பட்டாசு உற்பத்தியாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்கியது

பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். போதிய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இன்று நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி அறிமுக கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், பட்டாசு தொழிலுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்களது காலவரையற்ற போராட்டத்தை இன்று முதல் தொடங்கியுள்ளனர்.

பட்டாசு தொழிலுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரி தங்களை கடுமையாகப் பாதிக்கும் என்று வருத்தம் தெரிவித்துள்ள அவர்கள், அதனை 12 சதவீதமாக குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள போராட்டத்தையடுத்து, ஏராளமான பட்டாசு ஆலைகள் மற்றும் விற்பனை கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

×Close
×Close