Advertisment

டெல்டா மாவட்டங்களில் முதல்வர் விசிட் பாதியில் ரத்து: மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் இறங்க முடியவில்லை

TN CM Edappadi Palaniswami: கஜ பாதித்த பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் சென்று முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி ஆய்வு செய்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN CM Edappadi Palaniswami Goes on Helicopter to Gaja relief, கஜ புயல், ஹெலிகாப்டரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

TN CM Edappadi Palaniswami Goes on Helicopter to Gaja relief, கஜ புயல், ஹெலிகாப்டரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

CM Edappadi K Palaniswami At Delta districts: கஜ பாதித்த மாவட்டங்களில் ஆய்வுக்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. முதல்வர் நேரில் வரவில்லை என எதிர்க்கட்சிகள் புகார் கூறியதை தொடர்ந்து ஹெலிகாப்டரில் சென்று முதல்வர் ஆய்வு செய்வது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டையில் நிவாரண உதவிகளை செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மோசமான வானிலை காரணமாக நாகை, திருவாரூர் பயணத்தை ரத்து செய்தார்.

Advertisment

கஜ புயல், கடந்த 16-ம் தேதி அதிகாலை தமிழக கடற்கரையைக் கடந்து, டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியது. பல்லாயிரக்கணக்கான வீடுகள், தென்னை மற்றும் வாழைத் தோப்புகள் சேதமாகியிருக்கின்றன. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தவிக்கிறார்கள்.

கஜ புயல் சேதம் குறித்து நேற்று (நவம்பர் 19) தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு கஜ நிவாரணப் பணிகளுக்கு ரூ 1000 கோடி நிதி ஒதுக்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தவிர, கஜ பாதித்த பகுதிகளை இன்று (20-ம் தேதி) முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கஜ பாதித்த பகுதிகளை முதல்வர் பார்வையிடவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஏற்கனவே புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கஜ நிவாரணப் பணிகளுக்காக சென்ற அமைச்சர்களை சில இடங்களில் மக்கள் முற்றுகையிட்டனர். இந்தச் சூழலில் சாலை மார்க்கப் பயணத்தை தவிர்த்துவிட்டு, முதல்வர் ஹெலிகாப்டர் பயணத்தை தேர்வு செய்தார்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை 9 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையார்குளம் பகுதிக்கு நேரில் சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகள் கேட்டார்.உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதிப்பு விவரங்களை முதலமைச்சர், துணை முதலமைச்சரிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எடுத்துரைத்தார். மச்சுவாடி, மாப்பிள்ளையார்குளம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயலின் போது உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்கினார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் அளித்தார். பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் முதலமைச்சர் பெற்றுக் கொண்டார்.

முதலமைச்சர் பழனிசாமி: 'கேரள வெள்ளத்தின் போது எதிர்க்கட்சிகள் செயல்பட்டது போல், தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படவில்லை. அனைவரும் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும், கட்சி பாகுபாடின்றி பொதுமக்களுக்கு உதவ வேண்டும்.

அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அப்போது தான் சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெறும். கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமரை சந்தித்து விளக்கம் அளிக்க நேரம் கேட்டுள்ளோம், நாளை மாலை நேரம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு முழு அறிக்கை அனுப்பி, உரிய நிதி பெறப்படும்'

பாதியில் ரத்தான முதல்வர் பயணம்: புதுக்கோட்டையிலும், பட்டுக்கோட்டையிலும் நிவாரண உதவிகளை வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடுத்து ஹெலிகாப்டரில் நாகப்பட்டினம் சென்றார். ஆனால் அங்கு மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் இறங்க முடியவில்லை. அடுத்து திருவாரூருக்கும் செல்ல திட்டமிட்டிருந்தார் முதல்வர். ஆனால் அங்கும் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை.

இதைத் தொடர்ந்து திருவாரூர் நலத்திட்ட உதவிகளை காமராஜ், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் வழங்கினர். முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பயணித்த ஹெலிகாப்டர் திருச்சிக்கு திரும்பியது. இதனால் முதல்வரின் பயணம் பாதியில் ரத்து ஆனது.

 

 

Edappadi K Palaniswami Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment