விஷால் நிலைமை படு சோகம்தான்! குழியை பறித்து, குப்புற தள்ளிய கதையாக வேட்புமனுவை நிராகரித்த கையுடன் அவர் மீது அதிகாரியை மிரட்டிய புகாரும் பதிவாகிறது.
விஷால், ஆர்.கே.நகரில் போட்டியிட இருப்பதாக கூறிய தருணம் முதல் ஆரம்பித்த பரபரப்பு இன்னும் ஓயவில்லை. விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்த 10 பேரில் சுமதி, தீபன் ஆகிய இருவரும், ‘அதில் இருப்பது தங்கள் கையொப்பம் இல்லை’ என தேர்தல் அதிகாரி வேலுசாமியிடம் வாக்குமூலம் கொடுத்தனர்.
விஷால் மேற்படி இருவரின் உறவினரான வேலு என்பவரிடம் செல்போனில் பேசி, அந்த ஆடியோ பதிவை தேர்தல் அதிகாரி வேலுசாமியிடம் போட்டுக் காட்டினார். அதைக் கேட்டு முடித்ததும் 5-ம் தேதி இரவு 9.30 மணி வாக்கில் வேட்புமனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரி கூறியதாக தெரிகிறது. உடனே தேர்தல் அதிகாரிக்கு கை கொடுத்து நன்றி தெரிவித்து, ஆரவார கூச்சலுடன் விஷால் தரப்பு வெளியே வந்தது.
ஆனால் இரவு விஷால் வீடு போய் சேர்ந்த வேளையில், அவரது வேட்புமனு தள்ளுபடி என செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட தீபன், சுமதி ஆகிய இருவரும் மீண்டும் தேர்தல் அதிகாரி முன்பு ஆஜராகி தங்களின் நிலையை விஷாலுக்கு எதிராக தெளிவு படுத்தியதாக கூறப்பட்டது.
நேற்று முழுவதும் அதிகாரிகளுக்கு புகார் அனுப்புவதில் கவனம் செலுத்திய விஷால், இன்று மேற்படி சுமதியையும் தீபனையும் தேடிப் பிடிப்பதில் ஆர்வம் காட்டினார். ஆனால் தீபனும் சுமதியும் அவர்களது வீட்டுக்கே போகவில்லையாம். இதையும் அவர்களின் உறவினர்களிடம் பேசி ஆதாரமாக்கிக் கொண்டு இன்று பிற்பகல் 2.45 மணிக்கு ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுசாமியை சந்தித்தார் விஷால்.
அப்போது வேட்புமனுவை ஏற்றுக்கொண்டதாக என்னிடம் கூறிவிட்டு அப்புறம் ஏன் சார் நிராகரித்தீர்கள்? என அழுத்தமாக கேட்டார் விஷால். அதற்கு தேர்தல் அதிகாரி வேலுசாமி, ‘நீங்கள் மிரட்டியதால், நான் அப்படி சொல்லும்படி ஆகிவிட்டது!’ என்றாராம். இதை பிறகு வெளியே வந்து விஷாலே பேட்டியில் கூறினார்.
‘நான் உள்ளே என்ன பேசினேன் என்பது முழுக்க அரசு வீடியோவில் பதிவாகியிருக்கிறது. நேற்று வேலுசாமி ஐயாவிடம், ‘ஏன் சார் என் மனுவை நிராகரித்தீர்கள்?’ என கெஞ்சிக் கேட்டேன். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. இப்போது என் மீதே புகார் கூறுகிறார் அவர்’ என கொந்தளிப்புடன் பேட்டியளித்தார் விஷால்.
இதற்கிடையே அதிகாரிகளை மிரட்டியதாக விஷால் மீது ஒரு கிரிமினல் வழக்கும், வேட்புமனுவில் பொய்யாக இருவரின் கையொப்பத்தை இட்டு மோசடி செய்ததாக இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்படும் என தெரிகிறது. இடைத்தேர்தலில் களம் இறங்க நினைத்த விஷாலுக்கு பாடம் புகட்டுவதாக நினைத்து, அவரை வலுவாக அரசியலுக்குள் இழுக்கிறார்கள் என்றே தெரிகிறது.