிறது. பத்திரிக்கையாளர்கள், கலைஞர்களின் கருத்துரிமை அப்பட்டமாக மறுக்கப்படுகிறது, சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள், பன்முக பண்பாட்டை சிதைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது,
தமிழகத்தில் காலுன்ற முயலும் பாஜக சதியை முறியடிக்க அனைத்து முயற்சிகளையும மேற்கொள்வது காலத்தின் கட்டாயம் என மாநிலக்குழு கருதுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் உள்ள அதிமுக தொடர்ந்து மத்திய பாஜக அரசின் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் ஆதரித்து வருகிறது. முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு மோடி அரசின் கைப்பாவையாகவே அதிமுக அரசு மாறிவிட்டது.
அதிமுகவில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி தமிழகத்தில் தனது ஆட்சி அதிகாரத்தை திணித்திட பாஜக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதிமுக தலைமையையும் அமைச்சர்களையும் மிரட்டி பணியவைப்பதற்கு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்துகிறது.
ஊழலில் திளைத்துள்ள அதிமுக அமைச்சர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் ஊழல் முறைகேட்டை தொடர்ந்திடவும் அதிகாரத்தில் நீடித்திட பாஜகவிடம் சரணாகதி அடைந்துள்ளனர். தமிழகத்தின் உரிமைகள் அடுத்தடுத்து மத்திய அரசினால் பறிக்கப்படும்போதும் அதிமுக அரசு வாய் திறக்க மறுக்கிறது.
காவிரி மேம்பாட்டு ஆணையம் அமைக்க மறுப்பு, நீட் தேர்வு திணிப்பு, கீழடி ஆய்வு முடக்கம், வறட்சி மற்றும் வெள்ள நிவாரணத்திற்கு மாநில அரசு கோரிய தொகையை ஒதுக்க மறுப்பது, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி திணிப்புச் சட்ட வரம்புகளை மீறி ஆளுநர் அரசுப்பணிகளை நேரிடையாக ஆய்வு செய்வது, பொது விநியோகத்திற்கான மத்திய ஒதுக்கீட்டை வெட்டிக் குறைப்பது போன்ற தமிழக விரோத நடவடிக்கைகளை தட்டிக்கேட்க திராணியற்ற அரசாக அதிமுக அரசு மாறியுள்ளது.
மறுபுறத்தில் அதிமுக ஆட்சி மக்கள் விரோத அடக்குமுறை அராஜக அணுகுமுறையை பின்பற்றுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஊழல் முறைகேடுகளில் அமைச்சர்கள் ஆளும் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்து நடைபெற்ற ரெய்டுகள் இதனை ஊர்ஜிதம் செய்கிறது. அதிமுக ஆட்சியில் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தொடர் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள்.
படிப்படியாக மதுக்கடைகளை மூடுவது என்கிற தேர்தல் வாக்குறுதி உள்ளிட்டு எந்த வாக்குறுதியும் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. ஆணவக்கொலைகள் தொடர்கின்றன. தீண்டாமைக் கொடுமைகளும் அதிகரித்து வருகின்றது.
கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கந்துவட்டி அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பாதிப்புக்குள்ளான மக்களின் போராட்டங்களை மூர்க்கத்தனமாக தாக்குவது, பொய்வழக்கு போடுவது குண்டர் சட்டங்களை பாய்ச்சுவது என்கிற நடவடிக்கையின் மூலம் ஜனநாயக உரிமைகளை பறிக்கிறது.
மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை மற்றும் அனைத்து நிர்வாக துறையிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இத்தகைய அதிமுக அரசு இனியும் நீடிப்பது தமிழக மக்கள் நலனைக் காவு கொடுப்பதாக அமைந்துவிடும். சில மாதங்களுக்கு முன்பு பணவிநியோகம் செய்யப்பட்டதால் ஆர்.கே.நகர் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
ஆனால் பண விநியோகம் செய்த அமைச்சர்கள், ஆளும் கட்சி பிரமுகர்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கைக் கூட தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் ஆளும் அதிமுக தலைமைக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கிய அடுத்த நாளே இத்தொகுதிக்கு தேர்தலை அறிவித்துள்ளதானது தேர்தல் ஆணையம். பாஜக, அதிமுக அனைத்தும் ஒண்றோடு ஒன்று பிணைந்துள்ளதை காட்டுகிறது.
எனவே அதிமுகவும் பாஜகவும் இத்தேர்தலில் இணைந்து போட்டியிட்டாலும் அல்லது தனித்தனியே போட்டியிட்டாலும் இரண்டு கட்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை. மேற்கண்ட பின்னனியில் மத்திய பாஜகவையும் அதன் கைப்பாவையாக மாறியுள்ள அதிமுகவையும் இந்த இடைத்தேர்தலில் தோற்கடிப்பதே தமிழக மக்களின் நலனுக்கு உகந்தது என சிபிஎம் மாநிலக்குழு கருதுகிறது.
எனவே அதிமுக - பாஜகவை தோற்கடிக்க ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது சொந்த மேடையில் இருந்து ஆதரித்து பணியாற்றுவது என மாநிலக்குழு முடிவெடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துள்ள இம்முடிவுக்கு ஆர்.கே. நகர் மக்கள் ஆதரவளிக்க வேண்டுமெனவும், தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கான உரிய ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் எனவும் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.